Published:Updated:

கலெக்டர் பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன்... விலகினாரா... வீழ்த்தப்பட்டாரா?

Kannan Gopinathan IAS
Kannan Gopinathan IAS

கடந்த டிசம்பர் மாதம் எனது பணிக்கான பர்ஃபாமென்ஸ் மதிப்பெண் 10-க்கு 9.95 என நிர்வாகம் மதிப்பிட்டிருந்தது. ஆனால், உள்நோக்கத்துடன் என்மீது புகார் அளிக்கப்பட்டது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 33 வயதான இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன். யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலி மின்சார வாரியச் செயலராக இருந்தவர், தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Kannan Gopinathan IAS
Kannan Gopinathan IAS

காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட விவகாரத்தில், மக்களுக்குக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதால் ராஜினாமா செய்ததாக கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார். ஆனால், கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பின்போது நேரடியாகச் சென்று பணியாற்றினார்.

அது சம்பந்தமான தெளிவான தகவல்களை அரசுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், அரசு கொடுத்த பணிகளை உரிய காலத்தில் செய்து முடிக்கவில்லை என்றும் கடந்த ஜூலை மாதமே கண்ணன் கோபிநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அரசின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் சரியான பதில் அளிக்காமல் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, ராஜினாமா செய்து நாடகமாடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

IAS officer Kannan Gopinathan
IAS officer Kannan Gopinathan

அதிலும் காஷ்மீர் விவகாரத்தில் அரசு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே, ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளிக்காமல் ராஜினாமா நாடகம் ஆடுகிறார். அவரது ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அது கண்ணன் கோபிநாதனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இதுபற்றி கண்ணன் கோபிநாதனிடம் பேசினோம், "நான் இன்ஜினீயரிங் முடித்து மொபைல் பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது நொய்டாவில் சேரியில் உள்ள குழந்தைகளைப் படிக்கவைப்பதற்காக, ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த சேவையில் நானும் பங்கெடுத்தேன்.

IAS officer Kannan Gopinathan
IAS officer Kannan Gopinathan

அங்கு என்னைப்போலச் சேவைப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் கம்பெனியில் பணிபுரிந்த ஒருவரை, என் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தேன். ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டரானால் மக்களுக்கு அதிகமாகச் சேவை செய்யலாம் என்று என் மனைவி என்னை ஊக்குவித்தார்.

எனவே, எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஐ.ஏ.எஸ். ஆனேன். 2012-ல் ஐ.ஏ.எஸ். தேர்ச்சிபெற்று டெல்லியில் பயிற்சி பெற்றேன். அதன்பிறகு, மிசோரம் மாநிலத்தின் நாட்டியாவில் சப் கலெக்டராக இருந்தேன். அடுத்து, மியன்மர் பார்டர் பகுதியில் கலெக்டராக இருந்தேன். அதற்கடுத்து, மிசோரம் தலைநகர் அய்சாலில் கலெக்டராக இருந்தேன். அதற்குப் பின்பு, அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பு தாத்ரா நகர் ஹவேலியில் கலெக்டராக இருந்தேன். ராஜினாமா செய்வதற்கு முன்பு, தாத்ரா நகர் ஹவேலியில் மின்சார வாரியச் செயலர், கிராமப்புற மேம்பாட்டுச் செயலர் பொறுப்புகளை வகித்து வந்தேன்" என்றவர், அரசு தரப்பு புகாருக்கான விளக்கத்தைக் கூறினார்.

Kannan Gopinathan IAS
Kannan Gopinathan IAS

``தேர்தல் சமயத்தில் காங்கிரஸிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்ட ஒருவர், தேர்தல் விதிமுறையை மீறியதற்காக அவருக்கு நான் நோட்டீஸ் கொடுத்தேன். அதைத் தொடர்ந்து, எனது பணி சரியில்லை என்று நிர்வாகம் மெமோ அளித்தது. கடந்த டிசம்பர் மாதம் எனது பணிக்கான பர்ஃபாமென்ஸ் மதிப்பெண் 10-க்கு 9.95 என நிர்வாகம் மதிப்பிட்டிருந்தது. ஆனால், உள்நோக்கத்துடன் என்மீது புகார் அளிக்கப்பட்டது.

ஐஏஎஸ் படிக்க விரும்புறீங்களா... அரசு வழங்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

எனக்கு அப்போதைய உயர் அதிகாரி, தேர்தல் கமிஷன் என்பதால் அவர்களிடம் முறையிட்டேன். அவர்கள் குழு அமைத்து என்மீது தவறில்லை என சான்று அளித்தனர். அது, எனக்குப் பின்விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தபடியே கலெக்டர் பதவியிலிருந்து என்னை நீக்கினார்கள்.

Kannan Gopinathan
Kannan Gopinathan

இது, பெரிய பிரச்னைக்கான மறுவடிவம் என்பதை அதன்மூலம் உணந்துகொண்டேன். நான், எனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு, பணியிலிருந்து விலகிவிட்டேன். ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டதா, இல்லையா என்பதுபற்றி நான் ஃபாலோ செய்யவில்லை. அதுபற்றிக் கவலைப்படவும் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு