Published:Updated:

`தவறு ஸ்டேட் வங்கியிடம் மட்டும் இல்லை!'- கட்-ஆஃப் சர்ச்சையால் கொதிக்கும் வங்கி ஊழியர் சங்கம்

சத்யா கோபாலன்

எஸ்.பி.ஐ தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்த விவாதம் நாடு முழுவதும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.

எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ

பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியின் கிளார்க் பணியாளர் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்வு கடந்த மாதம் 22, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளின் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதனுடன் சேர்த்து இரண்டாவது கட்டமாக நடக்கும் பிரதான தேர்வில் கலந்துகொள்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

கட் ஆஃப் மதிப்பெண்கள்
கட் ஆஃப் மதிப்பெண்கள்

அதன்படி பட்டியலின பிரிவினர் (SC), இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொதுப் பிரிவினருக்கு ஒரே கட்- ஆஃப் 61.25 மதிப்பெண்ணாகவும், பட்டியலின பழங்குடியினர்களுக்கு (ST) 53.75 மதிப்பெண்ணாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு 28.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி இத்தகைய கட்-ஆஃப் மார்க் நிர்ணயிக்கப்பட்டதாகவும், இது சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறையையே கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். பா.ஜ.க அரசு சமூகநீதியைப் படுகுழியில் தள்ளியிருக்கிறது. 10% இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்க!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கட்- ஆஃப் அறிவிக்கப்பட்டது உண்மையா என அறிந்துகொள்ள இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு கிளையின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கட்-ஆஃப் தொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள விவரங்கள் உண்மைதான். ஆனால், எதற்காக இப்படி வெளியிட்டார்கள் என்ற விளக்கத்தை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள காலிப் பணியிடங்கள் எத்தனை, அதில் பொதுப்பிரிவைச் சேர்ந்த பின்தங்கியவர்கள் எத்தனை பேர் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர், அப்படி விண்ணப்பித்தவர்கள் 10% இட ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பித்துள்ளார்களா போன்ற அனைத்து விவரங்களையும் வங்கி வெளியிட வேண்டும்.

எஸ்.பி.ஐ வங்கி வெளிப்படையாக எந்தத் தகவலும் அளிக்கவில்லை. மாறாக `தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பிறந்த நாள் மற்றும் ஹால் டிக்கெட் எண்ணைக் கொண்டு நீங்களே முடிவுகளைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று மட்டும்தான் தெரிவித்துள்ளனர். இதில் கடுமையான முரண்பாடு உள்ளது. சமுதாயத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள், பட்டியலின மக்களைவிட பொதுப்பிரிவினர் குறைவான மதிப்பெண்களைப் பெற்று எப்படி வங்கிக்குள் நுழைய முடியும்.

சி.பி.கிருஷ்ணன்
சி.பி.கிருஷ்ணன்

வங்கி ஊழியர்கள் சங்கம் இதைக் கையில் எடுக்கவுள்ளோம். முதலில் இந்த விவகாரத்தினால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக்காட்டுவோம். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவோம். இது எஸ்.பி.ஐ மட்டும் செய்திருக்கக் கூடிய விஷயமாகத் தெரியவில்லை. 10% இட ஒதுக்கீட்டின் வெளிப்பாடாகவே உள்ளது. இட ஒதுக்கீடு மசோதா எப்படி அமல்படுத்தப்பட்டுள்ளது, அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றையும் ஆராய வேண்டும். இந்த விவகாரத்தில் எஸ்.பி.யை-யையும் தாண்டி மத்திய அரசு, பணிகள் தேர்வாணையும் ஆகியவற்றுக்கும் தொடர்புள்ளது” எனக் கூறினார்.