ஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்திவரும் இவருக்கு சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் உள்ளன. பிரமாண்ட மாளிகையில் ஆசிரமம், முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பெங்களூரில் மிகப்பெரிய தொழில் நிறுவனம், உலக நாடுகளில் ஆசிரமங்கள் எனக் கல்கி பகவான் நடத்திவந்த நிறுவனங்களில் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை மறைத்ததாகவும் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த புகாரை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆறு நாள்கள் அந்தச் சோதனை நடைபெற்றது. அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து தற்போது, கல்கிக்குச் சொந்தமான 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வருமானவரித்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 907 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பினாமி தடுப்புச் சட்டத்தின் வாயிலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தங்களின் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்தந்தப் பகுதி சார்பதிவாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கி குடும்பத்தினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் ஹவாலா மூலம் பணமாற்றம் நடந்ததா என்பது குறித்து அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
