Published:Updated:

`ஏன் இந்தக் குழப்பம்.. நீங்களே மக்களவைக்கு வருவதில்லை..?’ - மோடி உரையும் டெரிக் ஓ பிரையன் கேள்வியும்

டெரிக் ஓ பிரையன்
டெரிக் ஓ பிரையன்

மக்களவைக்கு நீங்களே பலமுறை வருவதில்லை என மோடியைக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவை முன்கூட்டியே அறியும் வசதியோ அதற்கு மருந்தோ இல்லை. கொரோனா நம்மை ஒன்றும் செய்யாது என்று மட்டும் நினைக்காதீர்கள். ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தருணம் இது. இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதேவேளையில் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும். யாரும் மெத்தனமாகச் செயல்படக்கூடாது” என்றார்.

மோடி
மோடி

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், `65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவேண்டாம்” என அறிவுறுத்தினர்.

`வரும் 22-ம் தேதி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!’ - பிரதமர் மோடி #LiveUpdates

இந்நிலையில் பிரதமரின் இந்த உரை குறித்தும் கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன். இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்’ 65 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிற்குள் இருக்குமாறு அரசு தரப்பில் வெளியான அறிக்கை கூறுகிறது. நாடாளுமன்றம் மட்டும் ஏன் நடந்துகொண்டிருக்கிறது. ஏன் இந்தக் குழப்பமான தகவல்கள் வருகிறது. ராஜ்ய சபா எம்.பிக்களில் 44 சதவிகிதம் பேரும் லோக்சபா எம்.பிக்களில் 22 சதவிகிதம் பேரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். எம்.பிக்கள் அரசு அறிவுறுத்தலைப் புறக்கணிப்பதா? நீங்களே பலமுறை நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை” என மோடியைக் குறிப்பிட்டு டெரிக் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மற்றொரு வீடியோ பதிவில், ``நான் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பின்னால் சட்டமேதை அம்பேத்கரின் சிலை உள்ளது. அம்பேத்கர் மிகவும் வருத்தத்துடன் நாடாளுமன்றச் செயல்பாடுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஏனென்றால் நாடாளுமன்றம் பொருத்தமற்ற, காலாவதியான நிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இங்கு தேவையான எந்த விஷயங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்படுவதில்லை. 105 மணிநேரம் செயல்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெறும் 3 சதவிகிதம் நேரம்தான் கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரு பக்கம் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்துகிறீர்கள். அதேநேரம் மற்றொருபுறம் நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது. ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் நீங்கள் கடினமாக உழைப்பதைப் போல் மக்களிடம் காட்டிக்கொள்ளாதீர்கள்.

இந்தியாவில் உள்ள இளம்தலைமுறையினர் நாடாளுமன்றத்தில் என்ன விவாதம் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பிலிருந்து சமவுடைமை ( Socialism) நீக்க வேண்டும் என பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.பி ஒருவர் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விவாதிப்பதா இல்லை நாட்டின் நலன் மீது அக்கறை செலுத்துவதா? பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை. நாடாளுமன்றத்தில் வாயிலாக பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றலாம். நாடாளுமன்றம் வாயிலாக நாட்டு மக்களிடம் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார்.

-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மார்ச் 19-ம் தேதி இரவு 8 மணிக்கு உரையாடவுள்ளார் என்ற தகவலை பிரதமர் அலுவலகம் மார்ச் 18-ம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு குறித்தும் டெரிக் நேற்று கடுமையாகச் சாடியிருந்தார். ``நாடாளுமன்றம் ’ஜனநாயகத்தின் கோயில்’. ஏன் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தேச மக்களுக்கு உரையாற்றக் கூடாதா... நாட்டு மக்களிடம் உரையாற்றக்கூடிய அளவுக்குப் போதுமானதாக இல்லையா? அல்லது முன்பே பதிவு செய்யப்பட்ட வீடியோ செய்தியா?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு