Published:Updated:

``பா.ஜ.கவினர் என்னைக் குறி வைத்துக்கொண்டே இருக்கின்றனர்!" - வழக்கறிஞர் தீபிகா ரஜாவத்

கடந்த 19-ம் தேதி, இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் பகிர, அது இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்திவிட்டதாகவும், அதனால் அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் #Arrest_Deepika_Rajawat என்ற ஹேஷ்டேக் பரவியது.

``நான் மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறேன். எனக்கு பயமாக இருக்கிறது. இதற்காக இவர்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று நினைக்கவில்லை” - ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வழக்கறிஞர் தீபிகா ரஜாவத் இந்த வார்த்தைகளைச் சொல்லித்தான் அலைபேசி அழைப்பைத் தொடர்கிறார். இவர் 2018-ம் ஆண்டு கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக வாதாடியவர்.

கடந்த 19-ம் தேதி, இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் பகிர, அது இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்திவிட்டதாகவும், அதனால் அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் #Arrest_Deepika_Rajawat என்ற ஹேஷ்டேக் பரவியது. தவிர, அவர் வீட்டு முன்னால், விஷ்வ இந்து பரிஷத்தின் ஒரு பிரிவான பஜ்ரங் தல் அமைப்பைச் சேர்ந்த சிலர், முற்றுகையிடும் வரை இட்டுச் சென்றது. அவருக்கு தொடர்ந்து பல்வேறு வகையில் கொலை மிரட்டல்களும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

அப்படி என்ன இருந்தது அந்த கார்ட்டூனில்? துர்கா பூஜையன்று, பெண்களை கடவுளாக வழிபடுவதும், மற்ற நாள்களில் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்த அந்த கார்ட்டூனை பகிர்ந்து, `முரண்’ என்று குறிப்பிட்டிருந்தார் தீபிகா. இதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்துக்குள்ளும் வெளியிலும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இதுகுறித்து, அவரிடமே அலைபேசியில் பேசினோம்.

Deepika Singh Rajawat
Deepika Singh Rajawat
Photo: Facebook: Deepika Singh Rajawat

``நான் இன்று பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கும் அநியாயங்களுக்கும் அப்பாற்பட்டு எதுவும் பேசவில்லை; பகிரவில்லை! இது காலங்காலமாகப் பெண்களுக்கு நடக்கும் கொடுமை! மேலும், நானே இந்து மதத்தைச் சேர்ந்தவள்தான். நான் ஏன் இந்து மதத்துக்கு எதிராகப் பேசப்போகிறேன்? நான் யாருடைய மதநம்பிக்கையையும் புண்படுத்த நினைக்கவில்லை. இன்றைய சூழ்நிலை பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்பற்று, உரிமை பற்றிப் பேசமுடியாத நிலை இருக்கிறது. அதனால்தான் அந்த கார்ட்டூனைப் பகிர்ந்தேன். வேறு எந்த நோக்கமும் இல்லை” என்பவரிடம் தற்போது அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு, ``இந்த விஷயத்தில் காவல்துறை மிகவும் அலட்சியமாகச் செயல்படுகிறது. என் வீட்டின் முன் பலரும், ``உன்னுடைய மரணம் இந்த ஜம்மு காஷ்மீர் மண்ணில்தான் என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். நான் அப்போது, டி.சி.பி, டி.ஜி.பி, ஐ.ஜி.பி எனக் கிட்டத்தட்ட அனைவரையும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். டி.ஜி.பி என் அழைப்பை ஏற்று, இரண்டு காவலர்களை அனுப்பினார். ஆனால், அவர்களும் அவர்களைக் கலைந்துபோகச் சொல்லவோ, கைது செய்யவோ இல்லை. மாறாக, அவர்களிடம் மிகவும் தாழ்மையான குரலில் பேசினர். இதனால், எந்தப் பயனும் எனக்கில்லை. அவர்கள் காவலர்கள் இருக்கும்போதே, கோஷமிட்டுக்கொண்டே இருந்தனர். என் பாதுகாப்பிற்கென எந்தக் காவலர்களும் இல்லை. அவர்களுக்கு என் பாதுகாப்பின் மீது அக்கறை இல்லை.”, என்று கூறுபவர் இதற்குப் பின்னால் யார் செயல்படுகின்றனர் என்பதையும் விளக்குகிறார்.

``இந்த விஷயத்தில், பா.ஜ.க-வின் ஐ.டி பிரிவுதான் ட்விட்டரில் எனக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். பின்னர், செய்தி பரவி என் வீடுவரை வந்துவிட்டனர். நான் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டேன் என்று எப்போதும் குறி வைத்துக்கொண்டே இருக்கின்றனர். என்னை ஒழித்துக்கட்ட இன்று முடியாவிட்டாலும், வரும் காலங்களில் அவர்கள் திட்டமிட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். நான் பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கம் நின்று, நியாயம் கிடைக்குமாறு செய்தேன். ஆனால், நான் ஏதோ இந்து மதத்துக்கு எதிராகச் செயல்பட்டதுபோல அவர்கள் கருதுக்கின்றனர்” என்று தன் நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்துகிறார்.

பி.ஜே.பி
பி.ஜே.பி

``என்னுடைய கருத்தைத் திரித்து பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். என்னுடன் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்களே என் மீது வழக்கு தொடுக்கின்றனர். ஆனால், எனக்கு ஆதரவு அளிக்கும் வழக்கறிஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நானே ஒரு வழக்கறிஞர். நான் சட்டரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும் போராடத் தயாராக இருக்கிறேன். ஆனால், இவர்கள் சட்டவிரோதமாக என்னைத் தாக்க முயற்சி செய்கின்றனர். என்னை இந்து மதத்துக்கு எதிரானவளாகவும், இந்திய தேசத்துக்கு எதிரானவளாகவும் சித்திரிக்கின்றனர். இதுதான் என்னை மிகவும் அச்சுறுத்துகிறது.

இந்து மதத்தைப் பற்றி பேசுபவர்கள், இப்படி ஒரு பெண்ணின் வீட்டின் முன் நள்ளிரவு திரண்டு வரலாமா? பெண்களை இப்படி நடத்தச் சொல்லி இந்து மதம் போதிக்கவில்லை. இவை அனைத்தும், அவரவர் அரசியல் காரணத்துக்காகச் செய்யும் விஷயங்கள். இவர்கள் மதம் என்ற போர்வையில் இப்படிச் செய்கின்றனர்!” என்கிறவரிடம் இந்தச் சிக்கலை மேலும் எப்படி எதிர்கொள்ளவிருக்கிறார் என்று கேட்டோம்.

``தற்போது என்னுடைய பாதுகாப்பும், என் மகளின் பாதுகாப்பும்தான் மிகவும் முக்கியம். அதற்காக நான் எந்தக் கருத்திலிருந்தும் பின்வாங்கவில்லை. இதை மேலும் தவறான முறையில் சித்திரிப்பவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க விரும்புகிறேன். என்னால் தற்போது வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை. இந்தச் சர்ச்சைகளை அமைதியாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

மக்களை அடக்குவது, மிரட்டுவது, சர்வ சாதாரணமாகக் கொல்வது, பெண்களைப் பாலியல் வன்முறை செய்தவர்களுக்கு ஆதரவு அளிப்பது போன்ற போக்குகள் சமீபத்தில் மிக அதிக அளவில் நடக்கின்றன. இதற்கு முன்பாக இருந்த காங்கிரஸ் ஆட்சியில்கூட இத்தனை கொடுமைகள் நடந்ததாகத் தெரியவில்லை. நான் எந்தக் கட்சியிலும் எந்தத் தொடர்பிலும் இல்லை. ஆனால், நான் இதை உணர்ந்து சொல்கிறேன்.

நான் பொதுவெளியில்தான் இயங்குகிறேன். இதையும் நான் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்கிறார் உறுதியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு