Published:Updated:

`தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு சிறப்புக்காட்சி அனுமதி கிடையாது!'- அமைச்சர் கடம்பூர் ராஜு

``தீபாவளியன்று வெளியாகும் `பிகில்' உள்ளிட்ட எந்தத் திரைப்படத்துக்கும் சிறப்புக் காட்சி ஒளிபரப்ப அனுமதி வழங்கவில்லை. விதியை மீறி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி ரூ.39 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள `பிகில்' திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ``தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள `பிகில்' உள்ளிட்ட எந்தத் திரைப்படத்துக்கும் சிறப்புக்காட்சி ஒளிபரப்ப அரசு அனுமதி அளிக்கவில்லை.

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

அதை மீறி, சிறப்புக் காட்சிகள் எனச் சொல்லி அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது. அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், ``இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது, அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றனர்.

சிங்கப்பெண்களுக்குச் சிக்கல், நண்பேன்டா ராசி! `பிகில்' ஸ்கூப் #SneakPeek #MovieLine

அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற காரணத்தினால்தான் மூத்த தலைவர்கள் அங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இது முத்தரசனுக்குத் தெரியாதா..? தெரியவில்லை என்றால், அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பருவகால மாற்றத்தினால் தொற்று நோய்கள் வருவது இயற்கை. அதை அரசு எவ்வாறு சமாளிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். தொற்று நோய்கள் வராமல் தடுப்பது நம் கையில் இல்லை.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பொய்யான வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், தற்போது அது மக்களுக்குத் தெரிந்துவிட்டது. நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றும். யார் அதிகம் செலவு செய்தார்கள் என்பதை அங்குள்ள மக்களிடம் கேட்டாலே தெரியும். காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி பொய்யான தகவலைக் கூறி வருகிறார். நாங்குநேரி தொகுதியில் அதிக செலவு செய்தது காங்கிரஸ் கட்சியினர்தான்” என்றார்.