Published:Updated:

தொடர்ந்து கூச்சல்; கேட்கவே இல்லை! - கருணாஸ் ஆதரவாளர்களால் கொதித்த செல்லூர் ராஜு

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வான கருணாஸ், விழா அரங்கினுள் நுழைந்தது முதல் அவரது ஆதரவாளர்கள், கருணாஸை வாழ்த்தி கோஷமிட்டபடியும் விசிலடித்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

ஆதரவாளர்களுடன் கருணாஸ்
ஆதரவாளர்களுடன் கருணாஸ்

முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட அமைச்சர்களில் 4 பேர் விழாவுக்கு வரவில்லை. செல்லூர் ராஜு மட்டுமே பங்கேற்ற இந்த விழாவில் திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸின் ஆதரவாளர்கள் கூச்சல் எழுப்பியதால் கொதிப்பை வெளிப்படுத்தினார் அமைச்சர் செல்லூர் ராஜு.

மேடையில் செல்லூர் ராஜு
மேடையில் செல்லூர் ராஜு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 57-வது குருபூஜை விழா நேற்று பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்தது. பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெறும் அரசு விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜுவைத் தவிர மற்ற 4 அமைச்சர்களும் இந்த அரசு விழாவில் பங்கேற்க வரவில்லை.

ஆதரவாளர்களுடன் கருணாஸ்
ஆதரவாளர்களுடன் கருணாஸ்

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் அரசு விழா தொடங்கியது. விழா மேடையில் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எம்.எல்.ஏ-க்கள் பாண்டி, சதன் பிரபாகர், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளருமான எம்.ஏ.முனியசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி வரவேற்பு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

அப்போது தனது ஆதரவாளர்களுடன் விழா அரங்கினுள் நுழைந்தார் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வான கருணாஸ். அரங்கினுள் நுழைந்தது முதல் கருணாஸ் ஆதரவாளர்கள், அவரை வாழ்த்தி கோஷமிட்டபடியும் விசிலடித்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் சிறிது நேரம் தனது பேச்சை நிறுத்திய வருவாய் அலுவலர் முத்துமாரி மீண்டும் பேசத் தொடங்கினார்.

இதன் பின்னரும் கருணாஸின் ஆதரவாளர்கள் கூச்சலை நிறுத்தவில்லை. இதனால் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் செல்லூர் ராஜு, கூச்சலிட்டவர்களை அமைதியாக இருக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, ``இது தெய்வீக திருமகனாரின் பெருமையைப் போற்றும் அரசு விழா. இதற்கு இடையூறு அளிக்கும் வகையில் கூச்சலிடாதீர்கள். பத்திரிகையாளர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அமைதியாக இருங்கள்'' என கருணாஸ் கூற அவரது ஆதரவாளர்கள் அமைதியானார்கள். ஆனாலும் அவ்வப்போது கோஷம் போட்டுக்கொண்டே இருந்தனர்.

கூச்சலில் ஈடுபட்ட கருணாஸ் ஆதரவாளர்கள்
கூச்சலில் ஈடுபட்ட கருணாஸ் ஆதரவாளர்கள்

இதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ``பதவியில் இருப்பவர்களின் அரசியல் தூய்மைக்கு விளக்கம் கொடுத்த தேவர் ஐயா, தன்னைத் தேடிவந்த மாநில, மைய அமைச்சர் பதவிகளைத் துறந்துவிட்டார். அரசியலில் நுழைவதே பதவி பெறுவதற்காகத்தான் என மாறிவிட்ட இந்த நாளில், தம்மை தேடிவந்த பதவிகளை மறுத்தவர் தேவர் ஐயா. அரசியலில் இவரால் பலன் பெற்றவர்களே ஐயாவை எதிர்த்தனர்.

அன்று மட்டுமல்ல பலன் பெற்றவர்கள் இன்றும் முதுகிலே குத்தக்கூடிய, துரோகம் செய்யக் கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள்'' என தனது அரசியல் எதிரிகள் குறித்து பேசிவிட்டு, மதுரை விமான நிலையத்துக்குத் தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.