Published:Updated:

பெண் காவலரின் சர்ச்சைப் பேச்சு; கண்டித்த ப.சி! - உயர் அதிகாரிக்கு கனிமொழியின் வேண்டுகோள்

கனிமொழி
கனிமொழி

சென்னை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் ஒருவர் கனிமொழி எம்.பி-யிடம் நடந்துகொண்டவிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ``அந்தப் பெண் காவலர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்" எனத் தொழில்பாதுகாப்புப் படை உயர் அதிகாரியிடம் பேசியிருக்கிறார் கனிமொழி.

இதன் பின்னர், இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டவர். ``எனக்கு இந்தி தெரியாததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரியிடம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினேன். அதற்கு அவர், நீங்கள் இந்தியர்தானே? என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து முடிவு செய்யப்பட்டது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் பதிவு நேற்று விவாதப் பொருளாக மாறியது. சமூக ஊடகங்களில் அந்தப் பெண் காவலருக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் பதிவானது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்
மாதிரிப் படம்

நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தி.மு.க எம்.பி கனிமொழி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்குச் சென்றார். அப்போது பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டுச் செல்லும்போது, அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்) தலைமை பெண் காவலர் ஒருவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கனிமொழியிடம் இந்தியில் விவரித்துள்ளார். இதற்கு பதிலளித்த கனிமொழி, ``நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்" எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் காவலர், ``நீங்கள் இந்தியர்தானே?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார். இந்தப் பதிலால் கனிமொழி பெரிதும் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் கனிமொழி இறங்கியபோது, சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்கு சி.ஐ.எஸ்.எஃப் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை, தனது ட்விட்டர் பதிவில், ``உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கொள்கை அல்ல" எனப் பதிவிட்டிருந்தது.

கனிமொழி
கனிமொழி

இதனால் அந்தப் பெண் காவலரின் வேலைக்குச் சிக்கல் வரலாம் என்ற பேச்சு எழுந்தது. இந்தநிலையில், இன்று காலை மத்திய தொழில்பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி ஸ்ரீராமைத் தொடர்புகொண்டு பேசினார் கனிமொழி. அப்போது, ``அந்தப் பெண் காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம். இனிமேல் இதுபோல் நடந்துகொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தால் போதுமானது" எனக் கூறியிருக்கிறார். இதனை டி.ஐ.ஜி-யும் ஏற்றுக் கொண்டார். விமான நிலைய சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கனிமொழிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.

`விமான நிலைய இந்தி சர்ச்சை!’- கனிமொழி புகார்; விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு #NowAtVikatan

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது பதிவில், ``திருமதி கனிமொழி எம்.பி அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது. இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும். மத்திய அரசுப் பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இந்தச் சம்பவம் குறித்து தி.மு.க வட்டாரத்தில் சிலரிடம் பேசியபோது, `` விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கனிமொழியை விமான நிலையத்தில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள். விமான நிலைய நடைமுறைகளையும் கனிமொழி நன்கு அறிவார். பெண் காவலர் அப்படி நடந்துகொண்ட விதம் தவறானது. இதில் உண்மை நிலை என்ன என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என்கின்றனர்.

``விமான நிலையத்தில் மொழி அரசியல் சரிதானா?" என தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனிடம் கேட்டோம். `` விமான நிலைய பெண் காவலர் அப்படிப் பேசியிருந்தால் அது தவறானது. இந்தச் சம்பவத்தில் விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.எஸ்.ஐ. எஃப் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

அதேநேரம், இந்த ஒரு சம்பவத்தை வைத்து ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்றெல்லாம் கொண்டு வரப் பார்ப்பதாகச் சொல்கிறார் கனிமொழி. ஒரு காவலரின் கருத்தை வைத்து மொத்த இந்தியாவே இப்படிப்பட்டதுதான் என வரையறுப்பது சரியானதல்ல" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு