Published:Updated:

`வருங்கால முதல்வரே...?!' எஸ்.பி.வேலுமணியைக் கலங்கடித்த வாய்ஸ்

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் `அடுத்த முதல்வரே' என வேலுமணியை வாழ்த்திக் கோஷமிட, மொத்த கூட்டமும் அதிர்ச்சியடைந்தது.

S. P. Velumani
S. P. Velumani

அமைச்சர் வேலுமணி இன்று திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும், நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அமைச்சர்கள் காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி ஆகியோர் சகிதமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திருச்சி கே.கே.நகர்ப் பகுதியில் கட்டப்பட்டுள்ள பூங்காவைத் திறந்துவைக்கச் சென்றபோது, அவரை அந்தப் பகுதி மக்கள் சாலைவசதி கேட்டு முற்றுகையிட்டனர்.

S. P. Velumani inspects
S. P. Velumani inspects

தொடர்ந்து அவர், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மதயானைப்பட்டியில் செயல்பட்டுவரும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட நீருந்து நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார். அடுத்து, திருச்சி அஜந்தா ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சி தில்லை நகரில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தைப் பார்வையிட்டார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் `அடுத்த முதல்வரே' என வேலுமணியை வாழ்த்திக் கோஷமிட, மொத்த கூட்டமும் அதிர்ச்சியடைந்தது. அடுத்ததாக, மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள சேராப்பட்டி ஊராட்சி வேலப்புடையான்பட்டியில் நடைபெற்றுவரும் குஜிலியான்குளம் குடிமராமத்துப் பணிகளை ஆய்வுசெய்தார்.

இறுதியாக, திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடலில் அமைச்சர்களுடன் கலந்துகொண்டார். தொடர்ந்து அந்தக் கூட்டத்தில், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்ட அதிகாரிகளுடன் நீர் மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை அண்ணன் எடப்பாடி பழனிசாமி சிறப்பாகச் செய்து வருகிறார். அவர் முதன்முதலில் பொறுப்பேற்றபோது, இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் எனப் பேசினார்கள்.

Ministers in dais.
Ministers in dais.

அவற்றையெல்லாம் கடந்து, மூன்று வருடங்களாகத் தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்றபடி சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் புகழ்ந்து வருகிறார்கள்.

எப்போதும் விளம்பரம் செய்யாத முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். ஒருசிலர் 100 ரூபாய்க்கு வேலை செய்துவிட்டு 1,000 ரூபாய்க்கு விளம்பரப்படுத்திக்கொள்ளும் நபர்களைப்போல் எடப்பாடி இல்லை.

பொதுமக்கள் பெரும்பாலும் எந்தப் பிரச்னை என்றாலும் உள்ளாட்சித் துறையுடன்தான் மிக நெருக்கமாக இருப்பார்கள். அதனால்தான் குடிநீர் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு, உள்ளாட்சித் துறை அதிகாரிகளை அணுகுகிறார்கள். பொதுமக்களுக்கு நேரடி தொடர்புள்ள துறை நமது துறை.

தமிழகத்தில் நிலவிவந்த குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க பல்வேறு திட்டப் பணிகளை அரசு செய்துவருகிறது. அதில் ஏரி, குளங்களைத் தூர்வார முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.500 கோடி நிதி ஒதுக்கினார். இதன்மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

Minister inagurates a Programme.
Minister inagurates a Programme.

2001-06 காலகட்டங்களில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே முதன்முறையாக மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டுவந்தார். அதன்பிறகுதான் நாடு முழுவதும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது குடிநீர்ப் பிரச்னை நிலவுவதால் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமைப்பது தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது.

அதனால் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பொதுமக்களை எளிதில் அணுகி, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஏற்கெனவே அறிவித்தபடி மூன்று மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி அமைக்காத பட்சத்தில் அபராதம் மற்றும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

`இப்போதே உத்தரவு பிறப்பிக்கிறேன்' -  அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

வீடுகள், கட்டடங்களில் அமைக்கப்படும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அந்தந்தப் பகுதி அமைச்சர்கள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்வார்கள். அதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கான ஆய்வுக்கூட்டம் முதன்முதலில் 5 மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு மதுரையில் நடைபெற்றது. தற்போதைய கூட்டத்தில் 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் இரண்டு மாநகராட்சி, 14 நகராட்சி, 70 பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பஞ்சாயத்து அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். அனைவரும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை நிறைவேற்றத் தீவிர பணியாற்ற வேண்டும்.

S. P. Velumani
S. P. Velumani

வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தியதால், அப்பகுதியில் நிலத்தடிநீர் 6 அடியிலிருந்து 12 அடி வரை உயர்ந்துள்ளது. இதைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வானொலி உரையில் தெரிவித்திருந்தார். மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக அக்டோபர் 5-ம் தேதி தமிழக அரசுக்கு விருது வழங்கி இருக்கிறார். மொத்தத்தில் பலராலும் பாராட்டப்படக்கூடிய ஓர் ஆட்சி இப்போது தமிழகத்தில் நடந்துவருகிறது“ என்றார்.