Published:Updated:

`மே17 வரை திறக்கக் கூடாது; ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி!’- #Tasmac விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஊடரங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தவு பிறப்பித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சில தளர்வுகளுடன் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின்பல மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு மாநில அரசுகள் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் சமூக ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்தனர். கொரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறந்தால் சமூக இடைவெளி என்னாவது எனக் கேள்வி எழுப்பினர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத மாநில அரசுகள் மதுக்கடைகளைத் திறப்பதில் மும்முரமாக இருந்தன.

மது
மது

மே மாதம் நான்காம் தேதிக்குப் பிறகு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதில் முதல்நாள் கலெக்ஷன் 100 கோடி, 45 கோடி, 149 கோடி ரூபாய் எனத் தகவல்களும் வெளியாகின. மது வாங்குவதற்காக மக்கள் மதுக்கடைகள் முன்பாகக் குவிந்ததால் சமூக இடைவெளி எல்லாம் காற்றில் பறந்தது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது தமிழக அரசு தரப்பில், `டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது. டோர் டெலிவரியும் செய்ய முடியாது. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் ஒரு நபருக்குக் குறிப்பிட்ட அளவே மதுபானம் வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்த நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியது. நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றால் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டி வரும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் முன்பு குவிந்ததால் சமூக இடைவெளி எல்லாம் காற்றில் பறந்தது. டாஸ்மாக் முதல்நாள் கலெக்ஷனும் 140 கோடிக்கு மேல் எனக் கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதில் நேற்று விபத்துகளும் அதிக அளவில் பதிவாகியுள்ளன. சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் சாப்பாட்டுக்கே வழியின்றிப் பல குடும்பங்கள் தவித்து வந்தது. இந்நிலையில் கையில் இருந்த கொஞ்சப் பணத்தையும் எடுத்துக்கொண்டு கணவன்கள் மதுவாங்கச் சென்றதால் பல இடங்களில் குடும்பத் தகராறும் தற்கொலை முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளன.

மதுக் கடை முன்பு வரிசை
மதுக் கடை முன்பு வரிசை

இந்நிலையில் உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதால் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மற்றும் சில அமைப்புகள் மீண்டும் நீதிமன்றத்தை நாடின. இதனைவிசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் ஊடரங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்யவேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு காலத்தில் மதுவிற்பனையைத் தடைசெய்யக்கோரிய வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. “இந்த வழக்கில் இப்போது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. மாநில அரசுகள் மதுக்களை மக்களுக்கு மறைமுகமான முறையில் விற்பனை செய்யலாம். ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும்” என உச்சநீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல் ஹாசன் வரவேற்றிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு