Published:Updated:

ஊருக்கு வெளியே உள்ளூர் அகதிகள்!

ஊருக்கு வெளியே உள்ளூர் அகதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஊருக்கு வெளியே உள்ளூர் அகதிகள்!

பெரும்பாக்கம் மட்டுமல்ல, செம்மெஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர் எனக் குடிசை மாற்று வாரியத்தின் மறுகுடியமர்வுப் பகுதிகள் எல்லாவற்றிலும் அடிப்படை வாழ்வியலுக்கான சிக்கல்கள் நிறைந்திருக்கின்றன.

ஊருக்கு வெளியே உள்ளூர் அகதிகள்!

பெரும்பாக்கம் மட்டுமல்ல, செம்மெஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர் எனக் குடிசை மாற்று வாரியத்தின் மறுகுடியமர்வுப் பகுதிகள் எல்லாவற்றிலும் அடிப்படை வாழ்வியலுக்கான சிக்கல்கள் நிறைந்திருக்கின்றன.

Published:Updated:
ஊருக்கு வெளியே உள்ளூர் அகதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஊருக்கு வெளியே உள்ளூர் அகதிகள்!
பெரும்பாக்கம்... நசுக்கப்பட்ட கனவுகளுடனும் மறுக்கப்பட்ட வாய்ப்புகளுடனும் துரத்தப்பட்ட சென்னையின் தொல்குடிகள் தனித்து விடப்பட்டிருக்கும் கான்கிரீட் தீவு. சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து பிரிந்து சில கிலோமீட்டர் தொலைவில் செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் நுழைந்ததும் வருகிறது பெரும்பாக்கம்.

சிறு சிறு ஜன்னல்களுடன் புறாக் கூண்டுகளைப் போல சாலையின் இருபுறமும் உயர்ந்து நிற்கின்றன அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஹாண்ட்பேக், கோணிப்பை என ஏதோவொன்றைச் சுமந்தபடி சாரி சாரியாக மக்கள் அந்தக் குடியிருப்பு களை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றனர். பிழைப்புக்காக சென்னை நகருக்குள் பயணம் செய்து திரும்பும் களைப்பும் அயர்ச்சியும் தேங்கியிருக்கின்றன அந்த முகங்களில். பெண்களின் நடையில் மட்டும் கூடுதல் அவசரம், இருள் சூழ்வதற்குள் நான்கு சுவர்களின் பாதுகாப்பு தேவைப்படுகிறது அவர்களுக்கு.

ஊருக்கு வெளியே உள்ளூர் அகதிகள்!

சென்னையின் மிகப்பெரும் குடிசைமாற்றுக் குடியமர்வான பெரும்பாக்கத்தில் 21,000 வீடுகள்.அதில் சுமார் 18,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கூடுதலாக அங்கு 1,152 வீடுகள் கட்டுவதாக பிரதமர் சமீபத்தில் அறிவித்திருக்கிறார், ஆனால் அங்கே ஏற்கெனவே குடியேறிவர்களின் கண்ணீர் துடைக்கத்தான் கரங்கள் இல்லை. இவர்கள் அனைவரும் சில ஆண்டுகள் முன்புவரை மத்திய சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?

இந்தப் பிரச்னையின் ஆரம்பம் 2015-ல் தொடங்குகிறது. அப்போது ஏற்பட்ட சென்னை வெள்ளத்திற்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே காரணம் என அவற்றை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒருபகுதியாக பல காலமாக அங்கு வசித்து வந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு நகருக்கு வெளியே பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்டனர். 14,257 குடும்பங்கள் கூவத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும் அதில் 6,879 குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டதாகவும் மாநகராட்சி சொன்னது.

ஊருக்கு வெளியே உள்ளூர் அகதிகள்!

ஆட்டோ ஓட்டுவது முதல், சிற்றுண்டிக் கடை போடுவது வரை சென்னையின் பெரும் மனித சக்தியாக விளங்கிய முறைசாரா தொழிலாளர் களைக் குப்பைகளென அள்ளிக் கொண்டுபோய் நகருக்கு வெளியே தனித்து விடுவதைத்தான் பல ஆண்டுகளாகவே ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லிச் செய்து கொண்டிருக்கிறது அரசு.

கோவிலில் வசிக்கும் குடும்பங்கள்
கோவிலில் வசிக்கும் குடும்பங்கள்

வாழ்வாதாரம் அற்ற, வசதிகளற்ற தீவில் விடப்பட்ட, நிலமிழந்த நகரத்து அகதிகளாக வாழ்கிறார்கள் அம்மக்கள். சமகாலத்தில் இப்படியொரு அடக்குமுறையை அதிகம் சந்திப்பது சென்னையின் பூர்வகுடிகள்தாம். போராட இயலாதவர்கள் வேறு வழியின்றி இடம்பெயர்ந்து அங்கும் வாழ முடியாமல் தவிக்கிறார்கள். தன் தாய் நிலத்தைக் கடைசியாக ஒருமுறை கண்ணீரால் ஈரமாக்க முயல்பவர்கள் சிலர் அரசாங்கத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். சென்னை சென்ட்ரல் அருகே கூவம் கரையோரம் இருக்கும் காந்தி நகர், அன்னை சத்தியவாணி முத்து நகர் மக்கள் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்து பெரும்பாக்கம் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து அரசாங்கத்திடம் போராடிவருகிறார்கள்.

அம்மக்களைச் சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தோம். காந்தி நகர் குடிசைப் பகுதிக்குள் நுழைந்ததும் ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டாள் ஒரு சிறுமி. “அக்கா இருக்கிற கோயிலையும் இடிக்க வந்திருக்கீங்களா?” தவிப்புடன் ஒலிக்கிறது அவள் குரல் . ‘இல்லை’ எனத் தலையாட்டியதும் பெருமூச்சோடு படபடவென்று பேசத் தொடங்கினாள், “நேத்து திடீர்னு அந்த ஆபீசர் மேடம் வந்து சொன்னதும், பெரிய பெரிய புல்டோசர் வண்டி வந்து வீடெல்லாம் இடிச்சிட்டாங்க அக்கா. பொருளையெல்லாம் எடுக்கக்கூட அம்மாவை விடல. இனிமே நாங்க இங்க தங்கக் கூடாதாம். ஊருக்கு ரொம்ப தூரத்துல புது வீடு தராங்களாம். ஆனா அங்க போனா இந்தமாதிரி ஸ்கூலில் படிக்கமுடியாது, வேலை போயிடும், கையில காசு இருக்காதுன்னு அம்மா அழுதாங்க. இப்போ நாங்க நாலு வீட்டுக்காரங்க இதோ இந்தக் கோயில்லதான் ஒண்ணா தங்கியிருக்கோம். இதையும் இடிக்கப்போறாங்களாம். நீங்க அதுக்குதான் ஆர்டர் போட வந்திங்கன்னு பயந்துட்டேன்” கண்கள் கலங்கின அவளுக்கு.

பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகள்
பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகள்

நம்மைக் கண்டு அங்கு வந்த சுனிதா பயமும் கலக்கமும் சேர்ந்து உடைந்த குரலில் பேசினார், “மூணு தலைமுறையா இங்க இருக்கவங்கதான் அதிகம். இந்த வூட்ட சுத்திதான் எங்க பொழப்பு இருக்கு. ஆம்பளைங்க எல்லாம் புதுப்பேட்டைக்கு மெக்கானிக் வேலை, ஆட்டோ ஓட்டுறது, கட்டட வேலைன்னு போவாங்க. நாங்க பொம்பளைங்க வீட்டு வேலை, டிபன் கடை போடுறதுன்னு ஏதாவது செய்வோம். எங்களுக்கு முன்ன அங்க பெரும்பாக்கம் போனவங்க எல்லாம் வேலை இல்லன்னு கிடந்து அல்லாடுறத பாத்துட்டு அங்க போக தைரியம் வரல. என் பொண்ணு ஸ்கூல் படிக்கிறா. அங்க பெருசா ஸ்கூல் வசதியும் இல்ல, இங்க மாதிரி பாதுகாப்பா அவளை விட்டுட்டு நான் வேலைக்குப் போறதும் ஆவாது. அங்க பொம்பளப் புள்ளைங்களுக்கு நெறைய கெடுதி நடக்குது மேடம். அங்க போனா புள்ள படிப்பை நிறுத்திட்டு சீக்கிரம் கட்டிக்கொடுத்துடணும்” தேம்பல்களுக்கு நடுவே திணறுகிறது குரல்.

அவர் விட்ட இடத்திலிருந்து அதே அழுகையுடன் தொடர்கிறார் செல்வி. “நாங்க இங்க இருந்து காலி பண்ண மாட்டோம்னு சொல்லல. அரசாங்கம் நல்லது பண்ணட்டும், எங்களுக்கு வீடு தரட்டும். ஆனா இங்க பக்கத்துல இருக்கிற காலனில கொடுத்தா எங்க பொழப்பு கெடாம இருக்கும். நான் ஹார்ட் பேஷன்ட் வேற. அங்கெல்லாம் போய்ட்டா நெஞ்சு வலி வந்து என்னைய இவ்ளோ தொலைவு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வரதுக்குள்ள நான் உயிரை விட்டிருவேனே. நாங்க செத்தா பரவால்லையா?” ஆற்றாமையும் கோபமும் அழுகையாக வெடிக்கிறது அவரிடத்தில்.

செல்வா, சுனிதா
செல்வா, சுனிதா

இவர்கள் சொல்வது முழுவதும் உண்மை என்கின்றன பெரும்பாக்கத்தின் கள நிலவரமும் அவற்றை ஆய்வு செய்து வெளியிடப்பட்ட அறிக்கைகளும். சமீபத்தில் IRCDUC எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் 2017-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுவரை சென்னையின் பல பகுதிகளிலிருந்து பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களில் 48% பேர் வேலையிழந்துள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. அங்கிருக்கும் 1,300 குடும்பங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவில், இந்தக் குடியிருப்பிற்கு வருவதற்கு முன் அம்மக்கள் 38 வகையான பணிகளில் ஈடுபட்டிருந்தனர் எனவும், அதில் 6% பேர் மட்டுமே வேலைவாய்ப்பின்றி இருந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

பெரும்பாக்கம் குடியிருப்பில் சிறு பெட்டிக்கடை வைத்திருக்கும் பாஸ்கரிடம் பேசினோம், “இங்கே ஹாஸ்பிடல் வசதி, ஸ்கூல் வசதி, வேலை, படிப்பு, பாதுகாப்புன்னு எல்லாமே சிக்கல்தான். சின்ன சுகாதார நிலையமிருக்கு. ஆனா டாக்டர் இல்ல. எங்க வீட்டுப் புள்ளைங்க பிரசவத்துக்குக் கூட சென்னைக்குத்தான் வரணும். போக வர செலவே 700 ரூபாயாகுது. 350 சதுர அடிக்கு வீடு, இப்பவே மழைக்கும் வெயிலுக்கும் செவுரெல்லாம் பூசம் பிடிச்சு உளுத்துப்போகுது” ஏதுமற்றவரின் விரக்தி அப்பிய குரலில் சொல்கிறார்.

பெரும்பாக்கம் மட்டுமல்ல, செம்மெஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர் எனக் குடிசை மாற்று வாரியத்தின் மறுகுடியமர்வுப் பகுதிகள் எல்லாவற்றிலும் அடிப்படை வாழ்வியலுக்கான சிக்கல்கள் நிறைந்திருக்கின்றன. இந்த மக்களுக்காக, ஆரம்பம் முதலே போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “தலித் மக்கள் ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்ட நிதியை முழுமையாகச் செலவழிக்காமல் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த மக்களுக்கு சென்னைக்குள்ளேயே வீடுகளைக் கட்டித் தருவதற்காவது அந்தப் பணத்தைப் பயன்படுத்தி யிருக்கலாம்” என்கிறார்.

இது இடம் பெயரப் போகிற வர்களுக்கான பிரச்னை மட்டுமல்ல, சென்னையின் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பான்மையானோர் இவர்கள்தாம். இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்துவது சென்னையின் இயக்கத்தையே நிறுத்த முனைவதற்கு சமம். சொந்த மக்களின் மீதே அரசும் அதிகார வர்க்கமும் சேர்ந்து புரியும் இந்தப் போர் ஒடுக்குமுறையின் உச்சம். நகரைக் கட்டியமைத்தவர்களையே நகருக்குப் பிரச்னை என நினைக்கும் அரசு எப்படி மக்களுக்கான அரசாகும்? அது போடும் நடை எப்படி வெற்றி நடையாகும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism