Published:Updated:

``நான் அரசியலுக்கு வருவதை என் தந்தை விரும்பவில்லை!” - `Off The Record' தங்கம் தென்னரசு

கீழடி முதல் சிவகளை வரை தொல்லியல் தளங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் இணைந்து ஒரு பயணத்தை விகடன் மேற்கொண்டது. அப்போது அளித்த நேர்காணலில், `நான் அரசியலுக்கு வருவதை ஒருபோதும் எனது தந்தை விரும்பவில்லை’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

வைகை நாகரிகம் முதல் பொருநை நாகரிகம் வரை தமிழகத்தின் முக்கியத் தொல்லியல் தளங்களுக்கு சமீபத்தில் ஒரு பயணம் மேற்கொண்டோம். தமிழக தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி - தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் இணைந்து அந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. வைகை நாகரிகத்தின் சிறப்புகளுக்கு ஆதாரமாக விளங்கும் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் சமீபத்தில் கண்டறியப்பட்ட தொல்பொருள்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றி நேரில் கண்டறிந்தோம்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

பின்னர், கீழடியிலிருந்து பொருநை நாகரிகத்தின் சிறப்புகளுக்குச் சான்றாக விளங்கும் கொற்கைக்குப் பயணம் மேற்கொண்டோம். அந்த நெடுஞ்சாலைப் பயணத்தின்போது, தனிப்பட்ட விருப்பங்கள், வாழ்க்கையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான மறக்க முடியாத சம்பவங்கள் ஆகியவை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மனம் திறந்தார்.

கார் பயணத்தில் நிகழ்ந்த உரையாடலின்போது, சுவாரஸ்யமான பல விஷயங்களை நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

``நீங்கள் படித்து முடித்தவுடன் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சென்றுவிட்டீர்கள். தந்தை மறைவுக்குப் பிறகுதான் அரசிலுக்கு வந்தீர்கள். ஏன்?” என்ற கேள்விக்கு, ``நான் அரசியலுக்கு வருவதை என் தந்தை ஒருபோதும் விரும்பவில்லை. அரசியலுக்கு வராமல், ஏதோ ஒரு தொழிலை நான் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் என் தந்தையின் விருப்பமாக இருந்தது.

எனவே, படித்து முடித்தவுடன் ஸ்பிக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது என் தந்தை தங்கப்பாண்டியன் அமைச்சராக ஆனார். அமைச்சராக இருந்தபோதே திடீரென அவர் இறந்துவிட்டார். அப்போது இடைத்தேர்தலில் என்னை நிறுத்துவதற்கு தலைவர் கருணாநிதி விரும்பினார். அதனால், வேலையை ராஜினாமா செய்தேன்” என்றார் தங்கம் தென்னரசு.

தங்கம் தென்னரசுவுடனான நேர்காணல்
தங்கம் தென்னரசுவுடனான நேர்காணல்

இந்த நேர்காணலின் முதல் பாகத்தில் திரை இசைப் பாடல்கள், திரைப்படங்கள், பயணங்கள் என்று தனக்குப் பிடித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை தங்கம் தென்னரசு பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

நேர்காணலைக் காண:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு