கொரோனா நெருக்கடி பல அசாத்தியங்களையும் அதிசயங்களையும் நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. அதோடு நம் கண் முன்னே இத்தனை ஆண்டுகள் நிலவிவந்தும் நாம் பார்க்க மறந்த, பார்க்க மறுத்த அவலங்களையும் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவிவரும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையே இந்தியச் சமூகம் இத்தனை ஆண்டுக்காலம் பார்க்க மறந்த அவலம். புலம்பெயர் தொழிலாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும் காட்சிகள் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை கால இடப்பெயர்வை நினைவுபடுத்துவதாக ஒப்பீடுகள் காட்டப்படுகின்றன.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 கோடிக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களிலிருந்து பிற இடங்களுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். இவர்களில் 5.6 கோடிப் பேர் பிற மாநிலங்களுக்குச் செல்பவர்கள். அதிகாரபூர்வ எண்ணிக்கை மட்டுமே இதுவென்றும், யதார்த்தத்தில் இதைவிடவும் அதிகமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் செல்வதும் டெல்லி, மும்பை, சூரத் போன்ற தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்தியாவில் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கிய புலம்பெயர்தல் சீராக அதிகரித்தே வருவதாகவும், அடுத்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை கிராமங்களை விடவும் நகரங்களிலே அதிகமாக இருக்கும் என ஐ.நா கணித்துள்ளது. ஆனால், நகரங்களுக்கு புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கட்டுமானம், தினசரிக் கூலி என முறைசாரா வேலைகளில் ஈடுபட்டு வருபவர்கள். நிலையான ஊதியம், பணி பாதுகாப்பு, சுகாதாரமான வாழ்க்கைச் சூழல் என்பது இவர்களுக்கு இருக்காது. சமூக இடைவெளி என்பது கூட இவர்களுக்கு ஓர் ஆடம்பரமே. நகரங்களில் அடர்த்தியான குடியிருப்புகளிலேயே இவர்களின் இருப்பிடம் அமைந்திருக்கும்.
சீர்திருத்தம் என்கிற பெயரில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பே இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகச் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பணிபுரியும் முறைசாரா துறைகளின் நிலை ஊரறிந்த அவலம்.
கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது முறைசாரா தொழில்களும் முடங்கிப்போயின. இதனால், இவர்களின் வேலை, ஊதியம் கேள்விக்குள்ளாகின. அவற்றை முறைப்படுத்த நம்மிடம் உரிய கட்டமைப்பும் இல்லை. ஊரடங்கு அமலுக்கு வர நான்கு மணிநேரம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. அன்றைய இரவே பொதுப் போக்குவரத்தும் முடங்கியது. இதனால் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பும் இல்லாமல் போயிற்று. கிடைத்த உதவிகளைப் பெற்றுக்கொண்டு சிறிது காலத்தைக் கழித்து வந்த தொழிலாளர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட நடைப்பயணமாகவே சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மார்ச் 31-ம் தேதி `சாலைகளில் எந்த தொழிலாளர்களுமே இல்லை, என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து தர வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. ஊரடங்கு நீட்டிக்கப்படுவதிலும் தெளிவில்லை, வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதம் இல்லை என்பதனால் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு திருப்பியனுப்ப வேண்டும், எனப் போராட்டங்களிலும் ஈடுபட ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து மாநிலங்களுக்கிடையே சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதியளித்தது.
அந்தப் பணிகள் தற்போது வரை இழுபறிகளுடன் நடைபெற்று வருகின்றன. ஆனால், அனைவருக்கும் ரயில்களில் பயணிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மத்தியப் பிரதேச எல்லையில் இருந்த காவல் தடுப்புகளைத் தகர்த்துவிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக செல்லும் காட்சிகளும் ஊடகங்கள் வழியாகப் பதிவாகின.

தொழிலாளர்கள் புலம்பெயர்வதற்கு அவர்கள் வசிக்கின்ற இடங்களில் உரிய வசதிகள் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். `சொந்த ஊர்களுக்குச் சென்றாலாவது பசியில்லாமல் இருக்கலாம்’ `கொரோனாவை விடவும் பஞ்சம் கொன்றுவிடும்’ என்று தொழிலாளர்கள் பேசிய கருத்துகளும் ஊடகங்களில் பதிவாகின. மத்திய அரசு அறிவித்த நிவாரண உதவிகளும் இவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய முறையில் சென்றடையவில்லை. வேலை செய்ய வந்த இடமென்றாலும் சொந்த ஊர்களைப்போல இருக்காது என்கிற உணர்வும் சுமைகளைக் கடந்தும் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்ல காரணமாக அமைகின்றன.
இத்தகைய இன்னல்களைச் சந்தித்த மக்கள் நிலைமை சீரான பிறகும் உடனடியாக வேலை பார்த்த இடங்களுக்குத் திரும்புவதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ``தொழில்கள் தொடங்க வேண்டும் என்பதால் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம்'' என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சிறப்பு ரயில்களை ரத்து செய்யப்போவதாகவும் கர்நாடக அரசு அறிவித்தது. பெரும் எதிர்ப்புகள் எழவே அந்த முடிவு கைவிடப்பட்டது.
தற்போது, தொழிலாளர்கள் நடைப்பயணமாக செல்வதை நிறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையை பல்வேறு உயர்நீதிமன்றங்களும் சுட்டிக்காட்டி கவனிக்கத்தக்க உத்தரவுகளையும் வழங்கியுள்ளன.
இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம் என்பது சரியாக வரையறுக்கப்படாமல் முறையாக அமல்படுத்தப்படாமலே உள்ளன. தற்போதைய தொழிலாளர்கள் நெருக்கடி இனிவரும் காலங்களிலாவது முறைசாரா துறைகளில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிய விவாதங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`Invisible Population’ என்கிற ஆங்கில வார்த்தை சமூகத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாத மக்களை குறிப்பிடப் பயன்படும். இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் என்பது மிகப்பெரிய அளவில் கொள்கை விவாதங்களிலோ சட்ட திட்டங்களிலோ எதிரொலித்தது இல்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் கணிசமான வாக்கு வங்கியாகவும் இருந்ததும் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை சொந்த ஊர்களுக்குச் சென்று வரும் தொழிலாளர்கள் தேர்தலுக்காகப் பயணிப்பதும் அரிதான நிகழ்வே. இதனால் வாக்கு அரசியலில் இவர்களின் முக்கியத்துவம் என்பதும் குறைவாகவே உள்ளன எனப் பல அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை என்பது ஊரடங்குக்குப் பிறகு திடீரென உருவான ஒன்றல்ல. சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிய சிக்கல்களை நாம் அங்கீகரிக்க மறுத்தும், கண்டுகொள்ளத் தவறியதுமே இன்று அம்பலமாகியிருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர் நலன் மீதான அக்கறை கானல் நீராக தோன்றி மறையாமல் செயல்வடிவம் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.