Published:Updated:

சிதம்பரத்தை திடீரென விமர்சிக்கும் கராத்தே தியாகராஜன்! - என்ன காரணம்?

``காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு ஸ்டாலினும், சிதம்பரமும் ஏன் பதில் அளிக்கவில்லை'' என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
Vikatan

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் (அமித் ஷா) அதைச் சாத்தியப்படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை மிக அற்புதமாக இருந்தது. இப்போது அமித் ஷா யாரென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்ணன் போன்றவர்கள்" என்றார். ரஜினியின் இந்தப் பேச்சு அரசியலில் விவாதப் பொருளாக மாறிவிட்டது.

ரஜினி- அமித் ஷா
ரஜினி- அமித் ஷா

இந்த நிலையில், ரஜினியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். அதில், ``மோடியையும், அமித் ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜுனர் என்றும் ரஜினி சொல்கிறார். ஆனால், இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் கூறுகிறார். மோடியும், அமித் ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள், இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல. பலகோடி மக்களின் உரிமைகளைப் பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும். தயவுசெய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள்" என்று ரஜினியை சாடியிருந்தார் அழகிரி.

இந்த விமர்சனத்துக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கவில்லை. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``மகாபாரதத்தை முதலில் ரஜினி படிக்கட்டும் என்கிறார் கே.எஸ்.அழகிரி. காஷ்மீர் பிரச்னையில் மோடி-அமித் ஷாவை ரஜினி புகழ்ந்ததை ப.சிதம்பரமும், மு.க.ஸ்டாலினும் ஏன், எதுவும் சொல்லமாட்டேன்கிறார்கள்? அவர்களை பேசச் சொல்வாரா அழகிரி" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சிதம்பரம்
சிதம்பரம்

சிதம்பரத்துக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள பதிவு குறித்து கராத்தே தியாகராஜனிடம் பேசியபோது,``மகாபாரத்தை படிங்கன்னு அழகிரி கேள்வி கேட்கிறார். அன்று ஒரு மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் ரஜினிகாந்த் பேசுகிறார். 2 கிலோ மீட்டர் தூரத்தில் மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுகிறார். அப்போது ரஜினி பேசியது குறித்து ஏன் அவர் பேசவில்லை. ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார். ரஜினி பேசியது தப்புன்னு அழகிரி, ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோர் பேசுகிறார்கள். ஸ்டாலின் ஏன் பேசாமல் இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஸ்டாலினும், சிதம்பரமும் கருத்து சொல்ல வேண்டுமல்லவா? காங்கிரஸில் இரண்டு கருத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புபனேஸ்வர் கலித்தா உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்துதானே பேசுகிறார்கள். இதைப் பற்றி அழகிரி சொல்ல வேண்டியதுதானே? அண்ணாமலை சைக்கிள் சின்னத்தைப் போட்டுதானே அழகிரி எம்.எல்.ஏ ஆனார். இல்லேன்னு அவரை சொல்லச்சொல்லுங்க பார்க்கலாம்" என்றார்.

கே.எஸ்.அழகிரி- கார்த்திகேயன்
கே.எஸ்.அழகிரி- கார்த்திகேயன்

ரஜினியின் பேச்சு குறித்து கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளாரே என்று கேட்டபோது, ``அவருக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சிதம்பரம் ஏன் பேசவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி" என்று முடித்துக்கொண்டார்.