Published:Updated:

வலுவாக நிற்கும் அ.தி.மு.க; மீட்கப் போராடும் தி.மு.க - மானாமதுரை தேர்தல் கள நிலவரம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ

மானாமதுரை தொகுதி தற்போது அ.தி.மு.க கையில் இருந்தாலும், அது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

வலுவாக நிற்கும் அ.தி.மு.க; மீட்கப் போராடும் தி.மு.க - மானாமதுரை தேர்தல் கள நிலவரம்!

மானாமதுரை தொகுதி தற்போது அ.தி.மு.க கையில் இருந்தாலும், அது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
என்ன செய்தார் எம்.எல்.ஏ

மானாமதுரை தொகுதியின் முக்கிய அடையாளம் வைகை நதி. கிழக்கு - மேற்கு திசையில் பாயும் வைகையின் வளமான நீரையும் மண்ணையும் நம்பிப் பலரும் தொழில் செய்கின்றனர். நெல், மிளகாய், வெங்காயம், வாழை, தென்னை, பருத்தி என பல்வேறு பயிர்கள், விவசாய பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போதும் மானாமதுரையில் மண்ணில் செய்யப்படும் கடம், உலகின் முன்னணி இசைக்கலைஞர்களின் கையில் தவழ்கிறது. மண்பாண்டம், செங்கல்சூளை, சுண்ணாம்பு காளவாசல் என மண் சார்ந்த தொழில்கள் அதிகம். திருப்பாச்சேத்தி அரிவாள், பூவந்தி பொங்கல் பானை, இளையான்குடி குண்டு மிளகாய் என்று தொகுதி முழுவதும் பல்வேறு பொருள்கள் தனித்துவம் பெற்றுள்ளன.

திருகில்  பானை -  மானாமதுரை தொகுதி.
திருகில் பானை - மானாமதுரை தொகுதி.

பெருமைக்கு எப்படிப் பஞ்சம் இல்லையோ, அதேபோல் பதற்றத்துக்கும் பஞ்சம் இல்லாத பகுதியாக இது இருந்துவருகிறது. அதனால் மாவட்ட காவல்துறையின் கண்கள் மானாமதுரை தொகுதியை உற்று நோக்கியபடியே இருந்துவருகின்றன. தமிழரின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு இந்தத் தொகுதியில்தான் செய்யப்படுகிறது. தமிழக பாரம்பர்ய மாட்டு இனமான, புலிக்குளம் காளைக்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மடப்புரம் பத்திரகாளி, தாயமங்கலம் முத்துமாரி கோயில்கள் மானாமதுரை தொகுதியில் அமைந்திருப்பது சிறப்பு. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதுபோல் மானாமதுரை வைகை ஆற்றில் வீர அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழாவும் புகழ்பெற்றது. நிலாச்சோறு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தனித்துவமானவை.

மடப்புரம் பத்திரகாளி கோயில்
மடப்புரம் பத்திரகாளி கோயில்
சி.அரவிந்தன்

தொகுதியில் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய மூன்று ஒன்றியங்கள் இருக்கின்றன. இளையான்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் குடிநீருக்குச் சிரமப்பட்டுவருகின்றனர். அதைக் கண்டுகொள்ளாமல், மணல் கொள்ளைச் சம்பவங்கள் கட்சிப் பாகுபாடின்றி நடைபெற்றுவருகின்றன. தொகுதியில் அரசுக் கல்லூரி இல்லை. வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் பலரும் வெளிநாட்டு வேலையையே நம்பியிருக்கின்றனர்.

கண்ணார் தெரு முதல் கிருஷ்ணாபுரம் வரையிலான தரைப்பாலம் அமைக்கும் திட்டம் நீண்ட வருடங்களாகக் கிடப்பில் இருக்கிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் தொகுதியில் மானாமதுரையும் ஒன்று. அதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ நாகராஜன் வெற்றிபெற்றார். மானாமதுரைப் பகுதியில் சலவைத் தொழிலாளிகளுக்கு தேவையான தொட்டிகள் கட்டிக்கொடுத்தது,

பூவந்தி பொங்கல் பானை
பூவந்தி பொங்கல் பானை

இளையான்குடியில் பிணவறையைச் சுற்றி பாதுகாப்புச் சுவர்கள் கட்டியது, மூன்று தொகுதிகளிலும் சோலார் விளக்குகள் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகத் தெரிவிக்கிறார் எம்.எல்.ஏ.நாகராஜன். இந்தநிலையில் தற்போது மானாமதுரை தொகுதி தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அ.தி.மு.க வலுவாக இருந்துவரும் இந்தத் தொகுதியில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் தலைவர் எல்.முருகன் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ கண்டிப்பாக மானாமதுரை அ.தி.மு.க-வுக்குத்தான் ஒதுக்கப்படும் என அடித்துச் சொல்கிறார். அ.தி.மு.க-வில் யூனியன் ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், வழக்கறிஞர் அழகுமலை உள்ளிட்ட பலரும் சீட்டுக்கு முயல்கின்றனர். ஆனால் அ.தி.மு.க-வுக்குதான் இந்தத் தொகுதி ஒதுக்கப்படுகிறதென்றால் எம்.எல்.ஏ நாகராஜன்தான் போட்டியிடுவார் என்று ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர்.

புலிக்குளம் மாடுகள் ஆராய்ச்சி  மையம்
புலிக்குளம் மாடுகள் ஆராய்ச்சி மையம்

தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் அமைச்சர் செல்வராஜின் மகள் சித்திரை செல்வி, கடந்த இடைத்தேர்தல் வேட்பாளர் இலக்கிய தாசன், முன்னாள் நீதிபதி ஒருவர் என மொத்தம் 36 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மானாமதுரை தொகுதியில் தி.மு.க கூட்டணி தொடர்ந்து தோல்வியைத் தழுவிவருகிறது. இது குறித்து இளையான்குடி பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, ``மானாமதுரை தொகுதியில் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அ.தி.மு.க வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. ஆனால் இளையான்குடி தொகுதி அப்படியில்லை. முக்கால்வாசிக்கு மேல் தி.மு.க ஓட்டுகள்தான் இருக்கின்றன. சிறுபான்மையினர், மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் என வாக்குகளை ஈர்க்கும் நிர்வாகிகள் அதிகம் இருக்கிறார்கள்.

கீழடி
கீழடி

அதனால் தி.மு.க-வின் கோட்டையாக இளையான்குடி தற்போது இருக்கிறது. ஆனால் இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த யாருக்கும் தி.மு.க இடம் கொடுக்காமல் மற்ற ஒன்றியங்கள் அல்லது வெளியூர் நபர்களுக்கு சீட் கொடுக்கின்றனர். அதனால் இங்கு தி.மு.க வெற்றியடைய முடியவில்லை.

எனவே தி.மு.க-வில் இளையான்குடியைச் சொந்த ஊராகக் கொண்டவருக்கு சீட் கொடுத்தால், தி.மு.க-வின் வாக்குபலம் கூடும். மானாமதுரையை தி.மு.க கைப்பற்றும். கடந்த இடைத்தேர்தலில்கூட, இலக்கியதாசன் 4% வாக்குகளில்தான் தோல்வியடைந்தார். அவர் திருப்புவனம் ஒன்றியம் என்பதால் கூடுதல் வாக்குகள் பெற முடியவில்லை. இளையான்குடிக்குக் கொடுத்தால் தி.மு.க-வின் கை உயரும்.

இளையான்குடி பகுதியில்தான் நெட்டூர் ஊராட்சி இருக்கிறது. அங்கு சிட்டிங் எம்.எல்.ஏ நாகராஜனின் மனைவி ஊராட்சி மன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இது தி.மு.க ஒற்றுமையால்தான் முடிந்தது. மானாமதுரையை தி.மு.க மீட்டெடுக்க முடியும். அதேபோல் மானாமதுரை தொகுதியில், சொந்தக் கட்சியினரே செய்யும் உள்ளடி வேலைகளைக் களையெடுக்க வேண்டும். அப்போதுதான் வலுவான வெற்றியைப் பெற முடியும்” என்றனர்.

மானாமதுரை தனித் தொகுதியாக இருக்கிறது. இங்கு அ.தி.மு.க பலமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், பா.ஜ.க நின்றால் தோல்வியைத் தழுவும் நிலையே. தி.மு.க-வில் ஒற்றுமையாக வேலை செய்தால் இந்த முறை வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, கோட்டை என்று சொல்லிக்கொண்டாலும் கடுமையாக உழைத்தால்தான் வெற்றியைப் பெற முடியும்.