Published:Updated:

மூன்றில் ஒருவர் பள்ளிக்கு செல்வதில்லை! - பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமிகளின் நிலை

2017-18-ம் ஆண்டில் டெல்லியில் மட்டும் சுமார் 932 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 849 வழக்குகளில் சிறுமிகளும், 83 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்திய தலைநகரான டெல்லியில் உள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுவர், சிறுமிகளிடம் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளன.

வன்கொடுமை
வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபின் மூன்றில் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்வதில்லை எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லியில் மட்டும், சுமார் 94 சிறுமிகள் மற்றும் 6 சிறுவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதன் முடிவில்தான் இப்படி ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தைகளில் 33 சதவிகிதம் பேர் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளதாகவும், 9 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே மீண்டும் பள்ளிக்குச் செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவிகிதத்தினருக்கு மட்டுமே 30,000 முதல் 50,000 வரை அரசு இழப்பீடு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

நீண்ட நாள்களுக்கு இழுத்தடிக்கப்படும் சட்டமுறை, பாதுகாப்பு மற்றும் உடல்நலக் குறைபாடு, சமூக களங்கம் ஆகியவைதான் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 55% -க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்ப பல்வேறு விதமான சவால்களை சந்திக்கின்றனர். 47% குடும்பங்கள் பாதுகாப்பின்மை காரணமாக தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை.

`குழந்தைகளுக்குத் தேவையான நலன், சட்டம் மற்றும் பிற சேவைகளை அணுகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் போதிய திறன் இல்லை என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. குழந்தைகளின் இருண்ட சூழ்நிலையை மாற்றி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து சீர்திருத்தம் கொண்டு வரவேண்டியது அவசியம்” என டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜோதி தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள்
சிறுவர்கள்

இதுபற்றி பேசியுள்ள டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ரமேஷ் நேகி கூறும்போது, ``பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் மன ரீதியில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அவர்கள் உடல்ரீதியாகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அரசு வழங்கும் இழப்பீடு பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவரின் குடும்பத்தினரின் மன ரீதியிலான பாதிப்பை சரிசெய்யாது” எனக் கூறியுள்ளார். அந்த ஆணையம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி கடந்த 2017-18-ம் ஆண்டில்  டெல்லியில் மட்டும் சுமார் 932 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 849 வழக்குகளில் சிறுமிகளும், 83 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.