Published:Updated:

`` தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்..!” - சிதம்பரம் கைது குறித்து கிரண் பேடி

ஜெ.முருகன்
அ.குரூஸ்தனம்

''முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது வலிமையான பாடத்தைக் கற்றுக்கொள்ளும் விவகாரம்'' என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

P. Chidambaram
P. Chidambaram

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தவர், ப.சிதம்பரம். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற தனியார் நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை செய்துவந்தது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை.

Karti Chidambaram
Karti Chidambaram

கடந்த ஆண்டு, கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ. இந்நிலையில், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்ற துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம், புதுச்சேரி அரசின் அன்றாட நிகழ்வில் தலையிடக் கூடாது என்ற உத்தரவு தொடரும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்குப் பதில் அளித்தவர், ” வழக்கு, விசாரணையில் உள்ளதால், செப்டம்பர் 4-ம் தேதி மறு விசாரணை முடிவுவரும் வரை காத்திருப்போம்” என்றார்.

ப.சிதம்பரம் கைதுகுறித்த கேள்விக்கு, “ ப.சிதம்பரம் முன்னாள் உள்துறை அமைச்சராகவும் நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஆதாரம் இல்லாமல் சிபிஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்காது. சிபிஐ சமர்ப்பிக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் ஆய்வுசெய்த பின்புதான், பிணை வழங்கலாமா அல்லது வழங்கக்கூடாதா என்பதை முடிவு செய்வார்கள். இந்த விவகாரத்திலிருந்து வலிமையான பாடத்தை நாம் கற்கிறோம்.

Kiran Bedi
Kiran Bedi

இது, பாடம் கற்கும் விவகாரமாகவும் உள்ளது. மேலும், தலைமைப் பண்பு என்பது பதவி கிடையாது. அது ஒரு பொறுப்பு. அது வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கான நலன். மக்களுக்கான கணக்கைத் தொடங்குவதுதான் தலைமையின் பணியே தவிர, தனக்கான கணக்கை திறப்பது தலைமைப் பண்பு அல்ல. தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும். நன்மை செய்தால் அதற்கான வெகுமதியை இயற்கை தானாகவே வழங்கும்” என்று தெரிவித்தார்.