Published:Updated:

பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை!- ரெய்டால் டி.ஐ.ஜி. ரூபாவின் புகார் நிரூபணம்

பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆயுதங்கள், போதைப் பொருள்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் கர்நாடக உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்
பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்

பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று நடந்த சோதனையில் கைதிகளின் அறைகளிலிருந்து ஆயுதங்கள், போதைப் பொருள்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு இந்தச் சம்பவம் ஒன்றும் புதியது அல்ல.

பறிமுதல் செய்த ஆயுதங்கள்
பறிமுதல் செய்த ஆயுதங்கள்
பிரபாகரன் செ

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீரென மேற்கொண்ட ஆய்வின்போது, கைதிகள் சிறை விதிகளை மீறி, செல்போன், தனி சமையல் அறை, கட்டில் மற்றும் தலையணைகள், டிவி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகக் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டதோடு, சொகுசு வாழ்க்கையைச் சிறையில் அனுபவிக்க, சசிகலா தரப்பு ரூ.2 கோடி ரூபாய் சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியதாக டிஜிபி சத்தியநாராயணாவுக்குப் புகார் தெரிவித்தார். அப்போது அந்த சம்பவம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்தப் புகார் மனுவில், துரதிர்ஷ்டவசமாக டிஜிபி சத்ய நாராயணாவுக்கும் பங்கு இருப்பதாக ரூபா தெரிவித்தது கர்நாடக உள்துறையை அதிர வைத்தது.

Vikatan

இது குறித்து அப்போதைய கர்நாடக அரசு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் தனி நபர் விசாரணைக்கு உத்தரவிட்டது. வினய்குமார் விசாரணை அறிக்கையில், சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், கண்காணிப்புக் கேமராக்கள் இயங்கவில்லை என்றும், சிறை விதிமுறைகளை மீறி கைதிகள் செல்போன், போதைப்பொருள்கள் பயன்படுத்தியதை உறுதி செய்தார். மேலும், சசிகலா தரப்பு சிறையில் சலுகைகள் பெற, ரூ.2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியது தொடர்பாக, கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மைத் தன்மை தெரியவரும் என்றும் வினய்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டதால், சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கியது உண்மையா என்று கர்நாடக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Vikatan

தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் கைதிகள் அறைகளில் ஆயுதங்கள், போதைப் பொருள்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அன்று டிஐஜி ரூபா தெரிவித்த குற்றச்சாட்டுகள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.