Published:Updated:

கன்னியாகுமரி: சாலைகளில் ஓடிய வெள்ளம்; மேலும் 2 நாள்கள் கனமழை! - வீடு வீடாக எச்சரிக்கும் போலீஸார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மழை காரணமாக இரணியல் வள்ளியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்
மழை காரணமாக இரணியல் வள்ளியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. சாலை, ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளிலுள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக மழை விட்டு விட்டுப் பெய்துவருகிறது. மாவட்டத்தின் அனைத்து அணைகளும் குளங்களும் கடந்த மாதமே நிரம்பிவிட்டன. ஆனாலும் விடாமல் மழை பெய்ததால் உபரிநீர் கடலுக்குச் சென்றுகொண்டிருந்தது. நேற்று அதி தீவிரமான கனமழை பெய்ததால் மாவட்டமே சின்னா பின்னமானது. மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 செ.மீ., 15 செ.மீ என அதிக அளவு மழை பதிவானது. இதனால் மாவட்டத்தின் அனைத்துக் குளங்களிலும் அதிகப்படியான வெள்ளம் மறுகால் பாய்ந்து செல்கிறது.

வேம்பனூர், புத்தேரி, மேற்கு நெய்யூர் உள்ளிட்ட பெரிய குளங்களின் கரை உடைந்ததால் வயல் வெளிகளிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்தன. பத்துக்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டன. அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லவும் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

மூழ்கிக்கிடக்கும் ரயில் தண்டவாளம்
மூழ்கிக்கிடக்கும் ரயில் தண்டவாளம்

தோப்பூர் ஜங்ஷனில் வெள்ளம் பெருகியதால் ராஜாக்கமங்கலம், ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனை இருக்கும் கோட்டையைச் சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பத்மநாபபுரம் தனித்தீவுபோல மாறியது. பெத்தேல்புரம் - மேற்கு நெய்யூர் சாலை, திக்கணங்கோடு - திங்கள்நகர் சாலை என முக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பல பகுதிகளில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மழையால் பழைய வீடுகள் இடிந்துவிழும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாகர்கோவில் பழையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, ஒழுகினசேரி பகுதியில் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஒழுகினசேரி பகுதியிலுள்ள அப்டா மார்க்கெட் முழுவதும் தண்ணீர் புகுந்தது. மேலும் தனியார் கார் ஷோ ரூமுக்குள் தண்ணீர் புகுந்ததால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புதிய பல கார்கள் தண்ணீரில் மிதந்தன. அவை பழுதானதால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

மழையால் சாலையில் பாய்ந்தோடும் வெள்ளம்
மழையால் சாலையில் பாய்ந்தோடும் வெள்ளம்

நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதைகள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கருங்கல் அருகே வட்டவிளைப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News Today: கனமழை: கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளைச் சூழ்ந்தது மழை வெள்ளம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னும் இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கும் மாவட்டம் மேலும் இரண்டு நாள் மழைக்குத் தாக்குப்பிடிக்குமா என்ற அச்சம் மக்களுக்கு எழுந்திருக்கிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

மழையால் இடிந்த வீடு
மழையால் இடிந்த வீடு

அதன் ஒரு பகுதியாக ஆற்றங்கரைப் பகுதிகள், தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும் முயற்சி நடைபெற்றுவருகிறது. காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களைப் பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லும்படி வலியுறுத்திவருகின்றனர். காலை நிலவரப்படி 19 முகாம்களில் சுமார் 560 பேர் தங்கவைக்கப்பட்டனர். மாலையில் முகாம்களின் எண்ணிக்கை 39-ஆக அதிகரிக்கப்பட்டது. இப்போது முகாம்களில் 1,200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் கூடுதல் முகாம்களை ஏற்படுத்தி மக்களைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு