Published:Updated:

திசைமாறும் வைகோ விவகாரம் முதல் வைத்திக்கு தண்ணிகாட்டிய பன்னீர் வரை கழுகார் அப்டேட்ஸ்...

கழுகார் அப்டேட்ஸ்: `மெயில் செக் செய்யவும்!’ - கழுகாரிடமிருந்து குறுந்தகவல் வந்தது... சுடச்சுடத் தகவல்களை அனுப்பியிருந்தார் கழுகார்.

அரசு வழக்கறிஞர் பதவிக்கு 40 லட்டுகள்...
கடுப்பில் மாவட்டச் செயலாளர்!

தென்மாவட்டம் ஒன்றில் அரசு கூடுதல் சிவில் வழக்கறிஞர் பதவிக்கு தலா 40 லட்டுகள் வீதம் கறந்துவிட்டாராம் `நாயகர்.’ குறிப்பாக, முருகனின் மனைவி பெயரைக் குறிக்கும் ஊரில், மாவட்டச் செயலாளரின் பரிந்துரையையும் தூக்கி வீசிவிட்டு, லட்டுகள் தந்த நபரை அரசு வழக்கறிஞராக நியமிக்கவைத்ததில் கடுப்பில் இருக்கிறது மா.செ தரப்பு.

பணம்
பணம்

``எவ்வளவு பெரிய பொறுப்புல இருந்துக்கிட்டு, உள்ளூர் கான்ட்ராக்டுல இருந்து கம்பெனி சி.எஸ்.ஆர் ஃபண்ட் வரைக்கும் மனுஷன் கையைவெக்குறாரு...” என்று அறிவாலயம் வரை புகார் பறந்திருக்கிறது!

பன்னீரின் தனி ஆவர்த்தனம்...
மாட்டிக்கொண்ட நிருபர்கள்!

வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடுவதில் எடப்பாடி பழனிசாமி ஸ்கோர் செய்ததால், தன் பங்குக்கும் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத்த பன்னீர், நவம்பர் 12-ம் தேதி வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். முன்னதாக, வெள்ள பாதிப்புகளை எடப்பாடி பார்வையிட்டபோது, பத்திரிகையாளர்களுக்கு அவர் எந்தெந்த இடங்களைப் பார்வையிடவிருக்கிறார் என்கிற தகவல் மட்டுமே போனது.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

ஆனால், பன்னீர் தரப்பிலோ பத்திரிகையாளர்களை வேன் வைத்து அழைத்துச் சென்றார்கள். அப்போது வேறு `பீட்’ பார்க்கச் சென்ற சில நிருபர்களையும் “தலைவா... வாங்க... வண்டியில ஏறுங்க...’’ என்று ஆள்வைத்து கடத்தாத குறையாக அள்ளிச் சென்றார்கள்... ``இவங்க அக்கப்போருல நாம சிக்கிட்டோமே!” என்று அலுத்துக்கொண்டே சென்றார்கள் பத்திரிகையாளர்கள்!

திசைமாறும் வைகோ - தி.மு.க எம்.எல்.ஏ விவகாரம்...
முற்றுப்புள்ளிவைக்க ஆளுங்கட்சி தீவிரம்!

சங்கரன்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ ராஜாவை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மிரட்டியதாகக் கிளம்பிய விவகாரம் இன்னும் ஓயவில்லை. ராஜபாளையத்திலுள்ள அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் மகாசபை சார்பாக சங்கரன்கோவில் நகரம் முழுவதும் ‘சாதிய காழ்ப்புணர்ச்சியால் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜா எம்.எல்.ஏ-வைத் தரக்குறைவாக வைகோ பேசியதைக் கண்டிக்கிறோம்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

வைகோ
வைகோ

இந்தப் பிரச்னை வேறுவிதமாக திசை திரும்பியிருப்பதால், அதிர்ச்சியடைந்த ஆளும் தரப்பு, உளவுத்துறை மூலம் பிரச்னையை ஆரம்பத்திலேயே தீர்த்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாகியிருக்கிறது. விரைவில் ராஜாவின் தோளில் வைகோ கைபோட்டுச் சிரிக்கும் காட்சி காணக் கிடைக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

காத்திருந்த வைத்தி...
கடுக்காய் கொடுத்த பன்னீர்!

நவம்பர் 10-ம் தேதி பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்துகொள்வதாக இருந்தது. நிகழ்ச்சிக்கு முன்னதாக விடுதி ஒன்றில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை அவர் சந்தித்துப் பேசவிருந்தார். சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், தஞ்சாவூரிலுள்ள பன்னீரின் ஆதரவாளர்களுக்கும் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

பன்னீர்
பன்னீர்

ஆனால், திடீரென ‘உடல்நிலை சரியில்லை’ என்று கூறி, தனது வருகையை ரத்து செய்துவிட்டார் பன்னீர். இதையடுத்து, ``அவருக்காக இறங்கி வேலை செஞ்சா, இப்ப நமக்கே தண்ணி காட்டுறாரே!” என்று புலம்புகிறது வைத்தி தரப்பு!

தேடல் குழுவில் பாலகுருசாமி...
அதிருப்தியில் தி.மு.க அனுதாபிகள்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கிருஷ்ணன், திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அதனால் கடந்த சில மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் எம்.ராஜேந்திரன், டாக்டர் மருதமுத்து ஆகியோரைக்கொண்ட துணைவேந்தர் தேடல்குழுவை தமிழக அரசு நியமித்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியைத் தேடல்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டு தமிழக அரசு நியமித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மிஸ்டர் கழுகு: தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குக் குறி - காய்நகர்த்தும் மூத்த அமைச்சர்...

“நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பது, இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது, தமிழக அரசை விமர்சிப்பது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கல்விப் பிரிவுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவது... என தீவிரமாக இயங்கிவரும் பாலகுருசாமியை எப்படி எந்த எதிர்ப்பும் இல்லாமல் தமிழக அரசு நியமித்தது?” என்று பொங்குகிறார்கள் தி.மு.க அனுதாபிகள்!

முதல்வரின் கோபம் தணியுமா?
சிறப்பு பூஜை செய்த அனிதா!

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது முதல்வர் அதிருப்தியில் இருப்பதால், முதல்வரின் நண்பரான திருச்செந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மூலம் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அனிதா.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இதற்கிடையே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 6-ம் நாளான சூரசம்ஹாரத்தன்று, தனக்கு எந்த ரூபத்திலும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்று சிறப்பு பூஜைகளையும் செய்திருக்கிறார் அனிதா. முதல்வரின் கோபம் தணியுமா என்றுதான் தெரியவில்லை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.டி., அமலாக்கத்துறை ரெய்டு...
கைவிரித்த டெல்லி பெண் பிரமுகர்!

கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர் ஒருவர் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டில் சிக்கியது தெரிந்த விஷயம். இதன் தொடர்ச்சியாக, வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் ரெய்டுக்கு வரப் போகிறார்கள் என்கிற தகவல் முன்னாள் அமைச்சர் தரப்பினரைக் கலங்கடித்ததாம்.

அனல் பறக்கும் அறிவாலயம் முதல் அமமுக கொடிக்குத் தடைவிதித்த சசிகலா வரை! - கழுகார் அப்டேட்ஸ்

இதையடுத்து, அமைச்சர் தரப்பினர் டெல்லிக்குச் சென்று பெண் பிரமுகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், பெண் பிரமுகர் தரப்போ ``என் கையில ஒண்ணும் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டது. முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஊர் திரும்பியவர்களிடம் லோக்கல் பெண் பிரமுகர் ஒருவர், ``கவலைப்படாதீங்க... நான் பேசிப் பார்க்குறேன்!” என்று ஆறுதல் சொல்லியிருக்கிறாராம்!

பயிர் சேத ஆய்வுக்குழு
ஏன் மிஸ்ஸானது எம்.ஆர்.கே பெயர்?

டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்களை ஆய்வு செய்ய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் ஆறு அமைச்சர்கள்கொண்ட குழுவினரை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்தக் குழுவில் முக்கியமாக இடம்பெறவேண்டிய விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் பெயர் மிஸ்ஸிங்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Photo: Vikatan / Muthukumar.A

ஏற்கெனவே, இரண்டு முறை நெஞ்சுவலிக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனவர், சமீபத்தில் மூன்றாவது முறையாக அட்மிட் ஆனதால், அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் முதல்வர். ஆனால் அமைச்சர் தரப்போ, ``உடல்நிலையைக் காரணம் காட்டி, ஓரங்கட்டுறாங்களே...” என்று புலம்புகிறதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு