Published:Updated:

தேசிய திறனறியும் தேர்வு சர்ச்சை: `புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தமிழகத்தில் புகுத்துகிறதா?!'

தேர்வைக் கண்காணிக்கும் பொறுப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதன் மூலம், மாநிலக் கல்வியை மத்திய அரசு கல்வித்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

நேற்று முன் தினம் நடந்த தேசிய திறன் கண்டறியும் தேர்வு மூலம் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையைத் தமிழகத்தில் புகுத்த முயல்வதாகவும், தமிழக அரசு அமைதியாக இதை ஆதரிப்பதாகவும் ஆசிரியர்களும், பல்வேறு அமைப்பினரும் புகார் எழுப்பி வருகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை

ஏற்கெனவே, இல்லம் தேடி கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியதற்கு எழுந்த விமர்சனத்துக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மறுத்தார்.

தற்போது NAS (National Achievement Survey) எனும் தேசிய திறனறியும் தேர்வு மூலம் புதிய கல்விக் கொள்கையை புகுதியிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக இத்தேர்வு நடத்தப்பட்டு வந்தாலும், கொரோனா காலகட்டத்துக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தாண்டு இந்த தேர்வை நடத்த வேண்டாமென்று ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் நேற்று முன் தினம், தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் 3,5,8,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஆசிரியர்கள்,``மத்திய அரசு தன்னுடைய புதியக் கல்விக்கொள்கையைப் புகுத்த பலவகையிலும் முயன்று வருகிறது. குலக்கல்வியை அடிப்படையாக வைத்து இக்கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது என்பதால் தமிழகத்தில் சமூக நீதியில் அக்கறைகொண்ட கல்வியாளர்களும், அரசியல் அமைப்பினரும் எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக ஆட்சிக்கு வந்தபின்பு சமரசமாகி வருவதுபோல் நடந்து கொள்கிறது.

புதிய கல்விக்கொள்கை... அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திறனறியும் தேர்வானது நடைமுறையிலிருக்கும் நிலையில், இந்தாண்டு நடந்த தேர்வில் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை பள்ளியளவில் புகுத்துவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

குறிப்பாக இந்த தேர்வில், 'பெருந்தொற்று காலத்தில் ஆடுமாடுகளை மேய்க்க, வீட்டுவேலைகளைச் செய்ய கற்றுக் கொண்டாயா?' என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல, National Testing Agency எனும் தனி அமைப்பு மூலமாக சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பில் தேர்வு நடத்தப்பட்டதன் மூலம், மாநில அரசின் பாடத்திட்டப் பள்ளிகளை மத்திய அரசு பாடத்திட்டப் பள்ளிகள் கண்காணிக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, புதியக் கல்விக் கொள்கையில் தெரிவித்திருப்பதைப் போல், ஐ.ஏ.எஸ் அதிகாரியை கல்வித்துறை ஆணையராக அ.தி.மு.க அரசு கொண்டு வந்ததை, தி.மு.க-வும் தொடர்கிறது. இப்படி அமைதியாக ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்தேதான் தமிழக அரசு செய்து வருகிறது" என்றனர்.

இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயிலிடம் கேட்டோம், ``கொரோனா காலம் முடிந்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வந்திருக்கும் 3-ம் வகுப்பு மாணவரிடம் எந்த வகையில் கல்வி சம்பந்தமாகத் திறனறிய முடியும் என்பது தெரியவில்லை. ஒன்றாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கே வரவில்லை. அதனால், அந்த மாணவனுக்கு எழுத்து வடிவம் கூட சரியாகப் புரிந்திருக்காது. ஆன்லைன் வகுப்பும் அவனுக்கு இல்லை. அப்படியிருக்கும்போது அவனால் எப்படி இந்த தேர்வை எதிர்கொள்ள முடியும்?. அதனால், இந்தாண்டு திறன் கண்டறியும் தேர்வு நடத்த வேண்டாம் என்று கல்வித் துறை ஆணையரிடம் வலியுறுத்தினோம்.

ஆணையரும், நம் மாநிலத்துக்கு இந்த தேர்வு வேண்டாமென்று சொல்லி எழுதினார். ஆனால், 'மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை, குறிப்பிட்ட அளவு பள்ளிகளிலாவது இந்த தேர்வை நடத்துங்கள்' என்று கூறிவிட்டார்கள் என்று தெரிவித்தார். அப்படித் தேர்வு நடத்தப்படும் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கும் இதே பிரச்னை இருக்கிறது என்பதையும் தெரிவித்தோம். அதையும் மீறித் தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது.

ச.மயில்
ச.மயில்

இந்த தேர்வில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளைப் பார்க்கும்போது தேசிய கல்விக்கொள்கையைப் பரிசோதித்துப் பார்ப்பது போலிருக்கிறது. இந்த தேர்வைக் கண்காணிக்கும் பொறுப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதன் மூலம், மாநிலக் கல்வியை மத்திய அரசு கல்வித்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏற்கெனவே, இல்லம் தேடி கல்வி என்பதன் மூலம் புதிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டிருப்பதை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். அதைத் தமிழக அரசு நல்ல நோக்கத்துக்காகக் கொண்டு வந்தது என்று சொன்னாலும், பள்ளிகள் திறப்பதற்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும். இப்போது தொடங்கியிருப்பது மாணவர்களுக்குக் கூடுதல் சிரமத்தைக் கொடுக்கும்.

தமிழகத்துக்கென தனி கல்விக்கொள்கை உருவாக்குவோம் என்று சொன்ன தி.மு.க அரசு, தற்போது அமைதியாக இருக்கிறது. அப்படி இல்லை என்று சொன்னால் மத்திய அரசின் கல்விக்கொள்கை புகுத்தும் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழக அரசு தீவிரமான அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.

 ‘இல்லம் தேடி கல்வி’ சர்ச்சைகள் சரியா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு