Published:Updated:

பெண்களின் எதிர்பார்ப்பு, தி.மு.க அறிவிப்பு... மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டுறவு வங்கிகளில் இவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவுக்கு சாத்தியம்?

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமப்புற பெண்கள், சுயசார்போடு குடும்பத்தை வழி நடத்தவும், பொருளாதார ரீதியாக வெற்றிநடை போடவும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெரும் துணையாக திகழ்கின்றன. கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் இக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களால் சிறு தொழில்கள் செய்து இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இது பக்கபலமாக உள்ளது. இந்நிலையில்தான் கூட்டுறவு வங்கிகளில் இவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எந்தளவுக்கு சாத்தியம்? இது எந்தளவுக்கு இவர்களுக்கு பயன் அளிக்கும்? இதுகுறித்து சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் என்ன சொல்கிறார்கள்? இந்த தேடலில் இறங்கியபோது, பெண்களின் தனித்துவமான, ஓர் உயரிய குணம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

Rupee
Rupee
Photo: rupixen

தமிழ்நாட்டு பெண்கள், தங்களது குடும்பத்தை பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக வழிநடத்துவதில் வல்லவர்கள். இது, இன்று நேற்றல்ல... காலம் காலமாக இது தொடர்ந்து வருகிறது. இதனால்தான் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இப்படி பாடினார்.

``சேத்த பணத்த சிக்கனமா

செலவு பண்ண பக்குவமா

அம்மா கையிலே கொடுத்து போடு

சின்னக் கண்ணு

அவங்க ஆற நூறு ஆக்குவாங்க

செல்லக் கண்ணு'' எனப் பாடல் எழுதினார்.

ஆனால், காலப்போக்கில் ஆண்கள், தங்களது குடும்பத்துப் பெண்களிடம் பணம் கொடுத்து வைக்கும் பழக்கம் கைவிட்டுப்போனது. குடும்ப செலவுகள் ஒவ்வொன்றுக்கும் ஆண்களிடம் பணம் எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை உருவானது. இந்த குறையை போக்கும் விதமாகதான், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 8,000 -10,000 சுய உதவிக்குழுக்கள் இயங்குகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 12-20 பெண்கள் இடம்பெறுகிறார்கள். இக்குழுக்களுக்கு வங்கிகளில் 12% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகளில் பெண்கள் வட்டமாக அமர்ந்து, இந்த பணத்தை பிரித்துக்கொள்ளும் போது இவர்களின் முகங்களில் மகிழ்ச்சி தவழ்கிறது. சுய தொழில் மற்றும் தங்களது குடும்ப செலவுகளுக்கு இந்த பணத்தை இவர்கள் பயன்படுத்திக் கொண்டு, தவணை முறையில் கடனை திருப்பிச் செலுத்துகிறார்கள்.

இந்நிலையில்தான் தற்போது கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை ரத்து செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக பேச்சு நிலவுகிறது. இதுகுறித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு தலைவி திலகவதியிடம் பேசியபோது, ``எங்க ஊராட்சியில மட்டுமே மகளிர் சுய உதவிக்குழுக்கள் சுமார் 25 இருக்கு. ஒவ்வொரு குழுவும், அதுல உள்ள உறுப்பினர்களோ எண்ணிக்கையைப் பொறுத்து, கடன் வாங்கி, தேவைக்கேற்ப பிரிச்சி எடுத்துக்குறாங்க. இந்த பணம் இவங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கு. தங்களோட குடும்ப வாழ்வாதாரத்துக்காக, ஜூஸ் கடை, பெட்டிக்கடை, பஜ்ஜிக்கடை நடத்துறாங்க. கறவை மாடுகள் வாங்கி, பால் வியாபாரம் செய்றாங்க. புடவை வியாபாரம், மாவு அரைக்குற கடை எல்லாம் நடத்துறாங்க.

money
money
`கூட்டுறவு விவசாயக் கடன்கள் ரத்து தேர்தல் சுயலாபத்துக்கான அறிவிப்புதான்’ - ஸ்டாலின்

கொரோனாவுக்கு முன்னாடி வரைக்கும், எல்லா கடன்களையும் முழுமையாக திருப்பி செலுத்திட்டாங்க. தவணை தவறாமல் கடன்களை திருப்பி செலுத்துறதுல, ஆண்களை விட பெண்கள் ரொம்ப உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பாங்க. ஆனா துரதிர்ஷ்டவசமா, கொரோனா பிரச்னை ஆரம்பிச்ச பிறகு தொழில்கள் எல்லாம் முடங்கினதுனால, கடன்களை திருப்பி செலுத்த முடியாம ரொம்பவே சிரமப்பட்டுக்கிட்டு இருக்காங்க.

இந்த கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செஞ்சுதுனா, மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு மிகப்பெரிய உதவியா இருக்கும். கூட்டுறவு வங்கிகள்ல மட்டுமல்லாமல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்லயும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் வாங்கியிருக்காங்க. இதையும் தள்ளுபடி செய்யணும். இந்த விஷயத்துல அரசாங்கம், தயக்கம் காட்டக்கூடாது.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, பெரிய தொழில் அதிபர்களுக்கு எல்லாம் கோடிக்கணக்குல சலுகை கொடுக்குறாங்க. ஏழை மற்றும் நடுத்தர பெண்கள் தங்களோட சொந்த கால்ல நிக்கதான், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் வாங்கியிருக்காங்க. ரொம்ப நேர்மையாக கடன்களை திருப்பி அடைச்சிக்கிட்டு இருந்தாங்க. கொரோனாவுனாலதான் தவணை செலுத்த முடியாம திணறிக்கிட்டு இருக்காங்க. எங்களை கை தூக்கிவிடுறது, அரசோட கடமை’’ என்றார்.

மகளிர் திட்ட அலுவலர் ஒருவரிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, ``கடன் தள்ளுபடி பத்தி இதுவரைக்கும் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வரல. அரசு நினைத்தால் எல்லாமே சாத்தியம்தான். இது நியாயமான கோரிக்கைதான். ஆனா என்ன ஒண்ணுனா, கொரோனா சமயத்துலயும்கூட, பாவம், நிறைய பெண்கள் ரொம்ப படாத பாடு பட்டு தவணையை செலுத்தியிருக்காங்க'' என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
விவசாய கடன் தள்ளுபடி: `முன்பே அறிந்த ஆளுங்கட்சியினர்; அதிக போலி கடன்கள்!' - விவசாயிகள் சொல்வது என்ன?

இது ஒருபுறமிருக்க, கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சி அமைத்ததும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இந்த அறிவிப்பையும் எடப்பாடி பழனிசாமி கவனித்துக்கொண்டிருப்பார். நாளையே அவர் இந்த கடன்களை தள்ளுபடி செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில்தான் தற்போது, தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசியபோது, ``எங்க தலைவர் என்ன சொல்றாரோ, அதைத்தான் எடப்பாடி செஞ்சிக்கிட்டு இருக்கார். தி.மு.க ஆட்சிக்காலத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு நிறைய கடன் கொடுத்தோம். ஆனா அதுக்குப் பிறகு சரியா கொடுக்கப்படலை. ரொம்ப குறைஞ்சிடுச்சி. கொரோனா தொழில் முடக்கத்தால், அதையும்கூட திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்காங்க. அடுத்து தி.மு.க ஆட்சிதான். அது தெரிஞ்சதுனால, இதையும் தள்ளுபடி செய்யப்படும்னு அறிவிக்கப் போறார்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு