Published:Updated:

கனமழை எதிரொலி - தாம்பரத்தில் மீட்புப் பணிகளைத் தொடங்கியது தேசிய பேரிடர் மீட்பு ஆணையக் குழு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

தாம்பரம், பெரும்பாக்கம் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகக் கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, அப்பகுதிகளில் இருக்கும் வீடுகளை மழைநீர் சூழத் தொடங்கியிருக்கிறது. இப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இறங்கியிருக்கிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கனமழையால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 4 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்து, தற்போது சென்னைக்கு அருகே கடையைக் கடந்திருக்கிறது. மேற்கு வடமேற்கு திசையிலிருந்து நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக நாளை வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால், பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதி கனமழை காரணமாகச் சென்னை, தாம்பரம் பகுதியில் அதிகப்படியாக 23 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

தாம்பரம் பகுதியில் மழை பாதிப்பு
தாம்பரம் பகுதியில் மழை பாதிப்பு

தாம்பரம், பெரும்பாக்கம் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்காரணமாக, வீடுகளை மழைநீர் சூழத் தொடங்கியிருக்கிறது. இப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்... அவதிக்குள்ளான நோயாளிகள்!

தாம்பரம் பகுதிகளில் நடந்த மீட்புப் பணிகள் குறித்தும், செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உதவி ஆணையர் முகமது அஸ்லாமிடம் பேசினோம். ``தாம்பரம், பெரும்பாக்கத்தில் தலா ஒரு டீம் இருக்கிறது. அதில் மொத்தம் 44 பேர் இருக்கிறோம். சென்னையின் மையப்பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதுமே தாம்பரம், பெரும்பாக்கம் பகுதிகளில் ஏதும் பாதிப்புகள் வந்தால் அதை உடனடியாகச் சரி செய்வதற்காக எங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டோம். நேற்றுதான் காற்றின் திசைவேகம் சற்று அதிகரித்து தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழியத் தொடங்கியது. ஏரிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்களை எச்சரித்துப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினோம். தண்ணீர் புக வாய்ப்பிருக்கும் வீடுகளைக் கண்டறிந்து அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தினோம்.

மீட்புக்குழுவுடன் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உதவி ஆணையர் முகமது அஸ்லாம்
மீட்புக்குழுவுடன் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உதவி ஆணையர் முகமது அஸ்லாம்

இன்றைக்கு பெரும்பாக்கம் பகுதியில் சில வீடுகளில் அதிகளவு மழை நீர் புகுந்துவிட்டது. உடனடியாக அங்கு சென்ற என்னுடைய டீம் அப்பகுதி மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்தோம். அப்படி மீட்டவர்களில் வயதானவர்கள் முதல் பிறந்து பத்து நாளே ஆன குழந்தை வரை இருந்தனர்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய அவர், ``முடிச்சூர் பகுதி சற்றுத் தாழ்வான பகுதி. அப்பகுதியில் இருக்கும் அணை திறக்கப்பட வாய்ப்பிருப்பதால் முடிச்சூர் பகுதியில் ஆய்வு செய்து எந்தெந்த ஏரியாவில் மழை நீர் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு இருக்கிறதோ அப்பகுதி மக்களை அங்கிருந்து அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருக்கிறோம். தாம்பரம், பெரும்பாக்கம் பகுதியில் இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், காவல்துறை, கிராம நிர்வாக அதிகாரிகள் என அனைவரிடமும் என்னுடைய தொடர்பு எண் இருக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட அல்லது அதிக பாதிப்பு ஏற்படும் எனச் சந்தேகம் உள்ள பகுதிகளில் இருப்பவர்கள் என்னைத் தொடர்புகொண்டால் உடனடியாகச் சென்று உதவுவதற்கு ஆயத்தமாகவே இருக்கிறோம். அதற்காக என்னுடன் இரண்டு டீம் இருக்கிறது.

பேரும்பாக்கத்தில் மீட்புப் பணி
பேரும்பாக்கத்தில் மீட்புப் பணி

மக்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசு சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. இதுவரை நாங்கள் எந்த அடிப்படை உதவிகளையும் யாருக்கும் செய்யவில்லை. ஆனால், அரசு உத்தரவிட்டால் அதையும் செய்வதற்காகத் தயாராகவே இருக்கிறோம்" என மேற்கொண்ட, மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு