Published:Updated:

`2014 - 2018... 84 நாடுகள்!' - பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ஆன செலவு விவரங்கள்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2014-ம் ஆண்டில் பிரதமர் பதவியில் அமர்ந்த பிறகு, இவரது முதல் வெளிநாட்டுப் பயணமாகப் பூடான் அமைந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில், அதாவது 2014 - 2018-ம் ஆண்டு வரை மட்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 84 வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுள்ளார். இந்த வெளிநாட்டுப் பயணங்களால் அரசுக்கு ஏற்பட்ட செலவு மட்டும் 1,484 கோடி ரூபாய் ஆகும். இந்தத் தகவல்களை மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங், ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலாக வழங்கியுள்ளார்.

பிரதமரின் பயண செலவுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முறையே, விமானத்தைப் பராமரிப்பதற்கான செலவு, சார்டர்ட் விமானங்களைக் குத்தகைக்கு எடுத்த செலவு மற்றும் ஹாட்லைன் வசதிகள் ஆகியவை ஆகும். இதில் விமானத்தைப் பராமரிப்பதற்காக ஏற்பட்ட செலவு மட்டும் 1,088.42 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி - ஜி ஜின்பிங்... வந்தது முதல் சென்றது வரை!

சார்டர்ட் விமான குத்தகைக்கான செலவு 387.26 கோடி ரூபாயாகும். இது ஜுன் 2018-ம் ஆண்டு வரை ஏற்பட்ட செலவாகும். விமான பராமரிப்புகான செலவுகள் அதே நிலையில் இருந்தாலும் சார்டர்ட் விமான குத்தகைக்கான செலவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், 2015 முதல் 2016 வரை மட்டுமே 117.89 கோடி ரூபாய் விமான குத்தகைகாரர்களுக்கு கைமாறியுள்ளது. இவற்றோடு ஹாட்லைன் வசதிக்காக (2017 வரை) ஏற்பட்ட செலவு 9.12 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ராஜ்ய சபாவில் வி.கே.சிங்கால் அளிக்கப்பட்டுள்ள தகவல் தோராயமானதுதான். இந்தப் பயண செலவுகளில் பிரதமரின் பாதுகாப்புக்காக ஏற்பட்ட செலவுகளின் விவரம் அளிக்கப்படவில்லை.

மோடி பிரதமரான பின், தனது ஆரம்ப காலகட்டத்தில் தீவிரமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். 2015 - 2016-ல் 24 நாடுகளுக்கும், 2016 - 2017-ல் 17 நாடுகளுக்கும், 2017 - 2018-ல் 19 நாடுகளுக்கும் சென்றுள்ளார். இதுவரை 42 முறை பயணம் செய்துள்ள மோடி 84 நாடுகளுக்குச் சென்றுள்ளார். 2014-ம் ஆண்டில் பிரதமராகப் பொறுப்பேற்ற பின், இவரது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடான் அமைந்தது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும் பேசிய அமைச்சர் சிங், "இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தவே மோடி பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். மேலும், இந்திய தலைவராக அதிக நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள மோடி வெளிநாடு தூதரகங்களிடையே நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு