Published:Updated:

கள்ளச்சந்தை சரக்கு பிஸினஸ்... ஊரடங்கு காலத்தில் கோடிகளில் `கூட்டு'க் கொள்ளை!

டாஸ்மாக்
டாஸ்மாக்

கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றிலிருக்கும் எலைட் டாஸ்மாக் கடைகளிலிருந்தும் 90 சதவிகித சரக்குகளைக் கைப்பற்றி பதுக்கிவிட்டனர்

இந்த ஊரடங்கு காலகட்டத்தைப் பயன்படுத்தி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் சரக்குகளைக் கள்ளத்தனமாக விற்பனை செய்தே மேற்கொண்டும் பல கோடிகளைச் சேர்த்திருக்கிறார்கள் கழகங்களின் புள்ளிகள் பலரும். இதன் மூலமாகப் புதிதாகக் கோடீஸ்வரர் ஆனவர்களும் உண்டு.

மார்ச் 24 அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட மறுநொடியில் ஆரம்பித்த இந்தக் கள்ளச்சந்தை, தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமே!

அதாவது, சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க இன்றுவரையிலும் அனுமதி தரப்படவில்லை. அதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சென்னையை ஒட்டியுள்ள பல பகுதிகளிலும் (சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள்) டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதையும்கூட தங்களுக்குச் சாதகமான அம்சமாக மாற்றிக்கொண்டுவிட்டது இந்தக் கள்ளச்சந்தைக் கும்பல். அங்கெல்லாமும் கள்ளச்சந்தைச் சரக்குகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

'' `ஊரடங்கு வரவிருக்கிறது' என்ற அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே, அதாவது மார்ச் 20-ம் தேதியிலிருந்தே டாஸ்மாக் சரக்குகளை பெட்டி பெட்டியாக வாங்கிப் பதுக்கிவைக்க ஆரம்பித்த இவர்கள், போலீஸ் மற்றும் கலால்துறையினரின் உதவியுடன் இன்றளவிலும் நடத்திக்கொண்டிருக்கும் கள்ளச்சந்தைக் கதைகள் சொல்லி மாளாது'' என்கின்றனர் திருப்போரூர் வாசிகள் சிலர்.

இது குறித்து அதே கழகங்களின் கண்மணிகள் நம்மிடம் நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். ''மார்ச் 22-ம் தேதி திருப்போரூரில் பார் நடத்திவரும் மூன்றெழுத்து அரசியல் புள்ளியின் இரண்டு மகன்களும், தாங்கள் பார் நடத்திவரும் டாஸ்மாக் கடைகளிலிருந்து பெரும்பாலான சரக்குகளை வாங்கிப் பதுக்கிவிட்டனர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றிலிருக்கும் எலைட் டாஸ்மாக் கடைகளிலிருந்தும் 90 சதவிகித சரக்குகளைக் கைப்பற்றி பதுக்கிவிட்டனர். இது போதாதென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24-ம் தேதி அன்று, ஐந்து வாகனங்களில் ஒவ்வொரு கடையாகப் புகுந்து புறப்பட்ட சுமார் 30 பேர் கொண்ட கும்பல், மொத்தக் கடைகளையும் சில மணி நேரத்தில் காலி செய்தன. சில இடங்களில் காவல்துறை ரோந்து வாகனங்களே இவர்களுடைய வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய கொடுமையும் நடந்தது'' என்று சொல்லி அதிர வைக்கிறார் கோவளம் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர்.

- கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்க ளுக்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் களத்தில் சுழல்கின்றன. 'கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்ற வேண்டும்' என்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் குரல் கொடுக்கிறார்கள். 'ஒன்றிணைவோம் வா' என்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதற்கு நடுவே, இந்த இரு கட்சியிலிருக்கும் பல முக்கியத் தலைகள் மாவட்டம்தோறும் 'களத்தில் கலக்குவோம் வா... ஒன்றிணைவோம் வா...' என்று கூட்டுப் போட்டுக்கொண்டு கள்ளத்தனமான பல்வேறு தகிடு தத்தங்களை அரங்கேற்றிக் கொண்டிருப்பது கொரோனாவினும் கொடிது!

- இன்னும் பல உதாரணங்களுடன் முழுமையான பின்னணி தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க > ஒன்றிணைந்த கழகங்களின் கண்மணிகள்... களைகட்டிய கள்ளச்சந்தை சரக்கு பிஸினஸ்... கோடீஸ்வரர்களாக்கிய கொரோனா! https://bit.ly/304Rpmy

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு