Published:Updated:

கொரோனா யுத்தம்... கற்றுத்தருகிறது கடவுளின் தேசம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் பினராயி விஜயன்
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் பினராயி விஜயன்

கொரோனா வருகைக்கு முன்பே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா எடுக்க ஆரம்பித்தது.

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தொற்றுக்கு அதிகம் அச்சப்பட வேண்டிய முதல் மாநிலம் கேரளாதான். ஏனெனில், வெளிநாட்டில் வேலைசெய்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகம். அதனாலேயே கொரோனாவால் கேரளா அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக் கிறது. அதேசமயம், கொரோனா தொற்றைக் கட்டுப் படுத்துவதிலும் கேரளாவே முதன்மையாக இருக்கிறது.

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டது கேரளாவில்தான். முதன்முதலில் கொரோனா பரவிய சீனாவின் வூஹானிலிருந்து ஜனவரி இறுதியிலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் இரண்டு மாணவர்கள் கேரளா வந்தனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிஃபா வைரஸ் தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவம் இருந்ததால், கொரோனா வருகைக்கு முன்பே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா எடுக்க ஆரம்பித்தது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அச்சம் அதிகரித்துவந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேரளா மேற்கொண்டது.

கொரோனா யுத்தம்... கற்றுத்தருகிறது கடவுளின் தேசம்!

ஜனவரி 18 முதல் 22 வரை உலக சுகாதார நிறுவனம், இந்திய அரசு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை வழங்கிய அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல் களையும் அனைத்து மாவட்டங்களுடனும் கேரள அரசு பகிர்ந்துகொண்டது. எத்தகைய சவால் களையும் எதிர்கொள்ளும்வகையில் மாவட்ட அளவில் பொதுசுகாதார அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் பரிசோதனைப் பிரிவு, பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்தே தயார்நிலையில் வைக்கப்பட்டது. மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கண்காணிப்பு அறைகள் 24 மணி நேரமும் செயல்பட ஆரம்பித்தன. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளின் தனிமைப் பிரிவுகளில் கூடுதல் வசதிகள் செய்துவைக்கப்பட்டன.

பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட நிறுவனங்களை மூடுவதற்கு உத்தரவிட்ட முதல் மாநிலம் கேரளாதான். பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிறைக்கைதிகள் மூலம் முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இத்தகைய முன்தயாரிப்பு நடவடிக்கைகளால், கொரோனா தொற்று நோயாளிகளிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவுவது தடுக்கப்பட்டது. மேலும், ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்து பிப்ரவரி மூன்றாவது வாரத்திலேயே வீடு திரும்பினர்.

கொரோனா யுத்தம்... கற்றுத்தருகிறது கடவுளின் தேசம்!

பிரச்னை அத்துடன் முடிந்துவிடவில்லை. வெளிநாடுவாழ் இந்தியர்களை அதிகம்கொண்ட மாநிலம் என்பதால், பல்வேறு நாடுகளிலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் கேரளாவுக்கு வர ஆரம்பித்தனர். இதனால், இவர்களைக் கண்காணிப்பதற்கென்றே பிரத்யேகமாக துணை சுகாதாரக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, மாவட்ட ஒருங்கிணைந்த கண்காணிப்புத் திட்டக்குழு மேற்பார்வையிட தொடங்கியது.

இருந்தும், வெளிநாடுகளிலிருந்து வருபவர் களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கேரளா மாறியது. ஆனாலும், திறன்மிக்க நடவடிக்கைகளின் மூலம் கொரோனாவை கேரளா அரசு கட்டுப்படுத்திவருகிறது.

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தாலும், அதுபற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறது அ.தி.மு.க அரசு. கேரளாவில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளன.

முதல்வர் பினராயி விஜயனும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒன்றாக வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் உரையாடினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அனைத்துக் கட்சிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்றுமாறு வேண்டுகோள்விடுத்தனர். தமிழ்நாட்டிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்களா, அவர்களை அரசு பயன்படுத்துகிறதா என்பது தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனும் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா உள்ளிட்ட அமைச்சர்களும் தினமும் செய்தியாளர் களைச் சந்திக்கின்றனர். அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும் கொரோனா பாதிப்பு களையும் வெளிப்படையாகத் தெரிவித்து, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் முதல்வர் பினராயி விஜயன். இருபதாயிரம் கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டங்கள் முதல்வரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, 320 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள மகாராஷ்டிராவில் 12 பேரும், 86 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள மத்தியப் பிரதேசத்தில் ஆறு பேரும் மரணமடைந்துள்ளனர். ஆனால், 249 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள கேரளாவில் மூவர் மட்டுமே மரணமடைந்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் பினராயி விஜயன்
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் பினராயி விஜயன்

கீழ்மட்டம் வரை பொது சுகாதாரத்துக்கான அடிப்படைக் கட்டமைப்புகள், தொலைநோக்குப் பார்வை, சரியான திட்டமிடல், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் அசாதாரணமான இத்தகைய சவாலை நிதானமாகக் கையாண்டு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கேரளா முன்னேறிவருகிறது.

அரசு நிர்வாகம், அரசியல் இரண்டிலும் நம்மவர்கள் கேரளாவிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு