அரசியல்
அலசல்
Published:Updated:

முந்தியது இந்தி! - தமிழிலும் வருமா மருத்துவப் படிப்பு?

மத்தியப் பிரதேசம்
பிரீமியம் ஸ்டோரி
News
மத்தியப் பிரதேசம்

“நீண்ட காலமாகவே இந்தக் கோரிக்கை இருந்துவருகிறது. இது குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார் சுருக்கமாக.

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியில் மருத்துவப் படிப்புகளை மத்தியப் பிரதேச பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபர் 16-ம் தேதி தலைநகர் போபாலில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு, இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட மருத்துவப் பாடப்புத்தகங்களை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய அமித் ஷா, ``புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மருத்துவப் படிப்புகளை அவரவர் தாய்மொழியில் படிக்க ஏதுவாக, இந்திக்கு மொழிபெயர்த்திருக்கிறோம். இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இந்திய மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக்கல்வி கற்கும்போது, உலகின் முக்கியக் கல்வி மையமாக இந்தியா மாறும்” என்றார். இதன் தொடர்ச்சியாக, ``இந்தியில் மருந்துச்சீட்டு எழுதும் மருத்துவர்கள், மேலே `ஸ்ரீஹரி’ என்றுகூடக் குறிப்பிடலாம்” என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானும், ``உ.பி-யிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. வரும் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும்’’ என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். பிரதமர் மோடியும்கூட இந்த முன்னெடுப்பைப் பாராட்டியிருக்கிறார்.

முந்தியது இந்தி! - தமிழிலும் வருமா மருத்துவப் படிப்பு?

உள்நோக்கம் கொண்டதா?

தாய்மொழியில் மருத்துவப் படிப்பு என்பது பாராட்டக்கூடியது என்றாலும், இந்தியில் மருத்துவப் படிப்பு என்பது உள்நோக்கத்துடனே கொண்டுவரப்பட்டிருக்கிறது என்கிற எதிர்ப்புக் குரல்களும் எழுந்திருக்கின்றன. இது குறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், ``ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் சரி. அதை வரவேற்கிறோம். ஆனால், அதை பா.ஜ.க உள்நோக்கத்துடன் செய்கிறது. தற்போது இந்தியில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்படும் உ.பி., ம.பி போன்ற இந்தி மொழி பேசும் மாநில மாணவர்கள் இந்தியில் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் மருத்துவப் படிப்பு படிப்பார்கள். ஆக, அந்த மாநிலம் மட்டுமல்லாமல், அகில இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் அவர்களால் தொடர்ந்து படிக்க முடியும். இது மற்ற மாநில மாணவர்களின் உரிமையைப் பறிக்கும்விதமாகவும், அவர்களுக்கான இடங்களை தட்டிப்பறிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

மேலும், இந்தியில் மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படும் ம.பி., உ.பி போன்ற மாநிலங்களுக்குச் சென்று படிக்க முடியாத தமிழ்நாடு, கேரளா போன்ற இந்தி பேசாத மாநில மாணவர்களின் மனதில் `நாமும் இந்தியில் படித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும்’ என்ற உளவியலை உருவாக்கும். கல்வியில் ஆங்கிலப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம், இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்கிக்கொள்ளலாம் எனவும் நினைக்கிறது பா.ஜ.க. உண்மையில் தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதுதான் பா.ஜ.க-வின் நோக்கம் என்றால், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரட்டும்” என்றார்.

தமிழில் மருத்துவக் கல்வி!

“இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது” என்று கூறியிருக்கும் பா.ம.க தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், “மாநில மொழிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முறை நடைமுறைக்கு வரும்போது ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேறு மொழி பேசும் மாநிலத்துக்குச் சென்று மருத்துவப் படிப்பை படிப்பதில் சிக்கல் ஏற்படும். இந்தச் சிக்கலுக்கு ஒரே தீர்வு மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்வதும், அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும்தான். எனவே, தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்துக்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வித் திட்டத்தை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பள்ளிக்கல்வியில் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க, சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றிச் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

சி.கே.சரஸ்வதி
சி.கே.சரஸ்வதி

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ-வும், மருத்துவருமான சி.கே.சரஸ்வதியிடம் விளக்கம் கேட்டோம். ``இந்தியில் மருத்துவப் படிப்புகள் அறிமுகம் செய்யப் பட்டிருந்தாலும், அந்த மாநிலங்களில் ஆங்கில மருத்துவப் படிப்பும் தொடரும். அதனால், பிற மாநில மாணவர்கள் 100% பாதிக்கப்பட வாய்ப்பில்லை. எனவே, அகில இந்திய இட ஒதுக்கீட்டை ரத்துசெய்யத் தேவையில்லை. அதேபோல, ம.பி., உ.பி-யைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும், மருத்துவப் படிப்பைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதற்கு தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவந்தால் `யூனிஃபார்ம் எஜுகேஷன்’ இருக்காது. தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள், வெளிநாடு சென்று படிப்பதற்கான GRE (Graduate Record Examinations) போன்ற தேர்வுகளை எழுத வேண்டுமென்றால் கல்வி மத்தியப் பட்டியலிலும் இருக்க வேண்டும். மற்றபடி, நாங்கள் இந்தியை எந்த இடத்திலும் திணிக்கவில்லை. எதிரணியினர் வேண்டுமென்றே அரசியலுக்காக, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுகிறார்கள்” என்றார்.

தமிழில் மருத்துவக் கல்விக்காக இயக்கம் நடத்திவரும் தஞ்சை மருத்துவர் நரேந்திரனோ, “எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான பாட நூல்களை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்த்திருப்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே தமிழிலும் மருத்துவக் கல்வியைத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்தால் `நீட்’ எனும் தடையும் தானாகவே தகர்ந்துவிடும்” என்று வலியுறுத்துகிறார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

தமிழ்வழியில் மருத்துவக் கல்விக் கோரிக்கை குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டோம். “நீண்ட காலமாகவே இந்தக் கோரிக்கை இருந்துவருகிறது. இது குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார் சுருக்கமாக.

இதைத் தொடர்ந்து, மருத்துவப் பாடப் புத்தகங்களைத் தமிழில் வெளியிடவிருப்பதாகவும், டிசம்பர் மாதத்துக்குள் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், தமிழ்வழியில் மருத்துவக் கல்வி எப்போது தொடங்கப்படும் என்று வாய் திறக்கவில்லை அரசு!