Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: ஊரடங்குக்கு மாற்று.. பரவலைக் கட்டுப்படுத்த மூன்றுகட்ட திட்டங்களை அறிவித்த கேரளா!

கேரள தலைமைச் செயலாளர் வி.பி.ஜோய்
கேரள தலைமைச் செயலாளர் வி.பி.ஜோய்

தொடர் கோவிட் பரிசோதனை, தடுப்பூசி, கடுமையான கட்டுப்பாடுகள் ஆகிய மூன்றையும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகக் கேரளம் முன்வைக்கிறது.

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. கேரளத்தில் நேற்று (ஏப்.15) மட்டும் 8,126 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,94,808 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 8,915 பேர் மருத்துவமனையில் குவாரன்டைனில் இருக்கிறார்கள். கடந்த சில தினங்களில் 20 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். கேரளத்தில் இதுவரை கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,856-ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கேரள மாநில தலைமைச் செயலாளர் வி.பி.ஜோய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கொரோனா பரவலைத் தடுக்க லாக்டெளன் அறிவிக்க வேண்டிய நிலை இப்போதைக்கு இல்லை. கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி கொரோனா பரவலைத் தடுக்கத் தீர்மானித்திருக்கிறோம்.

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து

பொதுமக்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுயமாகவே கடைப்பிடிக்க வேண்டும். கோவிட் பரிசோதனை, தடுப்பூசி, கடுமையான கட்டுப்பாடுகள் ஆகிய மூன்றையும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளாக கேரளம் முன்வைக்கிறது. கடந்த காலங்களைவிட பரிசோதனைகளை இப்போது அதிகரித்துள்ளோம். முதல்வர் அறிவுறுத்தலின்பேரில் டெஸ்ட்டிங் முகாம்களை உடனடியாக நடத்தவிருக்கிறோம். அதன்படி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டரை லட்சம் பேருக்கு கோவிட் டெஸ்ட் நடத்தவிருக்கிறோம். குறிப்பிட்ட நபர்களிடமிருந்து சாம்பிள் எடுத்து டெஸ்ட் செய்தால்தான் கூடுதல் பலன் கிடைக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அதிக அளவில் சாம்பிள் எடுக்க தீர்மானித்திருக்கிறோம்.

covid-19 vaccine | கொரோனா தடுப்பூசிகள்
covid-19 vaccine | கொரோனா தடுப்பூசிகள்

45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றாலும், அவர்களில் முன்களப் பணியாளர்கள், மக்களுடன் அதிக தொடர்பில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்களில் பப்ளிக் டிரான்ஸ்போர்ட், ஹோட்டல் பணியாளர்கள் போன்ற மக்களுடன் அதிக தொடர்பில் இருக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும். இந்தச் சோதனை பிரசாரம் மூலம் கொரோனா பாசிட்டிவ் உள்ளவர்களைக் கண்டுபிடித்து குவாரன்டைனில் வைத்தால் பரவல் தடுக்கப்படும்.

அடுத்ததாக, தடுப்பூசி பிரசாரம் நடத்தவிருக்கிறோம். முதற்கட்டமாக ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்ஸினேஷன் செய்துள்ளோம். நமக்குக் கிடைத்த மொத்தமுள்ள 60 லட்சம் வாக்ஸினேஷன் டோஸ்களில் 7,25,300 டோஸ்கள் கையிருப்பு உள்ளன. வாக்ஸினேஷன் சப்ளையைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் அதிகம் பேருக்கு வாக்ஸினேஷன் செலுத்தப்படும். கேரளம் ஜீரோ வேஸ்டேஜில் வாக்ஸினேஷன் செய்திருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோல் செய்ததில்லை.

வி.பி.ஜோய்
வி.பி.ஜோய்

மூன்றாவதாக, பொதுமக்கள் கூடுவதைத் தடுக்கக் கடும் கட்டுப்பாடுகள் குறித்து சில தீர்மானங்கள் எடுத்துள்ளோம். அதன்படி இண்டோர் நிகழ்ச்சிகளில் 75 நபர்களும், வெளி நிகழ்ச்சிகளில் 150 பேரும் கலந்துகொள்ள வேண்டும். மிகவும் அத்தியாவசியம் என்றால் மட்டுமே ஆட்கள் கூடும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பெரும்பாலும் ஆன்லைன் நிகழ்ச்சிகளையே நடத்த வேண்டும் எனப் பல கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளோம். அரசு என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், மக்கள் சுயமாக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களைக் கடைபிடித்தால் கொரோனா பரவலைத் தடுக்கலாம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு