Published:Updated:

``தாமதமாகக் கருத்து சொல்வதுதான் ரஜினி ஸ்டைல்!'' - சாத்தான்குளம் விவகாரம் பற்றி கராத்தே தியாகராஜன்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

``ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். சாத்தான்குளம் சம்பவம் பற்றி ரஜினிகாந்த், ட்விட்டரில் தாமதமாகப் பதிவிட்டிருக்கிறார் என்றால், இது அவருடைய ஸ்டைல்!'' என்கிறார் ரஜினியின் நெருங்கிய நண்பரான கராத்தே தியாகராஜன்.

`நெருப்புடா.... நெருங்குடா...' என்ற வரிகளுக்கேற்ப ரஜினிகாந்த், எதைத் தொட்டாலும் பரபரப்பு நெருப்பு பற்றி எரிகிறது. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு இணைய உலகின் கடும் விவாத அலைகளை எழுப்பிவருகிறது.

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு எதிராக ரஜினிகாந்த் கண்டனக் குரல் எழுப்பவில்லை என்று தொடர்ச்சியாக சிலர் விமர்சித்துவந்தனர். இதையடுத்து, `குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தாக வேண்டும்' என்று ரஜினிகாந்த், சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட, `இத்தனை காலதாமதத்துக்குப் பிறகு ஏன் இந்த ஆவேசம் ரஜினிக்கு' என்ற ரீதியில், ரஜினிகாந்த்தின் ட்விட்டர் பதிவை அக்குவேறு ஆணிவேராகக் கழற்றியெடுத்து விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்து வியாபாரம் செய்துவந்ததாகக் கூறி, கடந்த மாதம் 19-ம் தேதி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் கைதுசெய்தது காவல்துறை. விசாரணைக்குப் பிறகு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இவ்விருவரும் 22 மற்றும் 23-ம் தேதி என அடுத்தடுத்த நாட்களில் மர்மமான முறையில் மரணமடைந்தனர். இதையடுத்து, இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தானே முன்வந்து எடுத்து விசாரித்துவந்தது.

இதையடுத்து, காவல்துறையினர் மிகக் கொடூரமாகத் தாக்கியதாலேயே தந்தை - மகன் இருவரும் ரத்தம் சிந்த துடிதுடித்து இறந்தனர் என்ற தகவல் வெளிவர ஆரம்பித்தது. எனவே, போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறை, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என அனைவரும் ஊடகம் வழியே தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர். நாடு முழுக்க பரவலாக எழுந்த இந்த அழுத்தங்களையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்தது தமிழக அரசு.

எதிர்க்கட்சிகளோ, `வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்; குற்றவாளிகளை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. இதற்கிடையே, இறந்துபோனவர்களின் மத அடையாளத்தை வைத்து, ஆதரவு - எதிர்ப்பு `அரசியல்'களும் அரங்கேற ஆரம்பித்தன.

இப்படி, `சாத்தான்குளம் படுகொலைச் சம்பவம்' நாடுமுழுக்க பற்றி எரிந்துவந்த நிலையில், இந்த வழக்கு குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாஜிஸ்திரேட் பாரதிதாசனை பணியில் இருந்த காவலர்கள் அவமரியாதையாக நடத்தியதாக, அடுத்த பரபரப்பு புகார் எழுந்தது.

ரஜினிகாந்த் ட்வீட்
ரஜினிகாந்த் ட்வீட்

இந்த நிலையில்தான், நடிகர் ரஜினிகாந்த் இந்தச் சம்பவம் குறித்த தனது கருத்தை ஆவேசப் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், `தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாகக் கிடைத்தே ஆகவேண்டும்; விடக்கூடாது' என்று கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த்தின் இந்த ஆவேசப் பதிவைத்தான் நெட்டிசன்கள் தற்போது பிரித்து மேய்கிறார்கள்.

அதாவது, `கடந்த காலங்களில் காவலர்கள்மீது கை வைத்தால், கடுமையாகத் தண்டிக்கணும்' என்று பாய்ந்துவந்து கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், இன்றைக்கு அதே காவலர்கள் செய்த கொடூரக் கொலைக்கு எதிராக உடனடி கண்டனம் தெரிவிக்காமல், இத்தனை நாள் மௌனம் காத்தது ஏன்? பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஓர் இரங்கல் தெரிவிக்கக்கூட மனமில்லையா?

வட இந்திய நடிகர் - நடிகையரே சாத்தான்குளம் படுகொலையை உடனடியாகக் கண்டித்துவிட்டனர். ஆனால், தமிழ்நாட்டிலேயே இருக்கக்கூடிய ரஜினிகாந்த்துக்கு இந்த சம்பவத்தைக் கண்டிக்க இத்தனை நாள் தேவைப்பட்டதா?

சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கேட்கும் வகையில், `ஜஸ்டிஸ் ஃபார் ஜெயராஜ் அண்ட் பென்னிக்ஸ்' (#JusticeforJayarajAndFenix) என்ற ஹேஷ்டேக், உலகம் முழுக்க இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த நேரத்தில், பிரச்னையின் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கில், `#சத்தியமா_விடவே_கூடாது' என்ற புதிய தமிழ் ஹேஷ்டேக்கை பொதுப்படையாக உருவாக்கி பிரச்னையை ரஜினிகாந்த் திசைதிருப்புவது ஏன்?' என அடுத்தடுத்த அதிரடி கேள்விகளால் திணறடித்துவருகின்றனர்.

இந்த நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவின் பின்னணி குறித்துப் பேசுகிற தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா,

``மறைந்துபோன பென்னிக்ஸ், அவருடைய ஃபேஸ்புக் பதிவில், தி.மு.க-வை எதிர்த்து நிறைய பதிவிட்டிருக்கிறார். கருத்தியல் ரீதியாக எங்களுக்கு எதிராகப் பேசியிருந்தாலும்கூட, கொல்லப்பட்ட அந்த இளைஞர் மற்றும் அவரது தந்தையின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சட்டப் போராட்டம், அரசியல் போராட்டம், களப் போராட்டம் நடத்திவருகிற இயக்கம் தி.மு.க.

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

`பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்' என்பதற்காக இந்தப் போராட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து, ஓர் இயக்கமாக மாற்றியமைத்தது தி.மு.க. ஓர் அரசியல் இயக்கமாக, எதிர்க்கட்சி என்ற பொறுப்புணர்வோடு இப்படியான ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் மட்டும்தான் நாங்கள் இயங்க முடியும். மாறாக, பிரச்னையை மடை மாற்றம் செய்யவோ அல்லது 10 நாட்களாகத் தூங்கிவிட்டு, திடீரென எழுந்துவந்து கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதோ எங்கள் வேலை அல்ல.

100 நாள் நடைபெற்றுவந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, கடைசி நாளில் போய் நின்று `என்ன பிரச்னை...' என்று கேள்வி கேட்ட ரஜினிகாந்த், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது நிகழ்ந்த சம்பவத்துக்கு `யூனிஃபார்ம் போட்ட காவல்துறையினர் மீது கைவைத்தால்...' என்றெல்லாம் கொதித்த ரஜினிகாந்த், சாத்தான்குளம் சம்பவத்துக்கு மட்டும் 10 நாள்களாக உட்கார்ந்து யோசித்து, எல்லோரும் கேள்விகள் கேட்டபிறகு இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இதற்கிடையே, `பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார்' என்று கராத்தே தியாகராஜனும் ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார்.

ஏற்கெனவே, காவிரிப் பிரச்னைக்காக ஒரு கோடி ரூபாயைத் தருகிறேன் என்ற ரஜினிகாந்த், இதுவரை ஏதாவது கொடுத்திருக்கிறாரா? அவ்வளவு ஏன்... அவருடைய மகள் கல்யாணத்துக்காக ரசிகர்களுக்கு சாப்பாடு போடுவேன் என்றார், சாப்பாடு போட்டாரா? ஆக, ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகரை வெறும் நடிகராக மட்டும் பார்க்காமல், `ரஜினி வந்து எங்களைக் காப்பாற்றுவார்' என்று அதீத கற்பனையோடு பார்ப்பதால்தான் இதுபோன்ற கேள்விகளே வருகின்றன. ஆனால், எப்படிப் பார்த்தாலும் கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த், திரும்பத் திரும்ப அம்பலப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தை முன்வைத்து, ஓர் அரசியலைச் செய்ய வேண்டுமென பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றது. ஆனால் ரஜினிகாந்த்தோ, ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால் என்ற வகையில், மதில்மேல் பூனையாக நின்றுகொண்டிருக்கிறார்.

மண், மக்கள், இன உரிமை, சமூக நீதி, மாநில சுயாட்சி என அரசியலுக்கான பட்டியலில் ஒவ்வொன்றுக்கும் ரஜினிகாந்த்தின் கருத்து என்ன? இதற்கெல்லாம் முதலில் அவர் ஒரு பதில் சொல்லட்டும். அதுவரையில், பொதுமக்களைப் பற்றிய சிந்தனையோ அல்லது அரசியல் - சமூக சிந்தனையோ இல்லாத, இன்னும் அரசியல் கட்சி எதையும் தொடங்காத ஒரு நடிகரின் இதுபோன்ற கருத்துகளையெல்லாம், காமெடியாக மட்டுமே பார்க்கிறேன்'' என்றார்.

சாத்தான்குளம்: `நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி அளித்துள்ளது!’ - உயர் நீதிமன்றம்

இதையடுத்து, ரஜினிகாந்த் மீதான விமர்சனங்களுக்குப் பதில் கேட்டு, ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான கராத்தே தியாகராஜனிடம் பேசினோம்...

``ரஜினிகாந்த், எந்தவொரு கருத்தை முன்வைத்தாலும் அதில் உறுதியாக நிற்பார். சாத்தான்குளம் சம்பவத்தில், சிபிஐ விசாரணை வேண்டும் என்று முதலில் சொன்ன மு.க.ஸ்டாலின், 2 நாள் கழித்து, `சிபிஐ விசாரணை வேண்டாம்' என்று பின்வாங்கிவிட்டார். அவரைப்போல் பின்வாங்குபவர் அல்ல ரஜினி.

கடந்த மார்ச் மாதம் சி.ஏ.ஏ பிரச்னையின்போதும்கூட தன் வீட்டுக்கே உலமாக்களை வரவழைத்துப் பேசி, `டெல்லியில் உளவுத்துறை ஃபெயிலியராகிவிட்டது' என்ற தனது கருத்தை வெளிப்படையாக அறிவித்தவர்தான் ரஜினி. தன் மனதுக்கு சரியென்று தோன்றுவதை அல்லது தவறு என்று தெரிவதை மிகவும் தைரியமாகச் சொல்லக்கூடியவர். ஸ்டாலின்போல், ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு அதிலிருந்து பின்வாங்க மாட்டார்.

கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்

4 நாட்களுக்கு முன்பே, ஜெயராஜ் மனைவி மற்றும் மருமகன் அகஸ்டின் ஆகியோரிடம் தொலைபேசி வழியாக ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தது உண்மை. மேலும், அவர்களிடம் இச்சம்பவம் குறித்து விரிவாகப் பேசி விசாரித்தார். அதன்பிறகே, ட்விட்டரிலும் தனது கருத்தைப் பதிவிட்டார். தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் இந்த விஷயம் குறித்துப் பேசிவந்தாலும்கூட, ரஜினிகாந்த் பதிவிட்ட ஹேஷ்டேக்தான் பொதுமக்கள் மத்தியில் போய்சேர்ந்திருக்கிறது. இணையத்திலும் ட்ரெண்டாகிவருகிறது."

ஏன் இவ்வளவு காலதாமதமாக கருத்து சொல்லியிருக்கிறார் ரஜினி என்று கேட்டால், ``ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இது, ரஜினியின் ஸ்டைல் `சத்தியமா விடவேகூடாது' என்ற ஹேஷ்டேக்கை ரஜினிகாந்த் உருவாக்கியிருக்கிறார் என்றால், அது அவருடைய தனிப்பட்ட ஸ்டைல். ஏன் அப்படி உருவாக்கினார் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. ரஜினிகாந்த், என்ன சொன்னாலும் அது உலக அளவில் வைரலாகிவிடுகிறது. அதனால், அவரை எதிர்த்து எதையாவது பேசவேண்டும் என்பதற்காக இணையத்தில் 30, 40 பேர்களை வைத்து செய்தி கிளப்பிக்கொண்டிருந்தால், முகம் தெரியாத அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது'' என்றார் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு