Published:Updated:

ரூ.429 கோடி கணக்கில்காட்டாத பணம்! - காங்கிரஸின் டி.கே.சிவக்குமாருக்கு ஏன் இந்த நிலை?

எம்.குமரேசன்

ஹவாலா பணம் கடத்தும் கும்பலுடன் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். அதேபோல, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்துவிடாமல் இருக்க சிவக்குமார் பல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்து, பாரதிய ஜனதா கட்சி மீண்டும் அரியணை ஏறியது. தொடர்ச்சியாக, டி.கே.சிவக்குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

கடந்த 2017-ம் ஆண்டு டி.கே.சிவக்குமார் தன் மகளுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். கணக்கில் காட்டப்படாத ரூ.429 கோடி பணத்தை அங்கே முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்குத் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக வருமானவரித்துறை சொல்கிறது. இதே ஆண்டில் டெல்லி மற்றும் பெங்களூருவில் சிவக்குமாருக்குச் சொந்தமான 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத ரூ. 8.5 கோடி பணம் பிடிபட்டது. ஹவாலா கும்பலுடன் டி.கே.சிவக்குமாருக்குத் தொடர்பிருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக சிவக்குமார் மற்றும் டெல்லி கர்நாடக பவன் ஊழியர் ஹனுமந்தையா மீது வருமானவரித்துறை வழக்கு பதிய, அமலாக்கத்துறையின் பார்வை சிவக்குமார் மீது பதிந்தது.

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிவக்குமாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடைசியாக ஆகஸ்ட் 30-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப, மறுப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவக்குமார் தடை வாங்க முயன்றார். கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது. வேறு வழியில்லாமல் ஆகஸ்ட் 30-ம் தேதி அமலாக்கத்துறை முன் சிவக்குமார் ஆஜரானார். தொடர்ந்து, கைது நடவடிக்கைக்குள்ளானார். தற்போது, பெங்களூரு ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிவக்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவக்குமாரைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் முயன்றனர். ஆனால், போலீஸார் அனுமதிக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சியால் பழிவாங்கப்பட்டவன் நான். என் பாரதிய ஜனதா கட்சி நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், ''ராஜ்ய சபா தேர்தலின்போது குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பாரதிய ஜனதா கட்சி முயன்றது. குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பெங்களூருவில் தங்க வைக்க சிவக்குமார் உதவினார். இது ஒன்றுதான் சிவக்குமார் செய்த தவறு'' எனத் தெரிவித்துள்ளார்.

இற்கிடையே, சிவக்குமார் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''இந்த நாட்டில் சட்டத்தைவிட அரசியல்ரீதியாக எளிதாகப் பழிவாங்கலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.