Published:Updated:

`இதை வெச்சும் என்னைக் கலாய்ப்பாங்க!'- பிரமாண்ட கேக் தயாரிப்பில் செல்லூர் ராஜு கமென்ட்

மது வகைகளை அந்தக் கலவையில் ஊற்றியபோது, `என்ன இது, வாசம் குப்புன்னு அடிக்குது' என்று செல்லூர் ராஜு சொல்ல உடனிருந்தவர்கள் சிரித்தனர்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

`எங்க அமைச்சர் தொடாத விஷயமே இல்லை. எல்லா விஷயத்திலும் கருத்து சொல்வது, ஆற்றைப் பாதுகாக்க தெர்மாகோல் விடுவது மட்டுமில்லை, கிறிஸ்துமஸ் கேக்கும் தயாரிப்பார்' என்று புளங்காகிதம் அடைகிறார்கள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் விசுவாசிகள்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

ஆம், மதுரை தனியார் ஹோட்டலில் நடந்த கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை வரவேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பிரமாண்ட கேக் தயாரிப்புப் பணியை தொடங்கிவைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு.

செர்ரி பழம், உலர் திராட்சை, முந்திரிப்பருப்பு, பேரீச்சம்பழம், அத்தி, உலர்ந்த பாதாம், பிஸ்தா, ஏலம், கிராம்பு ஆகிய பொருட்களுடன் ஓட்கா, ஒயின், ஜின், ரம், பீர், மொலாசஸ், தேன், வெனிலா எசென்ஸ் ஆகியவைகளை தன் கையால் பிசைந்து தொடங்கிவைத்தார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

மது வகைகளை அந்தக் கலவையில் ஊற்றியபோது, `என்ன இது, வாசம் குப்புன்னு அடிக்குது' என்று செல்லூர் ராஜு சொல்ல உடனிருந்தவர்கள் சிரித்தனர்.

செஃப் அணியும் தொப்பியை வழங்கியபோது, வேண்டாம், `இதை வெச்சு யாராவது கலாய்ப்பார்கள்' என்று மறுத்துவிட்டார். பின்பு மற்ற செஃபுகளுடன் சேர்ந்து நேர்த்தியாக கேக்குக்கான பொருள்களை கலந்துவிட்டு அவர்களைப் பாராட்டினார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

உலகம் முழுவதும் உள்ள பெரிய ஹோட்டல்களில் இதுபோன்று பாரம்பர்யமான முறையில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதாகவும் 150 கிலோ அளவுக்கு தயாரிக்கப்படும் இந்த கேக் கலவைக்குள் வெள்ளி நாணயம் ஒன்றைப் புதைத்துள்ளதாகவும், கேக் வாங்குவோரில் ஓர் அதிர்ஷ்டசாலிக்கு அது கிடைக்கும் என்றும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

டிசம்பர் 25-ம் தேதி விற்பனைக்கு வரும் இந்த கேக்கின் விலை ஒரு கிலோ 999 ரூபாயாம்.