Published:Updated:

`நான் குழந்தை மாதிரி அழவில்லையே!'- 2012ல் தனக்கு நடந்ததைக் கூறி மைத்ரேயனை கூல்படுத்தும் ஜெயக்குமார்

சகாயராஜ் மு

2012-ல் தனக்கு நடந்ததைக் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ``அரசியலைப் பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏறும்போது சந்தோஷப்படுவது, இறங்கும்போது கண்ணீர்விட்டு அழுவது இதெல்லாம் கூடவே கூடாது" என்று மைத்ரேயனை கூல்படுத்தினார்.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்

36-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இருந்துகொண்டு கானொலி காட்சி மூலம் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ``இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகள் குறித்து அதிகாரபூர்வமாக நிதியமைச்சர் அறிவிப்பார். இன்றைய கூட்டத்தில் எலெக்ட்ரிக் காரின் வரியை குறைக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது.

Vikatan

வளர்ந்து வருகின்ற மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டும் அதேபோன்று சுற்றுப்புற சூழ்நிலைகள் பாதிக்கப்படாத வகையில் எலெக்ட்ரிக் கார் என்பது ஒரு இன்றியமையாதது. இதன் மீதான வரியைக் குறைக்கும் பட்சத்தில் இதன் பயன்பாடு அதிகமாகும் என்ற காரணத்தினால் 5 சதவிகிதம் வரியைக் குறைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பேட்டரிக்கும் 5 சதவிகிதமாக வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதை முறையாக நிர்மலா சீதாராமன் வெளியிடுவார். நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே 287 பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. 21 பொருள்களுக்கு சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சேவைகளுக்கு ஏற்கெனவே வரி குறைக்கப்பட்டது" என்றார்.

தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக கூறும் நிலையில் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்ற எவ்வளவு யூனிட் ஆகும் என்ற கேள்விக்கு, ``ஒரு சார்ஜை ரிசார்ஜ் பண்ண வேண்டுமானால் 40 யூனிட் செலவாகும்" என்றார்.

ரவீந்திரநாத் குமார்
ரவீந்திரநாத் குமார்

ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவு நிலையை எடுத்திருக்கிறார். இதுதான் உங்கள் கட்சியின் நிலைப்பாடா என்ற கேள்விக்கு, ``மக்களவை, மாநிலங்களவை என்று இருக்கிறது. மக்களவையில் எங்கள் உறுப்பினர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். இதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. மாநிலங்களவையில் கட்சியின் கருத்து பிரதிபலிக்கும்" என்றார்.

இரட்டைத் தலைமை இருப்பதால்தான் இந்த மாறுபட்ட கருத்து என்று கூறுப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``அப்படியெல்லாம் இல்லை. இதுக்கும் அதுக்கும் முடிச்சுப்போட வேண்டாம். அதற்கு இதற்கும் சம்பந்தமே இல்லை. கட்சியும் ஆட்சியும் இன்றைக்கு நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. எங்கள் கட்சியின் முடிவு மாநிலங்களவையில் பிரதிபலிக்கும்" என்றார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க, பா.ஜ.க-வின் மறு பிரதிபலிப்பாகவே மாறிவிட்டது. ஏற்கெனவே எதிர்த்த அனைத்துக் கொள்கைகளையும் ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து, ``அவரைப் பொறுத்தவரை வழக்கமாக சொல்லும் குற்றச்சாட்டைதான் இப்போதும் சொல்லியிருக்கிறார். பா.ஜ.க-வுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அவர்களுடன் கூட்டணி இருக்கலாம். கட்சிகளுக்கு இடையே மாறுபாடு கொள்கை இருக்கும். ஆனால் தி.மு.க-வைப்போல் கொள்கைகளை அடமானம் வைத்துவிட்டு தமிழகத்தின் உரிமையை தாரைவார்த்துவிட்டு, ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்போல நாங்கள் இல்லை. வேறு வேறு கொள்கைதான்" என்று பதில் அளித்தார்.

தலைமை எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று மைத்ரேயன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, ``அரசியலைப் பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏறும்போது சந்தோஷப்படுவது, இறங்கும்போது கண்ணீர்விட்டு அழுவது இதெல்லாம் கூடவே கூடாது. சகிப்புத்தன்மை வேண்டும். எதையும் எதிர்கொள்கிற திறமை இருக்கணும், திராணி இருக்கணும். தைரியம் இருக்கணும். என்னைப் பொறுத்தவரையில் 2011ல் சபாநாயகர் சீட்டில் உட்கார வைத்து ஜெயலலிதா அழகுபார்த்தார். அதன்பிறகு 2012-ல் சபாநாயகர் பதவியில் இருந்து இறங்கினேன். அதற்காக நான் உடனே குழந்தை மாதிரி அழுதேனா. நான் அழவில்லையே. இதெல்லாம் அரசியலில் டேக் இட் ஈஸி பாலிசி இன்று ஒரு நிலைமை இருக்கும். நாளைக்கு ஒரு நிலைமை இருக்கும். நமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும்.

மைத்ரேயன்
மைத்ரேயன்

அரசியலில் எமோஷனுக்கு இடமே கிடையாது. நமக்கு என்ன வேலை கொடுக்கிறாங்களோ அதை செய்துட்டு போய்கிட்டே இருக்கணும். கடவுள் என்னை நினைக்கிறாரோ அதுதான் நடக்கும். பதவி இல்லையென்றால் கட்சியையும் மற்றவர்களையும் விமர்சனம் பண்ணக் கூடாது. மூன்று வருஷமாக ஜெயலலிதா என்ன வேலை கொடுத்தாங்களோ அதை பண்ணிக்கொண்டுதான் இருந்தேன். எம்.எல்.ஏ-வாக இருந்து எனது கடமையை தாெகுதிக்கு ஆற்றிக்கொண்டிருந்தேன். என்னுடைய கடமையைப் பார்த்து 2016-ல் ஜெயலலிதாவே மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தாங்க. அமைச்சராக நின்றுகொண்டு நீங்கள் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அரசியல் சகிப்புத்தன்மை முக்கியம். எமோஷனுக்கு இடமில்லை" என்றார்.