அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

தமிழ்நாடு முழுக்க வசூல்... புதுக்கோட்டையில் அடிதடி... கனிம வளத்துறை களேபரங்கள்!

கனிம வளத்துறை களேபரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கனிம வளத்துறை களேபரங்கள்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறைக்கு எல்.இ.டி பல்புகள் தொடங்கி, கிருமி நாசினி சப்ளை செய்வது உள்ளிட்ட பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்துச் செய்தவர் இவர்.

சமீபகாலத்தில், புதுக்கோட்டையில் இப்படியொரு பரபரப்பு பற்றியதில்லை. நகரின் மையப் பகுதியிலிருக்கும் நகர் மன்றத்தில், கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வலதுகரமான தொழிலதிபர் கரிகாலனும், ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்த தொழிலதிபர் முருகானந்தமும் மோதிக்கொண்டதுதான் இந்தப் பரபரப்புக்குக் காரணம். கோடிக்கணக்கில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட தகராறுதான் அடிதடி வரைக்கும் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆரும் போடப்பட்டிருக்கிறது. உண்மையில் என்னதான் நடந்தது?

புதுக்கோட்டையின் சீனியர் காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்தவர் முருகானந்தம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறைக்கு எல்.இ.டி பல்புகள் தொடங்கி, கிருமி நாசினி சப்ளை செய்வது உள்ளிட்ட பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்துச் செய்தவர் இவர். அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமாக இருந்தவர். சாதாரண அரசு ஊழியராக இருந்த இவரின் சொத்துகள், கடந்த சில ஆண்டுகளில் மளமளவெனப் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இவரின் தம்பி பழனிவேலும் அரசு ஒப்பந்ததாரர்தான். சகோதரர்கள் இருவரும், தொழிலதிபர் கரிகாலனுடன் சேர்ந்து கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல டெண்டர்களை எடுத்திருக்கிறார்கள். அப்போதிருந்தே இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கலில் சிலபல பிரச்னைகள் இருந்திருக்கின்றன. ஒருகட்டத்தில், கரிகாலனின் ஆதரவாளராக பழனிவேல் மாறியிருக்கிறார்.

தமிழ்நாடு முழுக்க வசூல்... புதுக்கோட்டையில் அடிதடி... கனிம வளத்துறை களேபரங்கள்!

கரிகாலன் லேசுப்பட்டவரல்ல. தி.மு.க பொதுச்செயலாளரும், சீனியர் அமைச்சருமான துரைமுருகனுக்கு மிக நெருக்கமானவர். கனிம வளத்துறை ஒப்பந்தங்கள் இவர் கடைக்கண் பார்வையில்லாமல் நகர்வதில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மண் சப்ளையை மேற்பார்வையிடுவதும் அவர்தான் என்கிறார்கள். இந்தச் சூழலில், ‘அய்யாவிடம் பேசி மண் எடுக்க பர்மிட் வாங்கித் தருகிறேன்’ என முருகானந்தத்திடம் கரிகாலன் வாக்குறுதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதை நம்பி, பெரும் தொகையை முருகானந்தமும் அளித்ததாகத் தெரிகிறது. ஆனால், வாக்குறுதி அளித்தபடி பர்மிட்டும் கிடைக்கவில்லை, கொடுத்த பணமும் திரும்பவில்லை. புதுக்கோட்டையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே இப்படியான வசூல் ரூ.150 கோடிக்கும் மேல் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் ஏற்பட்ட தகராறுதான் அடிதடி வரைக்கும் சென்றிருக்கிறது. சம்பவம் தொடர்பாக கரிகாலன் தரப்பில் புகாரளிக்கப் பட்டிருப்பதால், மேற்கொண்டு விசாரித்துவருகிறோம்” என்றனர்.

இந்தப் பிரச்னை தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் சமீபத்தில் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. யாரும் பிடிகொடுக்காததால், இந்தப் பஞ்சாயத்து தோல்வியில் முடிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான், அக்டோபர் 7-ம் தேதி, நகர் மன்றத்தில் வைத்து கரிகாலன் தரப்பினருடன் முருகானந்தம் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். வாக்குவாதம் முற்றி அடிதடியாகி யிருக்கிறது. தன்னைக் கொலை செய்ய முயன்றதாக கரிகாலன் அளித்த புகாரின் பேரில், முருகானந்தத்தின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

முருகானந்தம்
முருகானந்தம்

சம்பவம் தொடர்பாக, ஒப்பந்ததாரர் பழனிவேலிடம் பேசினோம். “நான், கரிகாலன், அவரின் மாமா ரத்தினம் மூணு பேரும் முருகானந்தத்தோட சேர்ந்து தொழில் செய்யலாம்னு முடிவு செஞ்சோம். 2020-ல் ரத்தினமும் கரிகாலனும் சேர்ந்து 14 கோடியே 83 லட்சம் ரூபாய் கொடுத்தாங்க. என் பங்கு 5 கோடி ரூபாயையும் சேர்த்து, ரூ.19.83 கோடியை முருகானந்தத்திடம் கொடுத்தேன். கணக்கு வரவு செலவெல்லாம் முருகானந்தம்தான் கவனிச்சார். அவ்வப்போது, கரிகாலனுக்கு சில்லறையாக 6 கோடி ரூபாய் வரையிலும் அவர் கொடுத்திருக்கிறார். மீதி அசல் பணம், தொழிலில் சம்பாதித்த தொகை, ஜி.எஸ்.டி வருமான வரி கட்டவேண்டிய தொகை என மொத்தமாக, அவர் 34.89 கோடி ரூபாய் கொடுக்கணும். ஆனா, பலமுறை கேட்டுப் பார்த்தும் எங்களுக்கு வரவேண்டிய பணத்தைக் கொடுக்கலை. இந்தப் பிரச்னை தொடர்பாக எனக்கும் முருகானந்தத்துக்கும் இடையே ஒரு வருஷத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை இல்லை” என்றார்.

முருகானந்தத்திடம் பேசினோம். “கரிகாலன்தான் எனக்குப் பெரிய அளவில் பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் என்னிடமும் இருக்கின்றன. விரைவிலேயே எஸ்.பி அலுவலகத்தில் இது தொடர்பாகப் புகார் கொடுக்கவிருக்கிறேன்” என்றதோடு முடித்துக்கொண்டார். மண் பர்மிட் தொடர்பாகப் பேச முற்பட்டபோது, அவர் மேற்கொண்டு பேசவில்லை.

இறுதியாக, தொழிலதிபர் கரிகாலனிடம் பேசினோம். “அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஊரக வளர்ச்சித்துறை டெண்டர்களை முருகானந்தம் பார்த்துக்கொண்டார். அவரோடு பார்ட்னராகி தொழில் பார்ப்பதற்காக பேங்க் மூலமாகவும், ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறேன். அதற்காக, என் கம்பெனி பேருலயும் வேலை போட்டுக் கொடுத்தார். கடைசியாக வேலையை முடித்து, எல்லா பில்லையும் முருகானந்தமே எடுத்ததாகக் கூறுகின்றனர். ஆனால், நான் போட்ட முதலீட்டுப் பணத்தைக்கூட முழுமையாகக் கொடுக்கவில்லை. முதலீடு, லாபம், ஜி.எஸ்.டி., இன்கம்டாக்ஸ் எல்லாம் சேர்த்து 20 கோடி ரூபாய்க்கு மேல் முருகானந்தம் எனக்குக் கொடுக்கணும்.

பழனிவேல்
பழனிவேல்

இது தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவுல புகார் கொடுத்திருக்கோம். இந்த நிலையில, என்னையே கொலை செய்யப் பார்த்ததுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. மற்றபடி, முருகானந்தத்திடமிருந்து மணல் பர்மிட்டுக்காகக் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக வரும் தகவல்கள் அனைத்தும் பொய். பர்மிட் எடுத்துத் தருவதாகக் கூறி அவரிடம் பணம் எதுவும் வாங்கவில்லை” என்று முடித்துக்கொண்டார்.

பழைய கொடுக்கல், வாங்கல் தகராறு என்பதோடு, இந்தச் சம்பவத்தை முடித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள் சிலர். ஆனால், “மிகப்பெரிய பிரச்னையின் சிறு முனைதான் இப்படி வெளியே வந்திருக்கிறது. ‘அய்யா’வின் பெயரைச் சொல்லி மணல் பர்மிட்களில் பெரும் வசூல் வேட்டையே தமிழ்நாடு முழுவதும் நடந்திருக்கிறது. அய்யா சுதாரிப்பாக இல்லையென்றால், அமலாக்கத்துறை வசம் சிக்கப்போவது நிச்சயம்” என்கிறது தி.மு.க வட்டாரம்.

உண்மை ஒருநாள் உடைந்தே தீரும். அது ஆட்சிக்கே நெருக்கடியாகக்கூட மாறலாம்!