Published:Updated:

``காங்கிரசை கவர்ந்திழுக்கப் பார்க்கிறது சிவசேனா; ஒருபோதும் நடக்காது!'- கேரள காங்கிரஸ் தலைவர்

``பி.ஜே.பி.யுடன் உறவை முறித்த சிவசேனா காங்கிரசை கவர்ந்திழுக்க முயற்சி செய்கிறது. ஆனால் சிவசேனாவிற்கும் காங்கிரசுக்கும் ஒருபோதும் பொருந்தாது'' என்றார் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.

கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்
கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

மகாராஷ்டிரா மாநில தேர்தலில் பி.ஜே.பி., சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. அதே சமயம் ஆட்சி அமைக்கும் விஷயத்தில் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றுள்ள நிலையில் முதலமைச்சர் பதவியில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இரண்டரை ஆண்டுகள் அமர வேண்டும் என சிவசேனா கோரிக்கை வைத்துள்ளதுதான் பிணக்குக்கு மூலகாரணம்.

அரவிந்த் சவான்
அரவிந்த் சவான்

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இதற்காக சிவசேனாவைச் சேர்ந்த மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சர் அரவிந்த் சவான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதே சமயம் காங்கிரஸ் கட்சியுடன் பேசிவிட்டு சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ``சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இன்று சந்தித்துப் பேச உள்ளனர்.

கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்
கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

பி.ஜே.பியுடன் உறவை முறித்த சிவசேனா, காங்கிரசை கவர்ந்திழுக்க முயற்சி செய்கிறது. அது ஒரு போதும் நடக்காது. சிவசேனாவும் காங்கிரசும் ஒருபோதும் ஒத்துப்போகாது" என்றார். காங்கிரஸ் கட்சி சிவசேனாவுடன் நெருங்கும் சமயத்தில் கேரள காங்கிரஸ் தலைவர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருப்பது அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.