Published:Updated:

`நிலத்தை விற்க தனி டிரான்ஸ்ஃபார்மர், மின்கம்பங்கள்!'-மின்வாரியத்துக்கே ஷாக் கொடுத்த காய்கறி வியாபாரி

ர.ரகுபதி

மின்வாரியத்திற்குத் தெரியாமல், மின்திருட்டில் ஈடுபட்டதாக முன்னாள் ஒப்பந்தத் தொழிலாளர்மீது புகார் எழுந்துள்ளது.

மின்சாரம்  திருட்டு
மின்சாரம் திருட்டு

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் அருகே உள்ள முள்ளுகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ். மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது, காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தன்னுடைய விவசாய நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பதற்கு முடிவு செய்தார். இதையடுத்து, நிலத்தைப் பிரித்து, ஃபிளாட்டாக மாற்றிவருகிறார்.

மின்சார வாரியம்
மின்சார வாரியம்

இதற்கு மின்இணைப்புப் பெறுவதற்காக மின்வாரிய அலுவலகத்துக்கே தெரியாமல், இரு மின்கம்பங்கள், மின்மாற்றி ஆகியவற்றை அமைத்துவிட்டார். இவர், முன்னாள் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் என்பதால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால், வேகமாக பணி நடப்பதைப் பார்த்த சிலர், முள்ளுக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், 2 புதிய மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்ஃபார்மரை அமைத்து, மின்திருட்டில் ஈடுபட்டுள்ளதை உறுதிசெய்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் ரமேஷ் மீது முள்ளுகுறிச்சி மின்வாரிய அதிகாரி கிருஷ்ணன் புகார் அளித்தார். இந்தப் புகாரைப் பதிவுசெய்த காவல்துறையினர், ரமேஷை அழைத்து விசாரணை நடத்தியதில், தவறுசெய்ததை ஒப்புக்கொண்டு மின்வாரிய அலுவலகத்துக்குச் செலுத்தவேண்டிய 70 ஆயிரத்து 760 ரூபாயை ரமேஷ் செலுத்தியுள்ளார்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

இதுகுறித்து, அப்பகுதி மக்களிடம் பேசியபோது, " சாதாரணமாக ஒருவரது வீட்டிலிருந்து மற்றொருவர் வீட்டுக்கு மின்இணைப்பு எடுத்தாலே, கடுமையான நடவடிக்கை எடுக்குமளவுக்கு மிரட்டும் மின்வாரியத்தினர், 2 மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்ஃபார்மரை அமைத்து மின்திருட்டில் ஈடுபட்டவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கத் தேவையான உபகரணங்களை மின்வாரியத்தில் மட்டுமே வாங்க முடியும். இந்த உபகரணங்கள் தனிநபருக்கு எப்படி கிடைத்தது. இதில், மின்வாரியத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறினர்.

இது குறித்து ரமேஷிடம் விளக்கம் கேட்டபோது, " இந்த விவகாரம் குறித்துப் பேச விரும்பவில்லை" என்றதோடு முடித்துக்கொண்டார்.