Published:Updated:

`புதிதாக 6 கேள்விகள் எதற்கு... அமித் ஷா ஏன் பதில் சொல்ல மறுக்கிறார்?’ - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் வர வேண்டும் என்பதைத் தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்களின் போராட்டம் குறித்து பேசியிருந்த ஆளும் தரப்பு, `குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு சென்று போராட்டத்தைத் தூண்டிவிடுவதாக’ குற்றம்சாட்டியிருந்தது. டெல்லியில் நடக்கும் மாணவர்களின் போராட்டங்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு அவர்களுடன் உரையாடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தைக் கையிலெடுத்த சமூகசேவகர்கள் மீது மாநில காவல்துறை வழக்கு பதிந்தது. பிரியங்கா அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். காங்கிரஸ் கட்சிதான் போராட்டத்தைத் தூண்டிவிடுதாக பா.ஜ.க தரப்பு குற்றச்சாட்டி வருகிறது.

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பிரியங்கா காந்தி
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பிரியங்கா காந்தி

பா.ஜ.க-வின் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மறுத்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துடனான நேர்காணலில் காங்கிரஸ் கட்சி நிலவரம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அவற்றுக்கு சிதம்பரம் பதிலளித்துள்ளார்.

`குடியுரிமை கேட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டுமா?’ - டெல்லியில் கொதித்த பிரியங்கா காந்தி

``கடந்த காலங்களைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். நாங்கள் என்ன செய்தோம், நாங்கள் என்ன செய்யவில்லை எனப் பாருங்கள். காங்கிரஸ் ஆட்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேடு மட்டும்தான் தயாரிக்கப்பட்டது. அந்தப் பணி முடிவடைந்ததும் நாங்கள் அதை அதற்கு மேல் எடுத்துச் செல்லவில்லை.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

நாங்கள் குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டு வரவில்லை. நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. ஆனால், இன்று நிலைமையே வேறு மாதிரியாக இருக்கிறது. பா.ஜ.க அரசு அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டு வந்துவிட்டனர். தேசிய மக்கள்தொகை பதிவேடுடன் நேரடி தொடர்புடையதே தேசிய குடிமக்கள் பதிவேடு. மக்கள் தொகை பதிவேட்டை மட்டும்தான் தயாரிக்கிறோம், என்.ஆர்.சி-யை அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் சொல்ல மறுக்கிறார்” எனக் கேள்வி எழுப்பினார்.

`என்.ஆர்.சிக்கும் என்.பி.ஆருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; பிரதமர் சொன்னது சரிதான்!' - அமித் ஷா

``தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்.பி.ஆர் என்பது மக்கள் தொகையைப் பதிவு செய்வது. என்.ஆர்.சி என்பது குடியுரிமையைப் பதிவு செய்வது” என உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த விளக்கம் குறித்து கேட்கப்பட்டது.

``தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயார் செய்திருந்தபோது 15 கேள்விகள் கேட்கப்பட்டன. இப்போது இவர்கள் புதிதாக 6 கேள்விகளை முன்வைக்கிறார்கள். கடைசியாக நீங்கள் எங்கு வசித்தீர்கள்? உங்களது அப்பா, அம்மா எங்கு பிறந்தார்கள், ஓட்டுநர் உரிமம் எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் கேட்கிறார்கள். இவற்றையெல்லாம் எதற்காகக் கேட்கிறார்கள்” என்றார்.

அமித் ஷா
அமித் ஷா
ANI

மேலும், ``காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா சிறப்பாக செயலாற்றி வருகிறார். அந்தப் பதவில் இருந்து விலகுவது குறித்து அவர்தான் முடிவு செய்வார். அவர் அப்படியொரு முடிவை எடுக்கும்போது காங்கிரஸ் கட்சி புதிய தலைவரைத் தேர்வு செய்யும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் வர வேண்டும் என்பதைத் தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வெளியில் இருக்கும் யாரோ, ஊடகத்தினரோ அதை முடிவு செய்ய முடியாது. இந்தக் கட்சிக்குத் தலைவராக யாரைக் கொண்டு வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ அவர்களைத்தான் நாங்கள் தேர்வு செய்வோம்” என்றார். ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்று கேட்கப்பட்டது. ``அது குறித்து நான் எதுவும் பேச மாட்டேன். எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு