Published:Updated:

“ஆயுசு முழுக்க உழைச்சாலும் கடைசியில வீதிக்குதான் போகணும்!”

ராஜமலை
பிரீமியம் ஸ்டோரி
ராஜமலை

சுரண்டப்படும் தோட்டத் தொழிலாளர்கள்

“ஆயுசு முழுக்க உழைச்சாலும் கடைசியில வீதிக்குதான் போகணும்!”

சுரண்டப்படும் தோட்டத் தொழிலாளர்கள்

Published:Updated:
ராஜமலை
பிரீமியம் ஸ்டோரி
ராஜமலை

‘‘நாலு தலைமுறையா இங்கே இருக்கோம். இந்தக் குளிர்ல, மழையில தேயிலை பறிச்சு, கால் வயிறு கஞ்சி கிடைச்சா போதும்னுதான் இங்கே வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டும்தான் இங்கே வீடு. 58 வயசுக்குமேல வெளியே போயிடணும். எங்களுக்கு எந்தச் சொத்தும் இல்லை. சொந்த ஊர்ல குலசாமியைத் தவிர எந்தச் சொந்தமும் இல்லை. அதனாலதான் எனக்குப் பிறகு என் மகனும் மகளும் தோட்டத்துக்கு வேலைக்குப் போறாங்க. இப்படியே தலைமுறை தலைமுறையா இந்தத் தோட்டத்துலேயே எங்க காலம் கழியுது. ஆயுசு முழுக்க உழைச்சாலும் கடைசியில வீதிக்குத்தான் போகணும். பெட்டிமுடியில நடந்த சம்பவம், நாளைக்கு ராஜமலையில நடக்கலாம். நாங்களும் மண்ணுக்குள்ள போகலாம். எங்களுக்குச் சொந்தமா ஒரு வீடு வேணும். அதுல ஒரு நாள் படுத்து நிம்மதியா தூங்கினாப் போதும். அவ்வளவுதான் எங்க ஆசை’’ - கண்ணீரோடு சொல்கிறார் பெட்டிமுடி அருகேயுள்ள ராஜமலை எஸ்டேட்டில் வசிக்கும் 60 வயது தெரசா.

“ஆயுசு முழுக்க உழைச்சாலும் கடைசியில வீதிக்குதான் போகணும்!”

மூணாறு அருகே அமைந்துள்ள பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு, ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு நிலச்சரிவில் சிக்கியது. இதில் 11 குழந்தைகள், ஒரு நிறைமாத கர்ப்பிணி உட்பட 70 பேர் மண்ணில் புதையுண்டு போயினர். இரண்டு வாரங்களைக் கடந்தும் இன்னும் சிலரின் உடல்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. இப்படியொரு கோரமான சம்பவத்துக்குப் பிறகு, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து குரல்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், அவை மூணாறுக்குள் மட்டுமே எதிரொலித்து, காணாமல் போய்விடுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெரசா, கோமதி
தெரசா, கோமதி

பெட்டிமுடி நிலச்சரிவு இடத்தை ஆய்வு செய்ய கேரள முதல்வர் பினராயி விஜயன் மூணாறு வந்தபோது, அவரின் காரை மறிக்க முயன்றார் கோமதி. 2015-ம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களின் போனஸ் தொகை 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டபோது, பெண்களை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர்தான் இந்த கோமதி. இடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, ‘கட்சியில் தமிழர் - மலையாளி என்ற பாகுபாடு இருக்கிறது’ என்று குற்றம்சாட்டி, 2017-ல் கட்சியிலிருந்து விலகினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறார்.

ராஜேந்திரன், மணி, பாலசிங்கம்
ராஜேந்திரன், மணி, பாலசிங்கம்

கோமதியிடம் பேசினோம். ‘‘125 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய வீடுகளில்தான் இப்போதும் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஒரு சமையலறை, ஒரு ஹால்... இதில்தான் மொத்தக் குடும்பமும் வாழ்க்கை நடத்த வேண்டும். காற்று, மழைக்கு அடிக்கடி கூரை சேதமடையும். தோட்ட நிர்வாகம் வந்து சரிசெய்து கொடுக்கும்வரை காத்திருக்க வேண்டும். கழிப்பறை கிடையாது. ஏதாவது விபத்து ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான சூழல் என்றால்கூட, ஜீப்பில் கரடுமுரடான பாதையில் பல கிலோமீட்டர் பயணித்து மூணாறுக்கு வர வேண்டும். சாலை சரியாக இருந்தால், சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவார்கள்; இந்த மக்களின் நிலை வெளி உலகத்துக்குத் தெரிந்துவிடும் என்பதால் சாலையை மோசமான நிலையிலேயே வைத்திருந்தார்கள்.

இன்னும் சில தேயிலைத் தோட்டங்கள் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் இருக்கின்றன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தோட்ட நிர்வாகத்துடன் அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் இணக்கமான உறவால், தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு என இங்கே அரசியல் கட்சி சார்ந்த சங்கங்கள் உள்ளன. அவர்களும், `தொழிலாளர்களுக்கு நல்லது செய்கிறேன்’ எனக் கூறி ஏமாற்றி வருகிறார்கள். அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான இடத்தில், தரமான வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இதைச் செய்யாவிட்டால், 2015-ம் ஆண்டுபோல, தோட்டத் தொழிலாளர்களைத் திரட்டி, போராட்டம் நடத்துவோம். அதற்குத் தொழிலாளர்களும் தயாராக இருக்கிறார்கள்’’ என்றார் காட்டமாக.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், தேவிக்குளம் எம்.எல்.ஏ-வுமான ராஜேந்திரனிடம் பேசினோம். ‘‘மூணாறு பகுதியில் சுமார் 11,000 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். குடும்பமாகக் கணக்கிட்டால், சுமார் 4,500 குடும்பங்கள் இருக்கும். மாட்டுப்பட்டி அருகே அமைந்துள்ள குட்டியார்வாலி என்ற இடத்தில், நிலம் இல்லாத குடும்பத்துக்கு ஐந்து சென்ட் வீதம் நிலம் கொடுத்து, வீடு கட்ட மூன்று லட்ச ரூபாய் பணமும் கொடுக்கிறது அரசு. முதற்கட்டமாக 1,500 குடும்பங்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டு, சிலர் அங்கு வீடுகட்டி வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 500 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக 1,800 குடும்பங்களுக்கு நிலம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைவருக்கும் இடம் கொடுக்கப்படும். இதில் எந்த அரசியலும் இல்லை. தோட்டத் தொழிலாளர்கள்மீது அரசு அக்கறையுடன் நடந்துகொள்கிறது’’ என்றார்.

“ஆயுசு முழுக்க உழைச்சாலும் கடைசியில வீதிக்குதான் போகணும்!”

இது குறித்து, தோட்டத் தொழிலாளர்களிடம் விசாரித்தால், ‘‘வேலை செய்யுற தோட்டங்கள்லருந்து பல கிலோமீட்டர் தூரத்துல நிலம் கொடுக்குறாங்க. அன்றாடம் வேலைக்குப் போனாத்தான் எங்களுக்குச் சாப்பாடு. ஆபீஸ் வேலை மாதிரி கிடையாது. வீட்டை எங்கேயோ கட்டிட்டு, பொழைப்புக்கு நாங்க என்ன செய்யுறது... எவ்வளவு தூரம் போறது?” என்றார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் தேவிக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.கே.மணியிடம் பேசினோம். ‘‘தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951-ன்படி, ‘தொழிலாளர் களுக்குத் தோட்ட நிர்வாகம் நிரந்தமான இடம் கொடுக்க வேண்டும்’ எனக் கூறப்படவில்லை. எனவே, அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மத்திய அரசுதான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை. மாநில அரசு, கொள்கை முடிவெடுத்து சட்டமன்றத்தில் சட்டம் இயற்றலாம். அதுவரை, இந்தப் பிரச்னை ஓயாது’’ என்றார் அழுத்தமாக.

ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், பெட்டிமுடி நிலச்சரிவு குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்து பலரின் கவனத்தையும் ஈர்த்தது. பாலசிங்கத்தின் கருத்து, மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அளித்த புகாரின்பேரில் மூணாறு போலீஸார் அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ‘‘தோட்டங்களில் வேலை செய்ய தமிழக மக்களை ஆங்கிலேயர் அழைத்துச் சென்றதில் ஆரம்பித்து, இன்றுவரை வேதனையும் கண்ணீரும் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. எத்தனை ஆட்சிகள் மாறினாலும், தொழிலாளர்களின் நிலை அப்படியேதான் இருக்கிறது. அவர்கள் கேட்பதெல்லாம் நிரந்தரமான இடம். அதில் ஒரு வீடு. இதைச் செய்து கொடுக்க முடியவில்லையென்றால், அப்புறம் எதற்கு அரசாங்கம்? முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையின்போது, ‘தமிழர்கள் நிறைந்திருக்கும் தேவிக்குளம், பீர்மேடு பகுதியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்தது. அதோடு, ‘இரண்டு பகுதிகளையும் யூனியன் பிரதேசமாக மாற்றுங்கள்’ எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இவற்றில், ஏதாவது ஒன்று நடந்தால்தான் அங்குள்ள தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்’’ என்றார்.

முதல்வர் நாற்காலிக்குச் சண்டைபோட்டுக்கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்கள், கேரளவாழ் தமிழக மக்கள் படும் துயரத்தைக் கண்டுகொள்ளவில்லை. மிகத் தாமதமாக இப்போதுதான் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயம்பட்டவர்களுக்கும் நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார்கள். தமிழ்வழிச் சொந்தங்களைத் தமிழக அரசு காக்கும் லட்சணம் இதுதானா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism