Published:Updated:

`ஜெ., முதல்வராக இருந்தபோது..!’ - `நோபல்’ அபிஜித் -க்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு?

நோபல் பரிசு வென்ற அபிஜித் மற்றும் எஸ்தர் டஃப்லோ
நோபல் பரிசு வென்ற அபிஜித் மற்றும் எஸ்தர் டஃப்லோ

''உலகின் இரண்டு அற்புதமான மூளைகளுடன் இணைந்து செயல்படப் போகிறோம். நாம் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் இனிமேல் சிறப்பானதாக இருக்கும்''

பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் டஃப்லோ ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற அபிஜித் பானர்ஜி, அவரின் மனைவி எஸ்தர் டஃப்லோ ஆகியோர் இணைந்து Abdul Latif Jameel Poverty Action Lab என்ற அமைப்பை நிறுவியுள்ளனர். உலகம் முழுக்க ஏழ்மையைக் குறைக்கும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, இந்த அமைப்புடன் தமிழக அரசு, ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இந்த அமைப்புடன் ஒப்பந்தம் செய்தார். இதற்காக, எஸ்தர் டஃப்லோ சென்னை வந்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

அபிஜித் பானர்ஜி
அபிஜித் பானர்ஜி

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் சிறப்பான முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்து அதனால், ஏற்பட்ட சாதக, பாதக அம்சங்களை அரசுக்கு எடுத்துக் கூறுவது இந்த அமைப்பின் முக்கியப் பணி. புதிய திட்டங்களைத் தீட்டுவது, புதிய கொள்கைகளை வகுப்பது போன்ற அரசின் ஒவ்வொரு பணிக்கும் உறுதுணையாக இந்த அமைப்பு செயல்படுகிறது.

அபிஜித் பானர்ஜியின் Abdul Latif Jameel Poverty Action Lab- அமைப்பு தமிழக அரசின் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலம், வீட்டுவசதித் துறை, ஊரகத்துறை, சமூகநலத் துறை, சத்துணவு, வரிவிதிப்புத் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. மேற்கண்ட துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசு ரூ.23 கோடி மதிப்பீட்டில் இந்த அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஜே- பால் அமைப்பு
ஜே- பால் அமைப்பு

தமிழகத்தில் ஏழ்மையைக் குறைக்கும் வகையில் இந்த அமைப்பு தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் நிலவும் ஒவ்வொரு பிரச்னையையும் அறிவியல்பூர்வமாக அணுகி இப்படித் திட்டங்கள் வகுத்து, அமல்படுத்தப்பட்டால் வெற்றி கிடைக்கும் என்ற வரைவறிக்கையை அரசுக்கு இந்த அமைப்பு அளிக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டங்கள், கொள்கைகள் வகுக்கப்படும்.

நிதித்துறைச் செயலர் எஸ். கிருஷ்ணன், ``உலகின் இரண்டு அற்புதமான மூளைகளுடன் இணைந்து செயல்படப் போகிறோம். நாம் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் இனிமேல் சிறப்பானதாக இருக்கும்'' என்று தெரிவித்திருந்தார்.

பின் செல்ல