Published:Updated:

``நீ செய்யுற கைம்மாறு இதுதானா?'' - வைகோவின் கோபமும் திமுக எம்.எல்.ஏ-வின் ரியாக்‌ஷனும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திமுக எம்எல்ஏ-விடம் கடிந்துகொண்ட வைகோ!
திமுக எம்எல்ஏ-விடம் கடிந்துகொண்ட வைகோ!

சொந்த ஊரிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்துவது தொடர்பான விவகாரத்தில், தொகுதி எம்.எல்.ஏ-வான ராஜாவிடம் வைகோ காட்டமாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த ராஜா. சங்கரன்கோவில் தனித் தொகுதியில்தான் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சொந்த ஊரான கலிங்கத்துப்பட்டி இருக்கிறது. சொந்த ஊரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்துவது தொடர்பான விவகாரத்தில், தொகுதி எம்.எல்.ஏ-வான ராஜாவிடம் வைகோ காட்டமாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.

சங்கரன்கோவில் நகரம்
சங்கரன்கோவில் நகரம்

என்ன நடந்தது என்பது குறித்து எம்.எல்.ஏ-வான ராஜாவிடம் கேட்டதற்கு, ``தொடர்ந்து ஏழு முறை அ.தி.மு.க வெற்றிபெற்ற சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை மீட்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தினார். அதனால் மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாலும், வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் பிரசாரத்தாலும் வெற்றி கைகூடியது.

நீண்ட காலத்துக்குப் பிறகு தி.மு.க வெற்றிபெற்ற சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி பணியாற்றுகிறேன். தொகுதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முதல்வரிடம் கோரிக்கை விடுத்துவருகிறேன்.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா
சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா

அதன்படி, குருவிகுளம் ஒன்றியத்திலுள்ள சாயமலை என்ற இடத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்தி மருத்துவமனையாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததால், அது தொடர்பாக அமைச்சரிடம் பேசினேன். அதைத் தொடர்ந்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தன் சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்த திட்டமிட்டிருந்திருக்கிறார். அது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், திடீரென செல்போனில் தொடர்புகொண்ட அவர், 'இந்தத் தொகுதியில் நீ வெற்றிபெற நான் பிரசாரம் செஞ்சிருக்கேன். அதற்கு எனக்குக் காட்டும் நன்றி இதுதானா?' எனக் கடுமையாகப் பேசினார்.

கட்சி மேலிடத்திலிருந்து நடந்த சம்பவம் பற்றிக் கேட்டார்கள். என்ன நடந்ததோ அதைத் தெரிவித்தேன்
ராஜா, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்

என்னை பதில் பேசவேவிடாமல் அவர் பேசினார். சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அவர் எதற்காக அப்படிப் பேசுகிறார் என்பதே எனக்குப் புரிந்தது. ஒரு கட்சியின் தலைவர் என்பதோடு, வயதில் மூத்தவர் என்பதால் அவர் பேசியபோது நான் குறுக்கிட்டு எதுவுமே பேசவில்லை. ஆனாலும் நடந்த சம்பவத்தை எங்கள் மாவட்டச் செயலாளரிடம் தெரிவித்தேன். பிறகு கட்சி மேலிடத்திலிருந்து பேசினார்கள். அவர்களிடமும் நடந்ததை விளக்கமாகச் சொன்னேன்" என்று முடித்துக்கொண்டார்.

இது பற்றி தென்காசி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனிடம் கேட்டதற்கு, ``ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசியது பற்றி ராஜா என்னிடம் சொன்னார். கலிங்கப்பட்டி கிராமத்து மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவமனையாக மாற்றுவதற்கு வைகோ முயன்ற விவரம் தெரியாமல், வேறு இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததால் அவர் வருத்தப்பட்டுப் பேசியிருக்கலாம்.

``திமுக தலைமைக்கும் என்மீது சின்ன வருத்தம்தான்!'' - மனம் திறக்கிறார் துரை வைகோ

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டியது அரசியல்வாதிகளின் கடமை. அதைத்தான் சட்டமன்ற உறுப்பினர் ராஜா செய்திருக்கிறார். கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வைகோ பேசியதைச் சிலர் பெரிதுபடுத்தி அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை" என்றார். இந்த விவகாரத்தில் ம.தி.மு.க-வினரிடம் விளக்கம் கேட்க முயன்றபோதும், யாரும் பேச முன்வரவில்லை.

அப்படி அவர்கள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதைப் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு