Published:Updated:

`மெரினா புரட்சி' முதல் மொழிப் பிரச்னை வரை... மார்க்கண்டேய கட்ஜுவும் தமிழர்களும்!

markandey katju
News
markandey katju ( fb / @Markandeykatju )

நீண்ட நாள்களாக தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துவந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் ஃபேஸ்புக் கருத்து தமிழ் நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன பதிவு... அதிருப்தி ஏன்... விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

அண்ணாவின் கேள்வி!
``இந்தியாவில், இந்திதான் அதிகம் பேசப்படுகிறது என்பதால்தான் அது தேசிய மொழியாக்கப்பட்டது என்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் மயில் ஏன் தேசியப் பறவை ஆக்கப்பட்டது. உண்மையில், பெரும்பான்மையாக இருப்பது காகங்கள்தானே'' என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் அண்ணா.

அண்ணாவின் கருத்துக்கு பதில் பேச முடியாமல் அனைவரும் வாயடைத்துப் போனார்கள். இதேமாதிரியான சில கமென்ட்டுகள் தற்போது ஒரு ஃபேஸ்புக் பதிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. அந்தப் பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜு. அந்தப் பதிவு...

அனைத்து மொழிகளும் மதிக்கப்பட வேண்டுமென்றாலும், உண்மையில் இந்திதான் இந்தியாவை இணைக்கும் மொழி. இம்மொழி, இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் அதிகம் பேசப்படுகிறது. மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம், காஷ்மீர், தெலங்கானா, வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இந்தி பேசப்படுகிறது. ஏன் பாகிஸ்தானிகள்கூட இந்திதான் பேசுகிறார்கள். ஆனால் அதை, `உருது’ என்றழைப்பார்கள். அனைத்து இந்தியர்களும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அது திணிக்கப்படக் கூடாது.
மார்க்கண்டேய கட்ஜுவின் ஃபேஸ்புக் பதிவு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தன்னிடம் இந்தியில் பேசிய மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) தலைமை பெண் காவலர் ஒருவரிடம், ``நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்" என்று கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் காவலர், ``நீங்கள் இந்தியர்தானே?'' என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று #HindiImposition என்ற ஹேஷ்டேக் உடன் ட்விட்டரில் இந்தச் சம்பவம் குறித்துப் பதிவிட்டார் கனிமொழி. கனிமொழியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பல விவாதங்களைக் கிளப்பியது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இந்தி மொழி குறித்த பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. இந்தப் பதிவுக்கு தமிழ், வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளைப் பேசும் பலரும் தங்களது பதில் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்தனர். அவற்றில் பல கமென்ட்டுகளுக்கு ரிப்ளை செய்திருந்தார் மார்க்கண்டேய கட்ஜு. அவற்றில் சிலவற்றை முதலில் பார்த்துவிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ``நீங்கள் `Should Learn' என்கிற பதத்தைப் பயன்படுத்தியுள்ளீர்கள். `கற்றுக்கொள்ள வேண்டும்' என்று சொல்வது நிச்சயம் திணிப்புதான்’ என்று கமென்ட் செய்திருந்தார். காஷ்மீரைச் சேர்ந்த சிலர் `நாங்கள் காஷ்மீரி மற்றும் உருதுதான் பேசுவோம்' என்று சொல்ல, அவர்கள் அனைவருக்கும் `உருது, இந்தி இரண்டும் ஒன்றுதான். எழுத்து வடிவம்தான் வேறு' என்று ரிப்ளை செய்திருந்தார் கட்ஜு. மேலும் ` `இந்தி மொழி இந்தியாவை இணைக்கிறது’ என்கிறீர்கள். ஆங்கிலம் கற்றுக்கொண்டால் உலகம் முழுவதும் சென்று பேசலாமே... ஏன் இந்தியை மட்டும் சொல்கிறீர்கள்?'’ என்பது போன்ற நிறைய கமென்ட்டுகள் வந்திருந்தன. அந்த கமென்ட்டுகளுக்கு ``இந்தியாவில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் 5 முதல் 10 சதவிகிதம் பேர்தான். ஆனால், இந்தி தெரிந்தவர்கள் 50 சதவிகிதம் பேர்" என்று பதிலளித்திருந்தார் கட்ஜு.

கட்ஜுவின் இந்த பதிலுக்கு அண்ணா பாணியில் சிலர் பதிலளித்திருந்தனர். ``இந்தியாவில் புலிகளைவிட நாய்கள்தான் அதிகம். அதற்காக நாய்களை தேசிய விலங்காக அறிவிக்கலாமா?" என்று பதிவிட்டிருந்தார் ஒருவர். மற்றொருவர், ``இந்தியாவில் நீதிபதிகளைவிட திருடர்கள்தான் அதிகம். அதற்காகத் திருடர்களை நீதிமன்றத்தில் நீதிபதிகளாக அமர்த்திவிடலாமா?" என்று கேட்டிருந்தார். இவ்வாறு விவாதங்கள் நீண்டுகொண்டே போனதைத் தொடர்ந்து இன்னொரு பதிவைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார் கட்ஜு.

``கடைசியாகப் பதிவிடப்பட்ட என் ஃபேஸ்புக் பதிவின் மூலம் நான் இந்தியை யார் மீதும் திணிக்கவில்லை. உண்மையில், நான் அத்தகைய திணிப்புக்கு எதிரானவன். அதேநேரத்தில், `இந்திய மக்கள் தாமாக முன்வந்து இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற கருத்தை முன்வைக்க நிச்சயமாக எனக்கு உரிமை உண்டு.
மார்க்கண்டேய கட்ஜு

மார்க்கண்டேய கட்ஜு, தனது முதல் பதிவுக்கு வந்த எதிர்ப்புகள் காரணமாகத்தான் மேற்கண்ட இப்பதிவை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த இரண்டு பதிவுகளின் கமென்ட்டுகளிலும் கட்ஜுவின் கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகளை அதிகம் பதிவிட்டவர்கள் தமிழர்கள்தான். இதன் காரணமாக கட்ஜுவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சில தமிழர்களின் பதிவுகளையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார் கட்ஜு.

மார்க்கண்டேய கட்ஜூ
மார்க்கண்டேய கட்ஜூ

அந்தப் பதிவுகளில், ``நீங்கள் சொன்னது சரிதான். அனைத்துத் தமிழர்களும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இங்கு அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளும் அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியைத் தடுத்து நிறுத்துகிறார்கள்" என்ற கருத்துகள் உள்ளடங்கிய சில பதிவுகளைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காப்பி பேஸ்ட் செய்திருந்தார் கட்ஜு. அதில் ஒரு பதிவில், ``புதிய கல்விக் கொள்கையை மாநிலங்களின் தலையீடு இல்லாமல் நடைமுறைப்படுத்தினால், அனைவருக்கும் நல்லதாக அமையும்" என்ற கருத்தும் இருந்தது.

மற்ற தமிழர்களின் பதிவுகளைத் தன் பக்கத்தில் பதிவிட்டதற்கிடையில், தன் சொந்தப் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார் கட்ஜு. அதில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்...

தமிழர்கள் ஏன் இவ்வளவு சினமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. யாரும் அவர்கள்மீது இந்தியைத் திணிக்கவில்லை. நீங்கள் இந்தி கற்றுக்கொள்ள விரும்பினால் கற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். தனிப்பட்ட முறையில் நான் இந்தி கற்றுக்கொள்ள அவர்களுக்கு அறிவுறுத்துகிறேன் (முதல் மொழியாக இல்லாவிட்டால், இரண்டாவது மொழியாக). இந்தி, இந்தியாவின் இணைப்பு மொழி. 50 சதவிகித மக்களால் பேசப்படும் மொழி. ஆனால், கற்றுக் கொள்வது உங்கள் விருப்பம். இது என்னுடைய சொந்தக் கருத்து. இதற்கு நீங்கள் உடன்பட வேண்டுமென்ற அவசியமில்லை.
மார்க்கண்டேய கட்ஜு

முதலில் பொதுவாக `அனைத்து இந்தியர்களையும் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டவர், பின்னர் தமிழர்களுக்கு மட்டும் `இந்தி கற்றுக்கொள்ள அறிவுறுத்துகிறேன்' என்று பதிவிட்டது தமிழ்ச் சமூக வலைதளவாசிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களிலுள்ள தமிழர்கள் பலரும் கமென்ட்டுகளில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். அவர்களில் சிலர் `அதிகம் பேருக்குச் சென்று சேர வேண்டுமென்பதால் நீங்களே உங்கள் எல்லா கருத்துகளையும் ஆங்கிலத்தில்தான் பதிவு செய்து வந்துள்ளீர்கள். இந்தியில் செய்யவில்லையே?' என்றும், இன்னும் சிலர், ``நீங்கள் உங்கள் கருத்துகளை இந்தியில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும். அப்போதுதான் இது போன்ற கருத்துகளை நாங்கள் கண்டுகொள்ளாமல் செல்வதற்கு வசதியாக இருக்கும்" என்றும் ரிப்ளை செய்திருந்தனர்.

காஷ்மீரைச் சேர்ந்தவரான கட்ஜு, நவம்பர் 2004 முதல் அக்டோபர் 2005 வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். `மெரினா புரட்சி’ என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி பல்வேறு விஷயங்களில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகப் பேசிய காரணத்தால், மார்க்கண்டேய கட்ஜுவுக்கு தமிழர்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு.

மார்க்கண்டேய கட்ஜு
மார்க்கண்டேய கட்ஜு

2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு என் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகம் மட்டுமன்றி இந்தியாவுக்கே தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது என்பதைத் தமிழக இளைஞர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். தமிழர்கள் ஏற்றிய இந்தத் தீப்பொறி நாடு முழுவதும் பரவி, எல்லாப் பிரச்னைகளையும் முறியடிக்கப் போகிறது" என்று பதிவிட்டிருந்தார் மார்க்கண்டேய கட்ஜு.

மேலும், அந்தப் பதிவில், ``எனக்கு மறுபிறவிமீது நம்பிக்கை கிடையாது. அப்படி மறுபிறவி இருப்பதாக வைத்துக்கொண்டால், முந்தைய பிறவிகள் ஒன்றில் நான் நிச்சயம் தமிழனாகவும் பிறந்திருப்பேன். நான் எப்போது தமிழ்நாட்டுக்குச் சென்றாலும் எனது சொந்த ஊருக்குச் செல்வது போன்ற உணர்வுதான் ஏற்படும்.

எனக்குத் தமிழ்நாட்டில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். என் மீது தமிழர்கள் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்துள்ளனர். இது போன்ற அன்புள்ளமும் பெருந்தன்மையும் தமிழர்களிடம் இருப்பதால்தான் நான் தமிழர்களைச் சந்திக்கும்போதெல்லாம் `நானும் ஒரு தமிழன்’ என்று அடிக்கடிப் பெருமையுடன் சொல்லிக் கொள்வதுண்டு.

தமிழர்கள் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்கள் வாழ்க" என்று கட்ஜு குறிப்பிட்டிருந்தார்.

நானும் ஒரு தமிழன்!
மார்க்கண்டேய கட்ஜு
ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜல்லிக்கட்டு போராட்டம்
அந்தச் சமயத்தில் இந்தப் பதிவை மிகப்பெரிய அளவில் கொண்டாடித் தீர்த்தனர் தமிழக நெட்டிசன்கள். `அவரைத் தமிழக ஆளுநராக நியமிக்கலாம்’ என்பது போன்ற கருத்துகள்கூட சமூக வலைதளங்களில் வலம்வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்த இளைஞர்கள் சிலர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்தக் கூட்டத்தை நடத்தவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

என்ற குறளுடன் மிக நீண்ட பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார் கட்ஜு.

``இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, எந்த ஆயுதமும் இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், நிர்வாகத்தின் அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவிருந்தது. தமிழகம் முழுவதிலுமிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கு பெற இருந்த நிலையில், ஒய்.எம்.சி.ஏ நிர்வாகத்திடம் அனுமதியை ரத்து செய்ய காவல்துறை கட்டாயப்படுத்தியுள்ளது. இந்தியக் குடிமக்களாகிய இந்த இளைஞர்களின் அடிப்படை உரிமைகளைத் தமிழகக் காவல்துறை பறித்துள்ளதாக அறிகிறேன். `இது சட்டத்துக்குப் புறம்பானது. தமிழக இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய நடவடிக்கைகளைத் தமிழகக் காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று எச்சரிக்கிறேன். மீறினால், சட்டபூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்த் தோழன் விருது
தமிழ்த் தோழன் விருது
fb/@Markandeykatju

அந்தச் சமயத்தில் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் மார்க்கண்டேய கட்ஜு. அங்கு அட்லாண்டாவில் `Save TamilNadu Farmers' என்ற தலைப்பிலும், அட்லாண்டா தமிழ் மக்கள் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு உரையாற்றினார் கட்ஜு.

அந்த நிகழ்வின்போது, அட்லாண்டா தமிழ்ச் சங்கம் கட்ஜுவுக்கு `தமிழ்த் தோழன்' விருது வழங்கி கௌரவித்தது.

இந்த அமெரிக்க நிகழ்வுகளிலெல்லாம் தான் கலந்துகொள்ளப் போகும் செய்தியைக்கூடத் தமிழிலேயே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கட்ஜு. அந்தப் பதிவிலும் கடைசி வரியில் `நானும் ஒரு தமிழன்' என்று குறிப்பிட்டிருந்தார் கட்ஜு.

டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளுக்கு, ``நீதி கிடைக்கும் வரை காந்திவழியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்'' என்று தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார் கட்ஜு.

டெல்லி:  போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்!
டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்!
அதன்பின் ஒரு ஃபேஸ்புக் பதிவில் ``எனக்குப் பிடித்த தமிழ்ப் பாடல், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்தபோது (1967-68) அர்த்தமே தெரியாமல் இந்தப் பாட்டையே அடிக்கடி பாடிக் கொண்டிருப்பேன்" என்று சிவாஜி கணேசன் நடித்த `முத்துக்களோ கண்கள்' என்ற பாடலின் யூடியூப் லிங்க்கைப் பகிர்ந்திருந்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு வரை தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் கட்ஜு.

`இந்தியாவுக்கே தலைமை தாங்கும் பண்பு தமிழர்களிடத்தில் உண்டு' என்று சொன்னவர், `நானும் ஒரு தமிழன்' என்றவர், இப்போது `தமிழர்கள் ஏன் சினம்கொண்டவர்களாக உள்ளார்கள்?’ என்று கேள்வியெழுப்பியிருப்பது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது கட்ஜுவின் கொள்கையாக இருந்துவருகிறது. சமூக வலைதளங்களில் தமிழ் மொழியில் பதிவிடுவது, தமிழர்களுக்கு ஆதரவாக இயங்குவது என்பது போன்றவற்றையும் கட்ஜு தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். ஆனால், `இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கட்ஜு சொன்ன கருத்துக்குத் தமிழர்கள் மத்தியிலிருந்து அதிக எதிர்ப்புகள் வந்த காரணத்தால், நீண்டநாள்களாக ஆதரித்துவந்த தமிழர்களிடத்தில் கட்ஜுவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதேபோல நீண்டநாள்களாக ஆதரித்து வந்தவர் திடீரென தமிழர்களை `சினம்கொண்டவர்கள்’ என்று கூறியது தமிழர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் மீண்டும் நேற்று முன் தினம் இரவு `நானும் ஒரு தமிழர். தமிழர் வாழ்க’ என்றொரு பதிவைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார் கட்ஜு.

Naanum oru Tamizhar Tamizhar Vaazhiga

Posted by Markandey Katju on Tuesday, August 11, 2020

இதைத் தொடர்ந்து இன்றும், `நிறைய தமிழர்கள் என்னை ஆதரிக்கிறார்கள்’ என்று சொல்லி, தனக்கு ஆதரவாக வந்த தமிழர்களின் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டுவருகிறார் மார்க்கண்டேய கட்ஜு. அவற்றில் ஒரு பதிவில்...

தமிழர்கள் புத்திசாலிகள். அவர்களைச் சில அரசியல் கட்சிகள் முட்டாள்களாக வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் இந்தி கற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டனர். ஆனால், இப்போது தமிழர்கள் பலரும் தங்கள் தவறுகளை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். என் கருத்துக்கு ஆதரவாகத் தமிழர்கள் பலரும் எனக்கு மெசேஜ் செய்துவருகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மார்க்கண்டேய கட்ஜு

மார்க்கண்டேய கட்ஜுவின் இந்தக் கருத்துக்கு மீண்டும் எதிர்க் கருத்துகள் வரத் தொடங்கியுள்ளன. `இந்தித் திணிப்பு இல்லை என்கிறீர்கள். தேவையென்றால் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். பிறகு மீண்டும் மீண்டும் ஏன் இதே கருத்தை முன்வைத்துப் பதிவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்’ என்று பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

`இந்தியும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்களின் ஆதரவும் வேண்டும்’ என்ற காரணத்தால்தான் தொடர்ந்து இந்த விஷயத்தில் 25-க்கும் மேற்பட்ட கருத்துகளைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார் மார்க்கண்டேய கட்ஜு’ என்று நெட்டிசன்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த சீரியஸ் விவாதங்களுக்கு இடையே சிலர் கட்ஜூவின் `இந்தி திணிப்பு' கருத்தையே நாசூக்காக கலாய்க்கும் விதமான பதிவுகளையும் அவருக்கு மெசேஜ் செய்ய, அதையும் அப்பாவியாக ஷேர் செய்துகொண்டிருக்கிறார் கட்ஜூ. இதனால், முதலில் `புரட்சிகரமாகப்' போய்க்கொண்டிருந்த கட்ஜூவின் டைம்லைன் இப்போது, தமிழர்கள் டைம்பாஸ் செய்யும் இடமாகவே மாறியிருக்கிறது.

இன்னும் இது தொடர்பாக கட்ஜு எத்தனை பதிவுகளைப் பகிரப் போகிறார் என்பதையும், அதற்கு தமிழ் நெட்டிசன்களின் பதில் கருத்து என்னவாக இருக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.