Published:Updated:

எடப்பாடி அடிக்கல் நாட்டிய பாலாற்று தடுப்பணை... கமிஷனுக்காக இடம் மாற்றப்பட்டதா?

பழைய சீவரம் - பழவேரி இடையே கட்டப்படும் தடுப்பணை
பழைய சீவரம் - பழவேரி இடையே கட்டப்படும் தடுப்பணை

2017, ஆகஸ்ட் 30-ம் தேதி வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், `பாலாற்றில் ஏழு இடங்களில் தடுப்பணை கட்டப்படும்' என்று அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த ஏழு தடுப்பணைகளில் ஒன்றுதான் பினாயூர்- உள்ளாவூர் இடையேயான தடுப்பணை.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பாலாற்றின் குறுக்கே பினாயூர்- உள்ளாவூர் இடையே தடுப்பணை கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உள்ளாவூர் பாலாற்றங்கரையில் அதற்கான பூமி பூஜையும் போடப்பட்டது. ஆனால், பூமி பூஜை போடப்பட்ட இடத்தில் தடுப்பணையைக் கட்டாமல் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே பழைய சீவரம் - பழவேரி இடையே தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் முன் தொடங்கப்பட்டு வேலைகள் வேகமெடுத்துள்ளன. இது காஞ்சிபுரம் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பினாயூர்- உள்ளாவூர்
பினாயூர்- உள்ளாவூர்

இதற்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் பாலாற்று பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதனிடம் இதுதொடர்பாகப் பேசினோம், ``பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் 50 ஆண்டுக்கால கோரிக்கை. ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி அரசு எங்கள் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுக்கொண்டே வந்தது. 2017-ம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லும்போது, பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பாக புதுப்பட்டினம் எனும் இடத்தில் முதல்வரை சந்தித்து தடுப்பணைக்காக மனு கொடுத்தோம். அதே ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், `பாலாற்றில் ஏழு இடங்களில் தடுப்பணை கட்டப்படும்' என்று அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த ஏழு தடுப்பணைகளில் ஒன்றுதான் பினாயூர்- உள்ளாவூர் இடையேயான தடுப்பணை.

2020 ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி, காணொலிக்காட்சி மூலம் உள்ளாவூரில் தடுப்பணை அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர். பல ஆண்டுக்கால எங்கள் கனவு நிறைவேறப் போகிறதென நாங்கள் மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே பொதுப்பணித்துறை எங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆமாம்! முதல்வர் அடிக்கல் நாட்டிய இடத்தில் தடுப்பணையைக் கட்டாமல் சுமார் 2 கிலோ மீட்டருக்கு முன்பே பழைய சீவரம் - பழவேரி பகுதியில் தடுப்பணை கட்டும் பணியை ஆரம்பித்தனர். அந்த இடத்தில் இருபுறமும் மலை இருக்கிறது. மலைக்கு வெளியேதான் கிராமங்கள் இருக்கின்றன.

காஞ்சி அமுதன்
காஞ்சி அமுதன்

மலையை கடந்து பினாயூர்- உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை கட்டினால்தான் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஊரும். காரணம் அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் 30 அடி ஆழம் வரை பாறைகள்தான். மேல் ஊற்று நீரில்தான் அங்கே விவசாயம் நடக்கிறது. அப்படி இருக்கையில், நீர் ஊற்றை அதிகப்படுத்தி விவசாயத்தை செழிக்கச் செய்ய வேண்டுமென்றால் உள்ளாவூரில்தான் அணை கட்ட வேண்டும். அதைவிடுத்து பழவேரியில் தடுப்பணையைக் கட்டுவது விவசாயிகளுக்கு முழுமையாகப் பலன் அளிக்காது

அரசு தரப்பிலோ, `உள்ளாவூர்- பினாயூர் பகுதி பள்ளமாக இருக்கிறது அங்கே தடுப்பணை கட்டுவதற்கு அதிகம் செலவாகும். எனவே அங்கு கட்ட முடியாது. பழைய சீவரத்தில் தடுப்பணையைக் கட்டி... அங்கிருந்து கால்வாய் அமைத்து தருகிறோம்' என்று சொன்னார்கள். `சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைப்பதற்கு தனி செலவு. அதனால் முழுமையான பயனும் கிடைக்காது. உள்ளாவூரில் உள்ள பள்ளம் இயற்கையான பள்ளம் கிடையாது. மணல் அள்ளுவதற்கு அனுமதிகொடுத்து பொதுப்பணித்துறை ஏற்படுத்திய பள்ளம்தான்.

விளக்க வரைபடத்துடன் விவசாயிகள் ஒட்டியுள்ள போஸ்டர்
விளக்க வரைபடத்துடன் விவசாயிகள் ஒட்டியுள்ள போஸ்டர்

2013-ல் சட்ட விரோதமாக அங்கு மணல் அள்ளப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்றம் அப்போதைய மாவட்ட ஆட்சியர் சித்திரசேனனை சஸ்பெண்ட் செய்தது. எனவே, அது அரசால் அரசின் பொறுப்பின்மையால் உருவான பள்ளம். எனவே, அதற்குத் தீர்வு கண்டு அந்த இடத்திலேயே தடுப்பணையைக் கட்டுங்கள்' என்று எங்கள் வாதத்தை இரண்டு கருத்துக் கேட்புக் கூட்டங்களில் எடுத்து வைத்தோம். ஆனால், எங்களது வாதங்களை மாவட்ட ஆட்சியர் பொன்னையா பொருட்படுத்தவே இல்லை. மூன்றாவது கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாகச் சில விவசாயிகளை சரிகட்டி ஒப்புதல் வாங்கிக்கொண்டனர். அதுமட்டுமல்லாது வி.ஏ.ஓ, ஆர்.ஐ உள்ளிட்ட அதிகாரிகள் மூலமாக சில விவசாயிகளிடம் இதற்கு ஆதரவாக கடிதம் எழுதி வாங்கி பணிகளை வேக வேகமாகச் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக இருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நேரு, `இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு தடுப்பணை வந்திருக்கிறது. அதை நாம் எதிர்த்தால் தடுப்பணை வராமலேயே போய்விடும். தடுப்பணை எங்கே வந்தால் என்ன நாம் வரவேற்போம்' என்கிறார். ஆனால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சண்முகமோ அரசு செய்வது தவறு என்கிறார். அப்படியெனில் நேருவையும் அவர் சார்பான விவசாயிகளையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம். இந்தத் திட்டத்தின் மதிப்பு 42 கோடி என்கிறார்கள். உள்ளாவூர் - பினாயூர் இடையே தடுப்பணை கட்டினால் அதிகம் செலவாகும். பெரியளவில் கமிஷன் அடிக்க முடியாது என்பதற்காகத்தான் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளார்கள்.

நேரு
நேரு

தங்களது சுயநலனுக்காக ஒருசிலர் அதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். நாங்கள் நடத்தவிருந்த விளக்கப் பொதுக்கூடத்துக்கு அனுமதி தர மறுத்தார்கள். ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை விவசாயிகளை அணிதிரட்டி தடுப்பணை கட்டும் இடத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தடுப்பணை பணியை நிறுத்தி வைத்திருந்தார்கள். இப்போது பணியை ஆரம்பித்துள்ளார்கள். சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் பொன்னையா திருவள்ளூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம்" என்றார் ஆவேசமாக.

பழைய சீவரம் - பழவேரி இடையே தடுப்பணை கட்டலாம் என்று அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நேருவிடம் பேசினோம், ``விவசாயிகள் கேட்கும் இடத்தில் தடுப்பணையை அமைத்தால் 110 கோடி ரூபாய் தேவைப்படும். கிட்டத்தட்ட மூன்று மடங்கு செலவு அதிகமாகும். `தடுப்பணையை உள்ளாவூரில் கட்டினால் என்ன நன்மை, பழவேரியில் கட்டினால் என்ன நன்மை?' என 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கூட்டி கலெக்டர் பொன்னையா விளக்கிப் படமெல்லாம் போட்டுக் காண்பித்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், `அரசாங்கம் தடுப்பணையை எங்கு கட்டச் சொல்கிறதோ அங்கேயே கட்டுங்கள்" என்றுதான் சொன்னார்கள். நான் மட்டும் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து வரும் இந்தத் திட்டத்தை நான் வரவேற்கிறேன்' என்வரிடம்,

``உள்ளாவூர் பினாயூர் இடையே தடுப்பணை கட்டினால்தான் அதனால் பலன் கிடைக்கும் என்று ஒரு தரப்பு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. உங்கள் மாநில செயலாளரும் அதை ஆதரிப்பதாகவும் சொல்கிறார் காஞ்சி அமுதன். ஆனால், நீங்களோ அரசு சொல்லும் இடத்தில் வருவதை வரவேற்கிறேன் என்கிறீர்களே எதனடிப்படையில்?" எனக் கேட்டோம், சட்டென்று கோபமானவர், ``எங்கள் மாநில தலைமைக்கு அதுகுறித்து நான் விளக்கிவிட்டேன். காஞ்சி அமுதனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. எங்களுடைய கருத்தை நாங்கள் சொல்கிறோம். அவ்வளவுதான். உங்களுக்கு வேறு ஏதாவது தகவல் வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்திடம் பேசிக்கொள்ளுங்கள்" என்றார்.

கலெக்டர் மகேஸ்வரி
கலெக்டர் மகேஸ்வரி

இந்த விஷயங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம், அனைத்தையும் கூர்ந்து கேட்டுக்கொண்டவர். ``கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளேன். இதுதொடர்பான விஷயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்தாலோசித்துவிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கிறேன்" என்று உறுதியளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு