Election bannerElection banner
Published:Updated:

கரூர்: 'சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை!' - கலங்கும் நாடகக் கலைஞர்கள்

நாடகக் கலைஞர்கள்
நாடகக் கலைஞர்கள் ( நா.ராஜமுருகன் )

பாரம்பர்யக் கலையைக் காக்க வேண்டும் என்று நினைக்கும் சிலர் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதால், எங்கள் பிழைப்பு இழுத்துப் பிடித்து நடந்துவந்தது. ஆனால், இந்த கொரோனாவும், அதைத் தொடர்ந்த திருவிழா தடையும் எங்கள் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கிவிட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா பரவல், எல்லா நாடுகளிலும் பரவி, உலகையே ஓர் உலுக்கு உலுக்கிக்கொண்டிருக்கிறது. இன்னமும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை. இதனால், பலரும் தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்து, வருமானத்துக்கு வழியின்றி, வாழ்வாதாரம் இழந்து, தவித்துவருகின்றனர். அப்படி, கரூர் மாவட்டத்திலுள்ள 500-க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள், வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்துக்கு வழியின்றி அல்லாடிவருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக, கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் நடந்தால்தான், தங்களுக்கு அங்கே நாடகம் நடத்த வாய்ப்பு கிடைக்கும் என்று கண்ணீரோடு தெரிவிக்கிறார்கள்.

தங்கள் நிலையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு, கரூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கோரியுள்ளனர். கரூர் நாடக நடிகர் சங்கத்தினர் இசைக்கருவிகளை வாசித்தும், எமதர்மன், நாரதர் உள்ளிட்ட வேடமிட்டும், கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்கள் கோரிக்கை மனுக்களைப் போட்டனர்.

கரூர்: அடைக்கப்பட்ட சாலை; திறக்காத நகராட்சி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்த இளைஞர்கள் போராட்டம்
பேட்டியளிக்கும் செல்வராஜ்
பேட்டியளிக்கும் செல்வராஜ்
நா.ராஜமுருகன்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த, கரூர் நாடக நடிகர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், ``தற்போது தமிழ்நாட்டில், 50 சதவிகித அனுமதியுடன் திரையரங்குகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருமண நிகழ்ச்சிகளுக்கும் நூறு பேர் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களை நம்பி கடந்த ஆண்டு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் திருவிழாவுக்குத் தடை என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

எனவே, 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து கரூர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்தோம். புகார்ப் பெட்டியில் கோரிக்கை மனுவை வைத்துவிட்டுச் செல்கிறோம். ஏற்கெனவே, திருவிழாக்களில் ரெக்கார்டு டான்ஸ், ஆர்க்கெஸ்ட்ரா அதிகம் நடத்தப்படுவதால், நாடகங்களைப் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. இருந்தாலும், பாரம்பர்யக் கலையைக் காக்க வேண்டும் என்று நினைக்கும் சிலர் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதால், எங்கள் பிழைப்பு இழுத்துப் பிடித்து நடந்துவந்தது. ஆனால், இந்த கொரோனாவும், அதைத் தொடர்ந்த திருவிழாத் தடையும் எங்கள் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. அதனால், விரைந்து எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு