பிரீமியம் ஸ்டோரி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது என்பதை நாடே அறியும். காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு ‘இம் என்றால் சிறைவாசம்... ஏன் என்றால் வனவாசம்’ என்பதுபோல ஒரு ‘கப்சிப் தர்பாரை’ அவர் நடத்தினார். இந்தியாவிலேயே மிக அதிகமாகக் காவல்துறையை துஷ்பிரயோகம் செய்த அரசாக எடப்பாடி அரசு இருந்திருக்கிறது என்பதை, சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பக (என்.சி.ஆர்.பி) அறிக்கையின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

 - முனைவர் ரவிக்குமார் எம்.பி
- முனைவர் ரவிக்குமார் எம்.பி

மேற்கண்ட அறிக்கை மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. மூன்றாவது தொகுதியில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்வரும் குற்றங்களுக்காக 2020-ம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலவாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு தொடர்பான விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் 2020-ல் மட்டும் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் 3,309 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இடம் இது. 18-30 வயதுகொண்டோரில் கைதுசெய்யப்பட்ட 5,39,967 பேரில் பெண்கள் 25,311 பேர். இந்தியாவிலேயே அதிகமான இளம்பெண்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில்தான். ஒட்டுமொத்தமாக இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களையும் சேர்த்து 78,309 இளம்பெண்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 25,311 பேர். அதுபோலவே 30-45 வயதுக்கு உட்பட்டவர்களில் 33,960 பெண்களும், 45-60 வயதுக்கு உட்பட்டவர்களில் 18,276 பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் 45-60 வயது பிரிவில், ஒட்டுமொத்தமாகக் கைதுசெய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 42,391. ஏறத்தாழ அதில் பாதி அளவு பெண்கள் தமிழ்நாட்டில் மட்டும் கைதுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளில் 2,601 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவிலும்கூட இந்தியாவிலேயே அதிகமாகப் பெண்களைக் கைதுசெய்திருப்பது தமிழ்நாட்டில்தான்.

என்.சி.ஆர்.பி அறிக்கையை ஆய்வு செய்யுமா தமிழக அரசு?

ஒட்டுமொத்தமாக 2020-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 12,65,627 ஆண்களும், 80,151 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக மிக அதிகமாகும். அ.தி.மு.க ஆட்சியின் கடைசி ஆண்டில் மக்களுக்கு எதிராக மிக மோசமான முறையில் காவல்துறை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததையே இது காட்டுகிறது. ஒருவரைக் கைதுசெய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநில அரசு என்ற வழக்கில் (1996) உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்துள்ளது. அந்த வழிகாட்டுதல் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு கடந்த 2021, ஆகஸ்ட் 20-ம் தேதி பிறப்பித்த ஆணையில், ‘கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே ஒருவரைக் கைது செய்யக் கூடாது. அது ஒருவரது மனித உரிமைகளைப் பறிப்பதாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது குற்றம்சாட்டப் பட்டவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 170-ஐ விசாரணை நீதிமன்றங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனன” எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், “குற்றம்சாட்டப்பட்டவரைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமென்றால், அவர் சாட்சிகளைக் கலைப்பார் அல்லது தலைமறைவாகிவிடுவார் என்றால் மட்டும்தான் கைதுசெய்ய வேண்டும்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் அந்த அறிவுறுத்தலையும்கூட நமது மாநில அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.

என்.சி.ஆர்.பி அறிக்கையை ஆய்வு செய்யுமா தமிழக அரசு?

ஒருபுறம் காவல்துறை மூலமாக இப்படி அடக்குமுறையை ஏவிவிட்ட அ.தி.மு.க அரசு, மறுபுறம் மதவாத சக்திகளையும், சாதியவாத சக்திகளையும் ஊக்குவித்தது. அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தலித் மக்கள்தான். தென்னிந்திய மாநிலங்களிலேயே தலித் மக்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வன்கொடுமைகள் நடைபெற்ற மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாட்டுக்கு வாங்கித் தந்த ‘பெருமை’ எடப்பாடி பழனிச்சாமியையே சேரும். தலித் மக்களுக்கு எதிராக 2019-ம் ஆண்டில் 1,144 தாக்குதல்கள் இங்கே நடந்திருந்தன. அது 2020-ம் ஆண்டில் 1,274 தாக்குதல்களாக அதிகரித்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1,237. அதில் பாதிக்கப்பட்டவர்கள் 1,377 பேர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 68 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தென்னிந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமாகும். ஒட்டுமொத்த இந்தியாவில் தலித் படுகொலைகளில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தை வகிக்கிறது.

தலித் பெண்கள் மீதான தாக்குதலில் துன்புறுத்துவது, கண்ணியக் குறைவாக நடத்துவது போன்ற குற்றங்களைவிடவும் தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. 2020-ம் ஆண்டில் 123 தலித் பெண்கள் தமிழ்நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 35 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். 88 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுமியர். தலித் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்களில் இந்தியாவிலேயே 5-வது இடத்தில் தமிழ்நாடு இருப்பது வெட்கக்கேடானது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காவல்துறை அடக்குமுறையானாலும், சாதிய வன்கொடுமையானாலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ‘அம்மா’ பெயரைச் சொல்லி நடத்தப்பட்ட ஆட்சி, பெண்களுக்கு எதிரான அராஜக ஆட்சியாக இருந்ததால் அ.தி.மு.க-வுக்குத் தேர்தலில் மக்கள் தக்க பாடத்தைப் புகட்டிவிட்டனர். ஆனால், அந்த அராஜகங்களைச் செயல்படுத்திய அதிகார வர்க்கம் அதற்கும் தனக்கும் தொடர்பே இல்லை என்பதுபோல் அப்படியேதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்.சி.ஆர்.பி அறிக்கைகளை நமது மாநில காவல்துறை கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவே தெரியவில்லை.

Source: NCRB Report
Source: NCRB Report

அ.தி.மு.க ஆட்சியின் அத்துமீறல்கள் இந்த ஆட்சியில் தொடராமல் இருக்க வேண்டுமென்றால் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறைத் தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளோடு என்.சி.ஆர்.பி அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும். சமூகத்தின் நலிந்த பிரிவினரான பெண்கள் மற்றும் தலித்துகளின் பாதுகாப்புக்காகச் சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு