Published:Updated:

அமைதியோ அமைதியில் அமைச்சர்கள் இல்லம்... செயலற்றிருக்கும் தலைமைச் செயலகம்!

அமைச்சர்கள் இல்லம்...  தலைமைச் செயலகம்!
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர்கள் இல்லம்... தலைமைச் செயலகம்!

தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அலுவலகம் மட்டுமே தினமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது

அமைதியோ அமைதியில் அமைச்சர்கள் இல்லம்... செயலற்றிருக்கும் தலைமைச் செயலகம்!

தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அலுவலகம் மட்டுமே தினமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது

Published:Updated:
அமைச்சர்கள் இல்லம்...  தலைமைச் செயலகம்!
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர்கள் இல்லம்... தலைமைச் செயலகம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளும் காத்துக்கிடக்கின்றன. இந்தச் சூழலில், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன, அவர்கள் தலைநகரத்தில் இருக்கிறார்களா... இல்லையா என்பதை அறிய ஒரு ரவுண்டு வந்தோம்.

வண்டியைத் தட்டிக்கொண்டு கிரீன்வேஸ் சாலை நோக்கிப் பயணித்தோம். லாக்டௌன் போட்டதுபோல சாலையே வெறிச்சோடிக் கிடந்தது. முதல்வர் இல்லம் செல்லும் நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் பேச்சுக்கொடுத்தோம். ‘‘ஏப்ரல் 10-ம் தேதி காலை சென்னை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து இங்கேதான் தங்கியிருக்கிறார். ஏப்ரல் 18-ம் தேதி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 20-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி இல்லத்தில் ஓய்விலிருக்கிறார். சிகிச்சை பெற்றிருக்கும் முதல்வரைப் பார்ப்பதற்காக அமைச்சர் தங்கமணி மட்டுமே வந்திருந்தார். மற்றபடி எந்த அமைச்சரும் நேரில் வரவில்லை. ஏப்ரல் 21-ம் தேதி சென்னை வந்த ஓ.பி.எஸ்., முதல்வரை நேரில் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்’’ என்றார்கள்.

அமைதியோ அமைதியில் அமைச்சர்கள் இல்லம்... செயலற்றிருக்கும் தலைமைச் செயலகம்!

முதல்வர் இல்லத்திலிருந்து கிளம்பி மற்ற அமைச்சர்கள் இல்லங்கள் அமைந்திருக்கும் பகுதிகளுக்கு விசிட் அடித்தோம். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கே.பி.அன்பழகன் ஆகியோர் இல்லங்களில் இரண்டு, மூன்று கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால், அமைச்சர்கள் இல்லை. விசாரித்தபோது, ‘‘சொந்த வேலை காரணமாக சென்னை வந்திருக்கும் அமைச்சர்களின் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஊருக்குக் கிளம்புவதற்கு முன் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்வதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்’’ என்றார் அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவர்.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் இல்லங்களில் அமைதியோ அமைதி!

டி.ஜி.தினகரன் சாலையில் அமைந்திருக்கும் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், கே.சி.வீரமணி, பாஸ்கரன் மற்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இல்லங்களைச் சுற்றினோம். காவலுக்குக் காவலர்கள் இருந்தார்களேயொழிய, அமைச்சர்கள் யாரும் அங்கில்லை. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் மணிகண்டன் இன்னும் அரசு இல்லத்தை ஒப்படைக்கவில்லை என்பதுதான் இதில் வேடிக்கை.

அமைச்சர்கள் ஏன் வருவதில்லை என அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரித்தோம்... “ஏப்ரல் 10-ம் தேதி சென்னை வந்த முதல்வர் எடப்பாடி அமைச்சர்களை வந்து தன்னை பார்க்கச் சொல்லியிருந்ததால், துணை முதல்வரைத் தவிர மற்ற அனைவரும் ஆஜராகியிருந்தார்கள். அதன் பிறகு அத்தனை பேரும் மீண்டும் பேக்கப் ஆகிவிட்டனர். சென்னையில் நாள்தோறும் கொரோனா தொற்று ஏறிக்கொண்டே செல்வதாலும், தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்குமோ என்ற பயத்தாலும் ஒரு சிலர் சென்னை வரத் தயங்குகிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏப்ரல் 20-ம் தேதி டி.எம்.எஸ்-ஸில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு இரவு தங்குவதற்குக்கூட அவரின் இல்லத்துக்கு வரவில்லை.

அமைதியோ அமைதியில் அமைச்சர்கள் இல்லம்... செயலற்றிருக்கும் தலைமைச் செயலகம்!

செல்லூர் ராஜூ குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றிருக்கிறார். அமைச்சர் செங்கோட்டையனும் ஆர்.பி.உதயகுமாரும் சென்னை வந்தால், எம்.எல்.ஏ ஹாஸ்டலில் மட்டுமே தங்குவார்கள். அவர்களும்கூட வரவில்லை’’ என்றார்கள்.

அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்று அமைச்சர்களின் அலுவலகங்களை நோட்டமிட்டோம். அமைச்சர்களின் உதவியாளர்கள்கூட இல்லாமல் அலுவலகங்கள் பூட்டப்பட்டுக்கிடந்தன. பழைய கட்டடத்தில் இருக்கும் தலைமைச் செயலாளர் அறை மட்டும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. கொரோனா ஆய்வு உள்ளிட்ட பணிகள் காரணமாக அவர் மட்டும் வந்து செல்கிறாராம்.

அங்கிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் சென்று அங்கு பணியிலிருந்த அலுவலக உதவியாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தினமும் வந்து, தலைமைச் செயலாளரைச் சந்தித்துவிட்டுச் சென்றுவிடுகிறார். இது தவிர்த்து, வேளாண்மை, வீட்டுவசதி, உள்ளாட்சி, பணியாளர் நலன் உள்ளிட்ட சில முக்கியமான துறைகளின் செயலாளர்கள் அவ்வப்போது வந்து செல்கிறார்கள். அமைச்சர்கள் வருவதில்லை என்பதால், மற்ற துறைகளின் முதன்மைச் செயலாளர்களும் வருவதில்லை. இதனால், துறைசார்ந்த ஆய்வுக் கூட்டம் எதுவும் நடப்பதில்லை.

அமைதியோ அமைதியில் அமைச்சர்கள் இல்லம்... செயலற்றிருக்கும் தலைமைச் செயலகம்!

மற்றபடி, செயலாளர்களுக்குக் கீழ் பணிபுரியும் உதவி, கூடுதல், துணை நிலையிலுள்ள அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் மட்டுமே தினமும் வந்து சென்றுகொண்டிருக்கிறோம். அதிகாரிகள் வருவதில்லை என்பதால், அவர்களை அழைத்துச் செல்லும் லிஃப்ட் ஆப்பரேட்டர்கூட வரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வாக்கு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட காலத்தில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படாது என்பதாலும், கொரோனா தொற்றுப் பரவலாலும் ஆதிகாரிகள் யாரும் வருவதில்லை. இதனால், தலைமைச் செயலகமேகூட, சில சமயம் வெறிச்சோடிப் போய்விடுகிறது” என்றனர்.

தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அலுவலகம் மட்டுமே தினமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. மே 2-ம் தேதி வரை இயங்கித்தானே ஆக வேண்டும்!