Published:Updated:

`அது 14 வருடத்துக்கு முந்தைய புகைப்படம்!' -மோடி குப்பை சேகரித்த காட்சி; கண்டனத்துக்கு ஆளான கார்த்தி

கார்த்தி வெளியிட்ட புகைப்படம்
கார்த்தி வெளியிட்ட புகைப்படம்

கார்த்தி சிதம்பரம் பதிவிட்ட புகைப்படம் ஸ்காட்லாந்தில் உள்ள, Fife நகர் வெஸ்ட் சேன்ட்ஸ் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக மாமல்லபுரம் வந்திருந்தார். கோவளத்தில் தாம் தங்கியிருந்த ஹோட்டலின் பின்புறம், கடற்கரையில் நடைப்பயிற்சி சென்றபோது, அங்கே குவிந்துகிடந்த குப்பைகளை அகற்றினார். பிளாஸ்டிக் பையில் சேர்ந்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்தார். தன் ட்விட்டர் பக்கத்தில் குப்பை சேகரிக்கும் வீடியோவைப் பதிவேற்றி, `மக்கள் பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும்' என்று பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

குப்பை சேகரிக்கும் மோடி
குப்பை சேகரிக்கும் மோடி

பிரதமர் மோடி வருகையையொட்டி, கடந்த சில நாள்களாகக் கோவளம் கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், அங்கே குப்பைகள் சேர்ந்தது எப்படி என்ற கேள்வி பரவலாக எழுந்தது. சோஷியல் மீடியாவில் பிரதமருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து பரவியது.

இதற்கிடையே, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி, `கோவளம் கடற்கரையில் மோடி குப்பை சேகரித்தது திட்டமிட்டு படமாக்கப்பட்ட நிகழ்வு' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், மோடி குப்பை சேகரிக்கும் காட்சியைப் படமாக்குவதற்கு வந்த குழுவினர் என்று ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டு, `ஜெய்ஸ்ரீராம்' என்று கார்த்தி குறிப்பிட்டிருந்தார். கார்த்தி சிதம்பரத்தின் ட்விட்டை 2,300 பேர் லைக் செய்திருந்தனர். 800 முறை ரீட்விட் செய்யப்பட்டது. ஆனால், படக்குழுவில் பெரும்பாலோனோர் வெளிநாட்டு முகங்களாக இருந்ததால் இந்தப் புகைப்படம் சந்தேகத்தைக் கிளப்பியது.

தவறான புகைப்படத்தை வெளியிட்ட கார்த்தி
தவறான புகைப்படத்தை வெளியிட்ட கார்த்தி

ஆராய்ந்ததில், கார்த்தி பதிவிட்ட புகைப்படம் ஸ்காட்லாந்தில் உள்ள Fife நகர் வெஸ்ட் சேன்ட்ஸ் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. புகைப்படத்தில் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்போல தெரிந்தது, அங்குள்ள செயின்ட் ரூல்ஸ் கோபுரம் ஆகும்.

டே ஸ்க்ரீன் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த படக்குழுவினர் இவர்கள். ஸ்காட்லாந்து நாட்டில் டன்டி நகரில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஸ்காட்லாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளில் அரசுத் துறைகளுடன் கைகோத்து செயல்படும் மீடியா நிறுவனம் இதுவாகும். கார்த்தி பதிவிட்ட புகைப்படம் 2005-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. சோஷியல் மீடியாவில் பலரும் உண்மையை உடைத்ததையடுத்து, தவறான புகைப்படங்களைப் பகிர்ந்துவிட்டதாக அடுத்து ஒரு ட்வீட்டைப் பதிவிட்டார் கார்த்தி சிதம்பரம்.

அடுத்த கட்டுரைக்கு