Published:Updated:

மின்கட்டண விவகாரம்: `அட்டைப்பூச்சி அமைச்சர்', `ஊழல் செந்தில்பாலாஜி'... அ.தி.மு.க vs தி.மு.க

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

`மின் கட்டணம் என்ற பெயரில் மக்கள் பணத்தை அட்டைப்பூச்சியாக உறிஞ்சுகிறார் அமைச்சர் தங்கமணி' என்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி. அமைச்சர் தங்கமணி, `செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து மு.க.ஸ்டாலினே சட்டசபையில் கேள்வி கேட்டுள்ளார்' என்கிறார்.

மின்சார கட்டணக் குளறுபடிகளை விமர்சித்து தி.மு.க - அ.தி.மு.க இடையே நடைபெறும் அறிக்கைப் போர் தமிழக அரசியலையே `ஷாக்'கடிக்க வைத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என இந்த 4 மாதங்களுக்குமாகச் சேர்த்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறித்துதான் இரு கட்சிகளுக்கும் இடையே அறிக்கை சண்டைக்குக் காரணம்.

கொரோனா காலகட்டத்தில், அதிகளவில் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் மின் கட்டண வசூல் முறை குறித்தான தெளிவான விளக்கத்தைத் தொடர்ந்து கொடுத்துவருகிறது. ஆனாலும்கூட அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் நின்றபாடில்லை.

அண்மையில், இந்த மின்கட்டண குளறுபடிகள் பிரச்னை குறித்து அறிக்கை வெளியிட்ட கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி, `மின் கட்டணம் என்ற பெயரில், மின்சார வாரியம் பகல் கொள்ளை நடத்திவருவதாகவும், கட்டண வசூல் என்ற பெயரில் வழிப்பறி செய்துவருவதாக'வும் மிகக் கடுமையாகச் சாடியிருந்தார்.

TANGEDCO
TANGEDCO

கரூர் செல்லாண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாதம்தோறும் மின்கட்டணமாக 50 ரூபாய் செலுத்திவந்ததாகவும் தற்போது ஊரடங்கு காலகட்டமான இந்த 4 மாத காலத்துக்கு அவருக்கு 2.92 லட்ச ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் பில் அனுப்பியுள்ளதாகவும் அறிக்கையில் புகார் கூறியிருந்தார் செந்தில்பாலாஜி.

உடனே மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி, `தி.மு.க-வில் தன் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக அரசு மீது பொல்லாத பழியைச் சுமத்துகிறார் செந்தில்பாலாஜி' என்று காரசாரமாக விமர்சனப் பதிலடி கொடுத்தார். இதையடுத்து, மீண்டும் அமைச்சர் தங்கமணியை விமர்சித்து படுகாட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் செந்தில் பாலாஜி.

தொடர்ந்துவரும் இந்தச் சர்ச்சைகள் குறித்து, செந்தில் பாலாஜியிடம் பேசினோம்...

``ஏற்கெனவே நான் வெளியிட்ட முதல் அறிக்கையில், செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு 2.92 லட்ச ரூபாய் மின் கட்டணம் பில் வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தேன். இப்போது `160 ரூபாய் மின் கட்டணம்' என்று அதிகாரிகள் அந்தப் பில்லை திருத்திக் கொடுத்துள்ளனர். ஆக, ஓர் அறிக்கை கொடுத்து, அது பரபரப்பு செய்தியான பின்பே சம்பந்தப்பட்ட நபருக்கு நியாயம் கிடைத்திருக்கிறது. இப்படி தமிழ்நாடு முழுக்க எத்தனையோ பேர் அதிக மின்கட்டண வசூலால் பாதிப்படைந்துள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் எதிர்க்கட்சியினர் இப்படி தனித்தனியே அறிக்கை கொடுத்துக்கொண்டிருக்க முடியுமா?

என் அறிக்கைக்குப் பதில் அளித்துப் பேசும் மின்சாரத்துறை அமைச்சர், `மின் கட்டண கணக்கெடுப்பில் குளறுபடிகள் இல்லை' என்று சொல்கிறார். அப்படியென்றால், 2.92 லட்ச ரூபாய் பில், வெறும் 160 ரூபாயாக மாறியது எப்படி?

அடுத்ததாக, ஊரடங்கின்போது பொதுமக்கள் அதிக மின் நுகர்வு செய்வதால், மின் கட்டணம் அதிகரித்துவிடுகிறது என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார். கரூர் மாவட்டத்தில், டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. உதாரணத்துக்கு இங்குள்ள ஒரு மில்லில், கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் மொத்தம் 59 நாள்கள் வேலை நடந்திருக்கின்றன. இதற்கான மின் கட்டணமாக 22,100 ரூபாய் கட்டியிருக்கிறார்கள். அடுத்து மார்ச் மாதத்தில் 24-ம் தேதிவரை மட்டுமே மில் இயங்கியிருக்கிறது. ஆனால், மார்ச்-ஏப்ரல் மாத பில்தொகை அவர்களுக்கு 32,000 ரூபாய் வந்திருக்கிறது. மொத்தமாக 2 மாதங்கள் முழுமையாக மில் இயங்கியிருந்தால்கூட 32,000 ரூபாய் வராதே..!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மின்வாரிய கணக்கீட்டு முறையில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றன. ரொம்பவும் தெளிவாக இந்தக் குளறுபடிகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டால், `மின் நுகர்வு கட்டணத்தோடு, டெபாஸிட் தொகையும் சேர்க்கப்பட்டிருப்பதால் கட்டணம் கூடிவிட்டது' என்று சொல்லி சமாளிக்கிறார்கள். அப்படியென்றால், டெபாஸிட் கட்டணம் வசூல் சம்பந்தமாக என்ன அளவுகோல் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அதற்கு சரியான பதில்கள் கிடையாது.

இதற்கான உதாரணத்தையும் சொல்கிறேன்... கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில், ஒரு குடும்பம் வெறும் 80 யூனிட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தியிருந்ததால், 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் கட்டணம் எதுவும் செலுத்தவில்லை. ஆனால், அதே குடும்பம் கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்தில் மின் கட்டணமாக 220 ரூபாய் கட்டியுள்ளது. இந்த நிலையில், தற்போது 4 மாத மின் கட்டணமாக இந்தக் குடும்பத்துக்கு 2,030 ரூபாய் கட்டச்சொல்லி பில் வந்துள்ளது. இதுகுறித்து அக்குடும்பத்தினர் விவரம் கேட்டபோது, `உங்களது மின் கட்டணம் 530 ரூபாய்தான். ஆனால், டெபாஸிட் தொகை 1,500 ரூபாய்' என்று சொல்லியிருக்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.

சாதாரணமாக ஒரு வீட்டுக்கு டெபாஸிட் தொகை இவ்வளவு, தொழிற்சாலைக்கு இவ்வளவு என்று ஒரு தெளிவான வரைமுறை இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், டெபாஸிட் தொகை வசூலிப்புக்கு அப்படி எந்தவிதமான கணக்கீட்டையும் மின்சாரத் துறை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. ஆக, மின்வாரியத்துக்கு எப்போதெல்லாம் பணம் தேவையோ அப்போதெல்லாம் நுகர்வோரிடமிருந்து `டெபாஸிட்' என்ற பெயரில், பணம் வசூல் செய்துவிடுகிறார்கள்.

இத்தனை குழப்பத்துக்கு அடிப்படைக் காரணம் மின் கணக்கீட்டில் இருக்கும் குளறுபடிகள்தான். உதாரணமாக 500 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு ஒருவித கட்டணமும், 500 யூனிட்டுக்கு மேலான மின் பயன்பாட்டுக்கு வேறொரு கட்டணமுமாக வசூல் செய்யும் இந்த நடைமுறைகள் குறித்த தெளிவு அதிகாரிகளிடமேகூட இல்லை. அந்தளவுக்குத்தான் மின்வாரியத் துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

Electricity
Electricity

அடுத்ததாக, குறிப்பிட்ட காலக்கெடுவில் மின்வாரியத்துறை அனைத்து வீடுகளுக்கும் போய் கணக்கெடுக்கவில்லை. எடுத்த கணக்குகளிலும் நிறைய குழப்பங்கள். ஊரடங்கு காலகட்டத்தில் பயன்படுத்தப்படாத மின்சாரத்துக்கு யூகத்தின் அடிப்படையிலேயே கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். டெபாஸிட் தொகையைப் பொறுத்தவரையில், வீடு, கடை, தொழிற்சாலை என்று ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான கட்டண விகிதத்தை அறிவிக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்தால்தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழமுடியும். ஆனால், `மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருந்தால், சட்ட ரீதியாக முறையிட்டு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்' என்ற அமைச்சரின் அறிவிப்புகளெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாதது. `கூடுதல் கட்டணத்தை சட்டரீதியாக சந்திப்போம்' என்று நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எவ்வளவு பேர் முன்வருவார்கள்?

வேலைக்குச் செல்லாமல், வழக்கு விஷயமாகப் போய்வரும் நாள்களில் அவர்களது வருமானம் பாதிக்கப்படுமே? எல்லாவற்றுக்கும் மேலாக, `கரன்ட் கட் செய்துவிடுவார்கள்' என்ற பயத்தில், வட்டிக்குப் பணம் வாங்கியாவது மின் கட்டணத்தைச் செலுத்தத்தானே அவசரம் காட்டுவார்கள். ஏற்கெனவே கொரோனா ஊரடங்கினால், வருமானமின்றி முடங்கிக் கிடக்கும் மக்களை இப்படி மின் கட்டணம் என்ற பெயரில், மக்களின் பணத்தையும் உறிஞ்சி எடுக்கும் அட்டைப்பூச்சி அமைச்சருக்கு இதுவெல்லாம் தெரியாதா?

மின்வாரிய ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ இந்தக் கணக்குகளைக் கூட்டிக் குறைத்து எழுதி, பணத்தை அவர்கள் வீட்டுக்குக் கொண்டுபோய்விட முடியாது. எனவே, அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை அரசுதான் கொடுத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக அரசிடம் இதுகுறித்த தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும்.

மின் கணக்கீடு அட்டவணை
மின் கணக்கீடு அட்டவணை

மின்வாரியக் கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட ஒன்றிரண்டு பேர்களின் பிரச்னைகளை மட்டும்தான் இங்கே பேசியிருக்கிறேன். இதேபோல் ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாடு முழுக்க பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நான் சொல்கிற இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுதான் ஓர் அமைச்சருக்கு அழகு. அதைவிடுத்து, தனிப்பட்ட முறையில் என்னை வசைபாடிக்கொண்டிருப்பது அவருக்கு அழகல்ல'' என்றார் காட்டமாக.

தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசினோம்...

``செல்லாண்டிபாளையத்தில், அதிகப்படியான மின் கட்டணத் தொகை குறிப்பிடப்பட்டிருந்ததாக வந்த செய்தி, ஒரு சின்ன புள்ளி விடுபட்டுபோனதால் வந்த குழப்பம். இந்தத் தவற்றை சம்பந்தப்பட்ட நபர் கண்டுபிடிக்கும் முன்னரே, அதிகாரிகள் கண்டுபிடித்துச் சரிசெய்துவிட்டனர்.

மூன்று மடங்கு, நான்கு மடங்கு மின் கட்டணப் புகார்கள்... உண்மைநிலைதான் என்ன?

இதுபோன்று ஏதேனும் தவறுகள் நேர்ந்துவிடுமாயின், உடனே அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொண்டு முறையிட்டால், திருத்தம் செய்யப்பட்டுவிடும் என்று ஏற்கெனவே பலமுறை நான் தெரிவித்திருக்கிறேன்; அறிக்கையும் வெளியிட்டிருக்கிறேன்.

கொரோனா ஊரடங்கினால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டியதாகிவிட்டது. எனவே, இயல்பாகவே வீட்டு மின் உபயோகமும் அதிகரித்துவிட்டது. மேலும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின் செலவு ஏற்படும்போது, கட்டண விகிதாச்சார முறையின்படி கட்டணமும் அதிகரிக்கிறது. ஆனால், மின்வாரியத்தைப் பொறுத்தவரையில், 4 மாத யூனிட் கணக்கை இரண்டாகப் பிரித்து, அதிலும் முதல் 100 யூனிட்டுகளை இலவச மின்சாரக் கணக்கில் கழித்துவிட்டுத்தான் கணக்கிடுகிறோம். மேலும், ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணம் செலுத்தியிருந்தால், அந்தத் தொகையையும் கழித்துவிட்டு மீதம் உள்ள தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

தங்கமணி
தங்கமணி

இந்தக் கணக்கீட்டில், பொதுமக்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால், தாராளமாக மின்வாரியத்தை அணுகி தெளிவுபடுத்திக்கொள்ளலாம். அங்கேயும் சரியான பதில் கிடைக்கப்பெறாதவர்கள் நேரடியாக என் செல்பேசி எண்ணைக்கூடத் தொடர்புகொள்ளலாம். உண்மையிலேயே எங்கள் மீது தவறு இருந்தால், உடனடியாக அதைக் களைந்துவிட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அடுத்து டெபாஸிட் தொகை வசூலிப்பதிலும் மின்சார வாரியத்துக்கு தெளிவான வரைமுறைகள் இருக்கின்றன. செந்தில்பாலாஜி சொல்வதுபோல் 1,500 ரூபாய் டெபாஸிட் தொகையெல்லாம் வசூலிக்கப்படுவது இல்லை. அதுவும் மின் பயன்பாட்டுக்கான தொகையாகத்தான் இருக்கும். இதுபோன்ற சந்தேகங்கள் கொண்ட மின் அட்டைகளை என்னிடம் கொடுத்தால், நானே இதுகுறித்து விசாரித்து தெளிவான விளக்கத்தை உங்களுக்குத் தருகிறேன்.

வீடுகளில் மின் கட்டணம் அதிகரிக்க காரணம் என்ன? விளக்கம் இதோ!

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களைத் திசைதிருப்பும் நோக்கில், திரும்பத் திரும்ப இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அரசியல் செய்துவருகின்றனர். தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியை நான் வசைபாடியதாக குறை சொல்கிறார். முதலில், அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், என்னைப்பற்றி ரொம்பவும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார். `மின்சாரத் துறை அமைச்சரா அல்லது டாஸ்மாக் அமைச்சரா... எங்கே ஆளையே காணோம்... குழிதோண்டி பதுங்கிக்கொண்டாரா' என்றெல்லாம் ஏளனம் செய்திருந்தார்... இதெல்லாம் நாகரிகமான அறிக்கையா?

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இந்த ஊரடங்கு காலகட்டத்திலும்கூட, காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணிவரையிலும் தமிழ்நாடு முழுக்க பொதுப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஓய்வின்றி ஓடிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து,`எங்கே குழிதோண்டிப் பதுங்கிவிட்டாரா...' என்று கிண்டல் செய்து அறிக்கை வெளியிடுவதுதான் அரசியல் நாகரிகமா? என்னை மட்டுமல்ல... முதல் அமைச்சரையும்கூட அந்த அறிக்கையில் மிக மோசமாக சித்திரித்திருந்தார் செந்தில்பாலாஜி.

இப்படி அறிக்கை என்ற பெயரில், அநாகரிகமான முறையில் விமர்சனம் செய்தவர் அவர். அதற்குப் பதிலடியாகத்தான், வழக்கு விஷயமாக நீதிமன்றப் படியேறிவரும் அவரது விவகாரங்களையும் நான் சொல்லவேண்டி வந்தது. ஏன்... செந்தில்பாலாஜி இப்போது யாரைத் தலைவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாரோ... அந்தத் தலைவரே, செந்தில்பாலாஜியின் ஊழல்கள் குறித்து சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விகளெல்லாம் ஆவணங்களாகவே இருக்கிறதே!'' என்றார் காரசாரமாக.

அடுத்த கட்டுரைக்கு