Published:Updated:

``20 நாள்களில் கிருஷ்ணா நதிநீர்!'' - சென்னையின் தாகம் தீர்க்குமா தெலுங்கு கங்கைத் திட்டம்?

இ.லோகேஷ்வரி

கண்டலேறு அணையிலிருந்து இன்னும் 20 நாள்களில் கிருஷ்ணா நதிநீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Kandaleru Dam
Kandaleru Dam

ஆந்திரா - தமிழக ஒப்பந்தத்தின்படி, சென்னையின் குடிநீர்த் தேவைக்குக் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின்மூலம் கிருஷ்ணா நதிநீர் ஒவ்வோர் ஆண்டும் 12,000 மில்லியன் கன அடி கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நதிநீர் பெறப்படவில்லை.

Krishna river
Krishna river

கடந்த 2017-18-ம் ஆண்டில், 2 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் மட்டுமே சென்னைக்கு வந்தது. ஆந்திராவிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழக அரசுதான் உரிய நீரைக் கேட்டுப் பெற வேண்டும். ஆனால், தண்ணீர் விஷயத்தில் அரசு மெத்தனப்போக்கையே கடைப்பிடித்து வருவதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ஜெயக்குமாருடன் அதிகாரிகள் குழு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திரா சென்றது. ஆந்திர மாநிலத்தின் சார்பில், பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், கிருஷ்ணா நதிநீரைத் தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்து மனு அளித்தனர்.

Tamil Nadu Ministers with Jaganmohan Reddy
Tamil Nadu Ministers with Jaganmohan Reddy

''ஆந்திர மாநில அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்'' என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார். இதையடுத்து, கண்டலேறு நீர்த்தேக்கத்துக்கு அதிகாரிகளை ஆய்வுசெய்ய அனுப்பினார் ஜெகன்மோகன். ஆந்திர பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொடுத்த அறிக்கையையடுத்து, கிருஷ்ணா நதிநீர் விரைவில் திறக்கப்படவிருக்கிறது.

''சென்னையின் குடிநீர்த் தேவைக்காக, இன்னும் 20 நாள்களில், கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது'' என ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டலேறு அணையின் நீர்மட்டம் அதிகரித்ததும், சென்னைக்குக் கிருஷ்ணா நதிநீர் கிடைக்கப்பெறும். கடந்த 10-ம் தேதி சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டலேறு அணைக்கு விநாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

Kandaleru Dam
Kandaleru Dam

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆனால், தற்போது 5 டி.எம்.சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு 8 முதல் 10 டி.எம்.சி-யாக அதிகரிக்கும்போது அங்கிருந்து பூண்டி ஏரிக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும்.

பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் மற்றும் வீராணம் ஏரியிலிருந்து 2004 முதல் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் நீர் பெறப்படுகிறது. இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி.

Krishna river
Krishna river

இந்த நீர்த்தேக்கங்களின் அளவுகள் மழையின் அளவைப் பொறுத்தே மாறுபடும். இந்த ஏரிகள் அனைத்தும் வறண்டுபோனதால், இந்தக் கோடையில், சென்னையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. கிருஷ்ணா நதிநீர் கிடைக்கப்பெற்றால், பூண்டி ஏரியில் நீர்வரத்து கிடைக்கப்பெறும். அதன்வாயிலாக, அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரும் உயரும்.

செண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு! தீர்வு என்ன? #DoubtOfCommonMan

கிருஷ்ணா நதிநீர் தங்குதடையின்றி பூண்டி ஏரியை வந்தடைய, கால்வாயில் வளர்ந்துள்ள புதர்கள் மற்றும் செடிகளை அகற்றிச் சீரமைக்கும் பணிகளில் தமிழக அதிகாரிகள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். கிருஷ்ணா நதிநீர் தமிழகம் வரவுள்ளதையடுத்து, ஆந்திர - தமிழக எல்லையான தாமரைக்குப்பம் பகுதியில் தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Tamil Nadu Ministers with Jaganmohan Reddy
Tamil Nadu Ministers with Jaganmohan Reddy

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அசோகன் இதுகுறித்துக் கூறுகையில், "'கண்டலேறு அணையிலிருந்து இன்னும் 20 நாள்களில் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. இந்தத் தண்ணீர் தங்குத்தடையின்றி பூண்டி ஏரியைச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்பேரில், இங்கு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்குத் தண்ணீர் வந்து சேர்ந்தால் சென்னையில் குடிநீர் விநியோகம் சீராகும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார். கண்டலேறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு 8 முதல் 10 டி.எம்.சி-யாக அதிகரிக்கும்போதுதான் சென்னைக்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரியவருகிறது.

Engineers inspects
Engineers inspects

ஆனால், தெலுங்கு கங்கை திட்டத்தின்படி, தமிழகத்துக்கு, ஒவ்வோர் ஆண்டும் 12,000 மில்லியன் கன அடி கொடுக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு தோராயமாக 2 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் மட்டுமே சென்னையை வந்தடைந்தது. அதை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் சென்னையின் தாகத்தை ஓரளவாவது தீர்க்க முடியும்.