அரசியல்
அலசல்
Published:Updated:

மாநிலம்தோறும் என்.ஐ.ஏ அலுவலகம்! - ஆபத்தானதா, அமித் ஷாவின் யோசனை?

அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
அமித் ஷா

சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு இருக்கின்றன. சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறை, மாநிலப் பட்டியலில் இருக்கிறது.

`மத்திய அரசின் கைப்பாவையாக என்.ஐ.ஏ செயல்படுகிறது’ என்று விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், ‘அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ-வுக்கு அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஹரியானாவில் கடந்த அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்ற ‘சிந்தனை அமர்வு’ கூட்டத்தில் அமித் ஷா தெரிவித்த இந்தக் கருத்து தேசிய அளவில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதே என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் நோக்கம். 26.10.2008-ம் தேதி, பாகிஸ்தானிலிருந்து கடல்வழியாக வந்த பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்குப் பிறகு, 2009-ம் ஆண்டு, என்.ஐ.ஏ-வை ஏற்படுத்தியது மத்திய அரசு. புதிய சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ-வுக்கு எல்லையில்லா அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் என்.ஐ.ஏ-வுக்கு மும்பை, சென்னை, கொச்சி, லக்னோ, ஜம்மு உட்பட 14 இடங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த நிலையில்தான், 2024-க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும் என்று அமித் ஷா பேசியிருக்கிறார்.

மாநிலம்தோறும் என்.ஐ.ஏ அலுவலகம்! - ஆபத்தானதா, அமித் ஷாவின் யோசனை?

அச்சமாக இருக்கிறது!

“சி.பி.ஐ-யைவிட மேம்பட்ட ஒரு விசாரணை அமைப்பு வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ., மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் ‘அரிதிலும் அரிதான’ வழக்குகளை மட்டுமே கையாண்டது. ஆனால், மோடி ஆட்சியில் சாதாரண வழக்குகளைக்கூட என்.ஐ.ஏ விசாரிக்கிறது” என்று குற்றம்சாட்டுகிறார், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.

“2009 முதல் 2014 வரை நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 13 வழக்குகளை மட்டுமே என்.ஐ.ஏ பதிவுசெய்தது. ஆனால், 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 34 வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறது. மிக மிகச் சாதாரண வழக்குகளைக்கூட என்.ஐ.ஏ விசாரிக்க ஆரம்பித்ததுதான் அதற்குக் காரணம். மதுரையில், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர், ‘நமக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது?’ என்று சுதந்திர தினத்தன்று முகநூலில் ஒரு பதிவு போட்டார். அது குறித்து மதுரை காவல்துறை ஒரு வழக்கு பதிவுசெய்தது. அந்த வழக்கைக்கூட என்.ஐ.ஏ எடுத்துக்கொண்டிருக்கிறது.

ஜார்க்கண்ட்டில் பழங்குடி மக்களுக்கு சேவையாற்றிவந்த பாதிரியார் ஸ்டான் சுவாமியை என்.ஐ.ஏ கைதுசெய்தபோது, அதற்கு ஜார்க்கண்ட் மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதை மீறி ஸ்டான் சுவாமியை என்.ஐ.ஏ கைதுசெய்தது. அவர் சிறையிலேயே மரணமடைந்துவிட்டார். எல்லா மாநிலங்களிலும் என்.ஐ.ஏ-வுக்கு அலுவலகங்கள் அமைக்கப்பட்டால், அதனால் ஏற்படவிருக்கும் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது” என்கிறார் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.

மாநில உரிமைகள் பாதிக்கப்படும்!

என்.ஐ.ஏ-வின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்) பொதுச்செயலாளரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான வீ.சுரேஷிடம் பேசினோம்.

“சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு இருக்கின்றன. சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறை, மாநிலப் பட்டியலில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, மாநில அரசுக்குத் தெரிவிக்காமலோ, மாநில அரசின் அனுமதி இல்லாமலோ விசாரணை, கைது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு என்.ஐ.ஏ-வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல மாநிலங்களில் கூட்டாட்சியைச் சிதைக்கும் வகையிலும், மாநில உரிமையை பாதிக்கும் வகையிலும் என்.ஐ.ஏ செயல்பட்டுவருகிறது. மாநில அரசைக் கேட்காமலேயே பல வழக்குகளை என்.ஐ.ஏ எடுத்துக்கொள்கிறது. இது மிக ஆபத்தான போக்கு.

என்.ஐ.ஏ பற்றிப் பேசும்போது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான ‘உபா’ (UAPA) பற்றியும் பேசவேண்டியது அவசியம். தடா, பொடா ஆகியவற்றைப்போலவே உபா-வும் ஒரு கொடுங்கோல் சட்டம். 2009 முதல் 2022 வரை என்.ஐ.ஏ-வால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் 78 சதவிகிதம் உபா சட்டத்தின் கீழ் பதிவானவை. காவல்துறையால் பதிவுசெய்யப்படும் உபா வழக்குகளை, மாநில அரசின் அனுமதியைப் பெறாமல் தாமாகவே என்.ஐ.ஏ எடுத்துக்கொள்கிறது. அனைத்து மாநிலங்களிலும் அலுவலகங்கள் திறக்கப்பட்டால், என்.ஐ.ஏ-வின் தலையீடு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. அதனால் என்ன ஆபத்து ஏற்படுமென்றால், என்.ஐ.ஏ-வால் விசாரிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி, ஒரு மாநில அரசைக் கலைப்பதற்குக்கூட வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் வீ.சுரேஷ்.

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, வீ.சுரேஷ், கண்ணதாசன்,  நாராயணன் திருப்பதி
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, வீ.சுரேஷ், கண்ணதாசன், நாராயணன் திருப்பதி

தேசப்பாதுகாப்பு முக்கியம்!

தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான கண்ணதாசனிடம் பேசினோம். “மாநிலம், தேச எல்லைகளைக் கடந்த தீவிரவாதச் செயல்பாடுகளைத் தடுப்பதற்கு என்.ஐ.ஏ அமைப்பு கட்டாயம் தேவை. அதனால்தான், கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். அதேநேரத்தில், `மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக என்.ஐ.ஏ செயல்படுகிறது. அரசியல் பழிவாங்கலுக்காக அது பயன்படுத்தப்படுகிறது’ என்ற குற்றச்சாட்டுகளையும் மறுக்க முடியாது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக என்.ஐ.ஏ-வை மத்திய பா.ஜ.க அரசு பயன்படுத்துகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், என்.ஐ.ஏ-வை வைத்து ‘விளையாடுவதற்கு’ தி.மு.க அரசு இடம் கொடுக்கவில்லை. அதனால், இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்கிறார் கண்ணதாசன்.

இந்தக் குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “இந்தியாவின் தேசப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவே என்.ஐ.ஏ ஏற்படுத்தப்பட்டது. எனவேதான், என்.ஐ.ஏ சட்டத்தை தி.மு.க-வே ஆதரித்தது. சர்வதேச அளவில் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டறிந்து தடுப்பதற்கு இப்படிப்பட்ட அமைப்பு அவசியம் தேவை. அதற்குத் தேவையான அதிகாரமும் கட்டமைப்பும் அவசியம். அதனால்தான், `அனைத்து மாநிலங்களிலும் அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்’ என்று அமித் ஷா கூறுகிறார். அரசியல் காரணங்களுக்காக என்.ஐ.ஏ செயல்பாடுகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ள வேண்டும். தேசப்பாதுகாப்புதான் நமக்கு முக்கியம்” என்றார் நாராயணன் திருப்பதி.

எண்ணம் சரியாக இருந்தால்தான் செயலும், அதன் விளைவும் சிறப்பாக இருக்கும்!