Published:Updated:

`குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்ய எவ்வளவு அவகாசம் தேவை!'துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிபதிகள் காட்டம்

விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தாமதப்படுத்தி வருவதால், இவ்வழக்கின் விசாரணை பற்றிய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி ஒரே வழக்காகப் பதிவுசெய்து விசாரித்துவந்த நிலையில், சிபிசிஐடி -யின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தாக்கல் செய்ததால், வழக்குகள் அனைத்தும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டுமென்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் விதித்த காலக்கெடுவையும் மீறி, சிபிஐ குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யாமல் அவகாசம் கேட்டுவந்தது. இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு

அதில், ''அக்டோபர் 8-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில் 100 ஆவணங்களுக்குப் பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? போராட்டத்தின் மையப்பொருள் என்ன என்பதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். அதனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய, கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு, டிசம்பர் 10-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.