Published:Updated:

கொரோனா `மருந்து'… கூவிய ராம்தேவ்… அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய யோகா குரு பாபா ராம்தேவின் `பதஞ்சலி’ நிறுவனத்தின் தலையில் குட்டு வைத்துள்ளது நீதிமன்றம். அதன் பிறகு, அந்தர் பல்டி அடித்துள்ளது பதஞ்சலி.

கொரோனாவுக்கு மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும், கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைச் சோதனை செய்து பார்ப்பதிலும் உலகின் முன்னணி மருந்து நிறுவனங்கள் எல்லாம் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், `கொரோனில்’ என்ற `கொரோனா கிட்’ ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் பாபா ராம்தேவ். யோகா குருவான பாபா ராம்தேவ், `பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். பதஞ்சலி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக ஆச்சார்யா பால்கிருஷ்ணா இருக்கிறார்.

2006-ம் ஆண்டு ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுடன் இணைந்து பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தைப் பாபா ராம்தேவ் தொடங்கினார். இதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரிதுவாரில் செயல்படுகிறது. தாதுக்கள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு மருந்துகளைத் தயாரிப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. கொரோனாவைக் குணப்படுத்துவதற்கு தாங்கள் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், அந்த மருந்து 3 - 14 நாள்களில் கொரோனாவைக் குணமாக்கிவிடும் என்று பால் கிருஷ்ணா கூறினார். ஹரிதுவாரில் உள்ள பதஞ்சலி யோகா பீடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டு, அவர்கள் 100 சதவிகிதம் குணமடைந்ததாகவும் அவர் கூறினார்.

`` `கொரோனா கிட்’ தயாரிக்கப்படுகிறது, ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம். கொரோனா கிட் ஒன்றின் விலை 545 ரூபாய். கொரோனா கிட் ஒவ்வொன்றிலும் 30 நாள்களுக்கு மருந்து இருக்கும். இந்தியா முழுவதிலுமுள்ள பதஞ்சலி ஸ்டோர்ஸ் அனைத்திலும் கொரேனா கிட் கிடைக்கும். ஆன்லைனில் ஆர்டர் செய்த இரண்டு மணி நேரத்துக்குள் கொரோனா கிட் கிடைத்துவிடும்" என்று பால் கிருஷ்ணா கூறினார். மூலிகைகள் மற்றும் தாதுக்களைப் பயன்படுத்தி இந்த மருந்து தயாரிக்கப்பட்டதாகவும், சுண்டெலிகள் மற்றும் எலிகள் மீது கொடுக்கப்பட்டு, இந்த மருந்து சோதிக்கப்பட்டதாகவும் பதஞ்சலி தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.

Corona
Corona

``கொரோனா தொற்றுக்கு ஆளாகி, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் நபர்களிடம் சோதனை நடத்தப்படும். கொரோனா கிட் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அல்ல. இது, கொரோனாவைக் குணமாக்கக்கூடிய மருந்து. கொரோனா கிட் டெலிவரி செய்வதற்கான செயலியைத் தொடங்கப்போகிறோம். இந்த மருந்தை உட்கொண்டால், மரண விகிதத்தை 100 சதவிகிதம் தடுக்கலாம். இந்த மருந்து உட்கொண்ட 69 பேர் மூன்றே நாள்களில் குணடைந்தனர். இந்த மருந்தை தேவையான அனைத்து சோதனைகளுக்கும் உட்படுத்திவிட்டோம். பக்க விளைவுகள் கிடையாது .இது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதில் சொல்வோம்"என்று பால் கிருஷ்ணாவும் பாபா ராம்தேவும் கூறினர். தினமும் 10 லட்சம் `கிட்’களுக்கு டிமாண்ட் இருப்பதாகவும் ராம்தேவ் கூறினார்.

மிகப்பெரிய விளம்பரங்களுடன், `கொரோனில் மற்றும் ஸ்வசரி’ என்ற பெயரில் பால் கிருஷ்ணாவும் பாபா ராம்தேவும் அவற்றை வெளியிட்டனர். சில மணி நேரத்திலேயே, உத்தரகாண்ட் ஆயுஷ் அமைச்சகத்திடமிருந்து பதஞ்சலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ``எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மருந்து உற்பத்தி செய்யத்தான் பதஞ்சலி நிறுவனத்துக்கு உரிமம் வழங்கினோமே தவிர, கொரோனாவைக் குணப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிப்பதற்காக உரிமம் வழங்கப்படவில்லை" என்று ஆயுஷ் அமைச்சகம் கூறியது.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

மருந்து சோதனை செய்த குழு, மருந்துகளின் உள்ளீட்டுப் பொருள்கள், செய்முறை, மருந்து சோதிக்கப்பட்ட இடங்கள், சோதனைக்கான நடைமுறைகள் மற்றும் அதன் முடிவுகள் உட்பட இந்த மருந்து தொடர்பான அனைத்து விவரங்களையும் பதஞ்சலி நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இது தொடர்பாக மத்திய அரசு பரிசோதனைகள் மேற்கொண்டு முறையான அறிவிப்பு வெளியாகும் வரை பதஞ்சலி நிறுவனம் இந்த மருந்து தொடர்பான எந்தவொரு விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது என்று ஆயுஷ் அமைச்சகம் கூறியது.

``நாட்டுக்கு புதிய மருந்தை பாபா ராம்தேவ் கொடுப்பது நல்லதுதான். ஆனால், ஆயுஷ் அமைச்சகம் முறையாக அனுமதிக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் அனுமதி வழங்கப்படும். யார் வேண்டுமானாலும் மருந்துகளைத் தயாரிக்கலாம். ஆனால், அது குறித்து அமைச்சகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தாங்களாகவே யாரும் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவோ, விற்பனை செய்யவோ முடியாது" என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கூறினார்.

மாதிரி படம்
மாதிரி படம்

ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி நிறுவனத்திடம் கறார் காட்டியதால், பாபா ராம்தேவ் தரப்பு கலக்கமடைந்தது. இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கும், அதில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் பதஞ்சலி நிறுவனத்துக்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினீயர்ஸ் என்ற தனியார் நிறுவனம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், ``கனரகத் தொழிற்சாலைகளில் இயந்திரங்களைச் சுத்தப்படுத்தும் ரசாயனக் கலவையை, `கரோனில் 92 பி’ ‘கரோனில் 213 எஸ்.பி.எஸ்’ என்ற பெயர்களில் தயாரித்து வருகிறோம். இதற்கான வணிகச் சின்னத்தையும் முறையாகப் பதிவுசெய்துள்ளோம். இந்தச் சின்னம் 2027-ம் ஆண்டுவரை செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு `கொரோனில்’ என்று பெயர் சூட்டியிருப்பதாகவும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் அறிவித்துள்ளன. அவர்கள், எங்களுடைய வணிகச் சின்னத்தின் பெயரில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர். கரோனில் என்ற பெயரைப் பயன்படுத்த பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடைவிதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கரோனில் என்ற பெயரைப் பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரி இந்த இரண்டு நிறுவனங்களும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. அதை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், `கரோனில் என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு நிறுவனம் வணிகச் சின்னத்தைப் பதிவுசெய்துள்ள நிலையில், அதே பெயரை பதஞ்சலி நிறுவனம் பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உறுதிசெய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

`குழந்தை ராமர்; கூட்டிச்செல்லும் மோடி!' - சர்ச்சையான ட்வீட்க்கு வானதி சீனிவாசன் விளக்கம்

மேலும், ``கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி, பதஞ்சலி நிறுவனம் லாபம் சம்பாதிக்க முயன்றுள்ளது. அது, எதிர்ப்புசக்தி கொண்ட மருந்துதானே தவிர, கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து அல்ல. எனவே, பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதில், ரூ.5 லட்சத்தை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் ரூ.5 லட்சத்தை அரும்பாக்கம் அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் வழங்க வேண்டும்" என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Coronil: பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய மருந்து.. விவரங்களை கேட்கும் ஆயுஷ் அமைச்சகம்

முதலில் ஆயுஷ் அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸ் மற்றும் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகிய இரண்டும் பதஞ்சலி நிறுவனத்தின் `கொரோனா மருந்து' வியாபாரத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன. அதே நேரத்தில், நாடு முழுவதும் கிளைகளைத் திறந்து, ஊர் ஊராகப் பதஞ்சலி ஸ்டோர்கள் செயல்பட்டுவரும் நிலையில், அதன் வாடிக்கையாளர்களைப் பதஞ்சலியின் செயல்பாடு பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்தே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவருவதாகச் சொன்ன பதஞ்சலி நிறுவனம், பிறகு அப்படியே அந்தர் பல்டி அடித்தது. கடும் விமர்சனங்கள் கிளம்பிய பிறகு, `கொரோனாவைக் குணப்படுத்த எங்கள் குழுமத்தின் சார்பில் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்று பாலகிருஷ்ணா பல்டி அடித்தார். ``வர்த்தக ரீதியாக கொரோனா கிட் என்ற பெயரில் எந்த ஒரு மருந்தையும் பதஞ்சலி குழுமம் விற்பனை செய்யவில்லை'' என்றும் அவர் மறுத்துள்ளார்.

இந்தப் பெருந்தொற்றுக் காலம் பலருக்கு வாழ்க்கைப் போராட்டம். ஆனால், சிலருக்கு வெறும் வியாபாரம்.

அடுத்த கட்டுரைக்கு